Published:Updated:

மும்பை: ஃபேஸ்புக் நட்பு; ஆபாச வீடியோ! - எம்.பி., எம்.எல்.ஏ-க்களை மிரட்டிப் பணம் பறித்த கும்பல்

மும்பை போலீஸ்
மும்பை போலீஸ்

ஆபாச வீடியோக்களைக் காட்டி எம்.பி., எம்.எல்.ஏ-க்களிடம் பணம் பறித்த கும்பல் கைதுசெய்யப்பட்டிருக்கிறது.

மும்பையில் அரசியல்வாதிகள், முக்கியப் பிரமுகர்களை ஒரு கும்பல் மிரட்டிப் பணம் பறித்துவருவதாக போலீஸாருக்கு அடிக்கடி புகார்கள் வந்தவண்ணம் இருந்தன. அவற்றின் அடிப்படையில் போலீஸார் விசாரணையைத் தொடங்கினர். விசாரணையில் ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் எம்.எல்.ஏ., எம்.பி-க்கள் போன்ற முக்கியப் பிரமுகர்களை சிக்கவைத்து ஆபாச படம் எடுத்து, அதன் மூலம் மிரட்டிப் பணம் பறித்துவந்திருக்கிறார்கள். இந்த மோசடி தொடர்பாக ஹரியானா, உத்தரப்பிரதேசம், ராஜஸ்தானைச் சேர்ந்த மூன்று பேர் கும்பல் கைதுசெய்யப்பட்டிருக்கிறது.

ஃபேஸ்புக்
ஃபேஸ்புக்
Representational Image

இந்தக் கும்பலிடம் விசாரித்தபோது அதிர்ச்சித் தகவல் கிடைத்தது. இந்தக் கும்பல் முதலில் பெண்கள் பெயரில் சமூக வலைதளத்தில் போலி ஐடி-யை உருவாக்குவார்கள். அதன் பிறகு பார்க்க மிகவும் அழகாக இருக்கும் பெண்களின் படத்தை அதில் பதிவேற்றம் செய்வவார்கள். தொடர்ந்து யாரை மிரட்டி பணம் பறிக்கவேண்டும் என்பது குறித்து முடிவு செய்துகொண்டு, அந்த நபருக்கு சமூக வலைதளத்தில் ஃபிரெண்ட் ரெக்வெஸ்ட் அனுப்புவார்கள். அந்த நபர் ஏற்றுக்கொண்டால், அவரிடம் பெண் போன்றே சாட்டிங் செய்வார்கள்.

சில நாள்கள் கழித்து ஆபாசமாக சாட்டிங் செய்யத் தொடங்குவார்கள். இதிலும், குறிப்பிட்ட நபர் சிக்கிக்கொண்டால் உடனே இந்தக் கும்பல் அடுத்த அஸ்திரத்தை எடுப்பார்கள். அதாவது, வீடியோ காலில் வந்து ஆபாச வீடியோவை காட்டுவார்கள். அதைப் பார்க்கும் நபர் ஆபாசப் படத்தை பார்த்துவிட்டு ஏதாவது ஆபாசச் செயலில் ஈடுபட்டால், உடனே அதை வீடியோவாகப் பதிவு செய்துகொள்வார்கள். வீடியோவாகப் பதிவு செய்தவற்றை எடிட்டிங் செய்து மீண்டும் சம்பந்தப்பட்ட நபருக்கு அனுப்பி, சிறிய தொகையைக் கூறி அதைக் கொடுக்க வேண்டும் என்றும், அப்படிக் கொடுக்கவில்லையெனில் இந்த வீடியோவை சமூக வலைதளத்தில் வெளியிடுவேன் என்றும் மிரட்டுவார்கள்.

அப்படி மிரட்டியதும் வீடியோவிலிருக்கும் நபர் கேட்ட பணத்தை கொடுத்துவிட்டால், அந்த நபரிடம் அடுத்தடுத்து பணம் கேட்டு மிரட்டுவது இந்தக் கும்பலின் வழக்கம். இதில் பாதிக்கப்பட்ட பலர் தொடர்ந்து போலீஸில் புகார் செய்தனர். அதன் அடிப்படையில் நடத்திய விசாரணயில் மேற்கண்ட தகவல்கள் கிடைத்தன. இது குறித்து போலீஸ் இணை கமிஷனர் மிலிந்த் கூறுகையில், ``முக்கியப் பிரமுகர்களை மிரட்டி, பணம் பறிக்க பயன்படுத்தப்பட்ட 175 ஃபேஸ்புக் கணக்குகள் தடை செய்யப்பட்டுள்ளன. இது தவிர பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து பணம் வாங்கப் பயன்படுத்தப்பட்ட 58 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன’’ என்று தெரிவித்தார். இந்த மோசடியில் மேலும் எத்தனை பேருக்கு தொடர்பு இருக்கிறது என்பது குறித்து போலீஸார் விசாரித்துவருகின்றனர்.

மும்பை விடுதி அறையில் சடலமாகக் கிடந்த எம்.பி! - கடிதத்தைக் கைப்பற்றிய போலீஸ்

இதற்கிடையே இதே போன்ற முறையைப் பயன்படுத்தி மும்பை தொழிலதிபரிடம் ரூ.50,000 மிரட்டிப் பணம் பறிக்க முயன்ற நபர் கைதுசெய்யப்பட்டிருக்கிறார். பெண் போலவேஎ ஃபேஸ்புக்கில் தெற்கு மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவருக்கு ஆக்ராவை சேர்ந்த அனுப்சிங் (23) என்ற நபர் ஃபிரெண்ட் ரெக்வெஸ்ட் அனுப்பியிருக்கிறார். தொழிலதிபர் அதை ஏற்றவுடன் சில நாள்களுக்கு மேற்கண்ட அதே முறையில் தொழிலதிபரை மிரட்டி ரூ.50,000 பணம் பறிக்க முயன்றார் அனுப் என்ற அந்த நபர். ஆரம்பத்தில் தொழிலதிபர் 5,000 ரூபாயை மட்டும் ஆன்லைனில் அனுப்பிவிட்டு தன்னிடம் பணம் இல்லை என்றும், பாக்கியை தவணை முறையில் அனுப்புவதாகவும் தெரிவித்தார். அனுப் அதை ஏற்றுக்கொண்டார். ஆனால், தொழிலதிபர் இது குறித்து பின்னர் போலீஸில் புகார் செய்தார். போலீஸார் விசாரணை நடத்தி அனுப்பை ஆக்ராவில் கைதுசெய்தனர்.

அடுத்த கட்டுரைக்கு