Published:Updated:

நடுரோட்டில் சென்னை போலீஸைத் தாக்கிய கடத்தல் கும்பல்! - ஆய்வாளருக்கு அதிர்ச்சி கொடுத்த அதிகாரிகள்

காலில் கட்டுடன் கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்
காலில் கட்டுடன் கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்

சென்னை அண்ணாசாலையில் கடத்தல் கும்பலைப் பிடிக்கச் சென்ற போலீஸ் இன்ஸ்பெக்டர் தாக்கப்பட்டார். போலீஸ் பிடியிலிருந்து தப்பிக்க முயன்ற கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்களுக்கு கால், கையில் முறிவு ஏற்பட்டுள்ளது.

சென்னை ராயப்பேட்டை ரெபேரோ தெருவைச் சேர்ந்தவர் சையது இக்பால் (41). இவர் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் அளித்த புகாரில், என்னுடைய நண்பர் பைசுதீன். இவர், மதுரையைச் சேர்ந்த ராஜா உசேன் என்பவரிடம் தொழில் அபிவிருத்தி சம்பந்தமாக 8 மாதங்களுக்கு முன் 10,00,000 ரூபாய் கடனாக வாங்கியிருந்தார். அதற்கு மாதம் 50,000 ரூபாய் வட்டியாகச் செலுத்திவந்தார். இந்தநிலையில் மாதந்தோறும் பணம் செலுத்துவது கடினமாக உள்ளதால் மொத்தப் பணத்தையும் அடுத்த மாதம் கொடுத்துவிடுகிறேன் என்று ராஜா உசேனிடம் பைசுதீன் கூறியிருந்தார். இந்தநிலையில் 10.3.2020 இரவு 9 மணியளவில் ராஜா உசேன், பணம் கேட்டு தகராறு செய்வதாகக் பைசுதீன் கூறினார். உடனடியாக அண்ணாசாலையில் உள்ள பிரபலமான அசைவ உணவகம் அருகே சென்றேன். அங்கு, ராஜா உசேன், அவரின் மகன் முகமது சைபுல்லா மற்றும் 3 பேர் நின்றுகொண்டிருந்தனர்.

கையில் கட்டோடு சிகிச்சை
கையில் கட்டோடு சிகிச்சை

முதலில் என் நண்பரிடம் நல்ல முறையில் பேசிக்கொண்டிருந்த அவர்கள், `எங்க பணத்தையே ஏமாத்தப் பார்க்கிறீயா' என்று அசிங்கமாகப் பேசினார்கள். பின்னர் பைசுதீனை அடித்தனர். நான் அதைத் தடுத்தபோது கத்தியைக் காட்டி கொலை செய்துவிடுவதாக மிரட்டினர். அதைப் பார்த்த நான் உயிருக்குப் பயந்து ஓடினேன். இந்தச் சம்பவத்தைப் பார்த்த வியாபாரிகள் கடையை மூடிவிட்டனர். பின்னர் பைசுதீனை கத்தி முனையில் அந்தக் கும்பல் கடத்திச் சென்றது. எனவே, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்" என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்தப் புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் கவியரசு, இந்திய தண்டனைச் சட்டம் 147, 148, 341, 294 (பி), 323, 427, 336, 363, 506(2) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்தார்.

பைசுதீன், காரில் கடத்தப்பட்ட சம்பவம் குறித்து காவல் கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாகத் திருவல்லிக்கேணி இன்ஸ்பெக்டர்கள் மோகன்தாஸ், சீத்தாராம் மற்றும் போலீஸார் அந்தக் காரை பின்தொடர்ந்தனர். ராயப்பேட்டை மணிக்கூண்டு அருகே போலீஸார் கடத்தல் காரை மடக்கினர். அப்போது கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்களுக்கும் போலீஸாருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. நடுரோட்டில் போலீஸாரும் கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்களும் கட்டிப்புரண்டு சண்டைப் போட்டனர். இதில் இன்ஸ்பெக்டர் மோகன்தாஸ் படுகாயமடைந்தார். இருப்பினும் கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்களை போலீஸார் மடக்கிப்பிடித்து பைசுதீனை மீட்டனர்.

தமிழகத்தை பின் தொடர்கிறதா புதுச்சேரி காவல்துறை?- போலீஸை தாக்கிய ரவுடிகளுக்கு மாவுக்கட்டு!
ராஜா உசேன்
ராஜா உசேன்

இந்தச் சம்பவம் குறித்து திருவல்லிக்கேணி போலீஸார் கூறுகையில், ``பைசுதீன் என்பவர் காரில் கடத்தப்பட்ட சம்பவம் குறித்து தகவல் கிடைத்தும், அந்தக் காரை பின்தொடர்ந்தோம். அப்போது கடத்தல் கும்பலைச் சேர்ந்த ராஜா உசேன், அவரின் மகன் முகமது சைபுல்லா, திருச்சியைச் சேர்ந்த ரஹ்மதுல்லாஹ், ஆசிப் கான், தவ்ஃபிக் ஆகியோரை மடக்கிப்பிடித்தோம். ராஜா உசேன் மீது காவல் நிலையத்தில் வழக்குகள் நிலுவையில் உள்ளன.

கடத்தல் கும்பலுடன் நடந்தச் சம்பவத்தில் திருவல்லிக்கேணி சட்டம் ஒழுங்கு பிரிவு இன்ஸ்பெக்டர் மோகன்தாஸுக்குக் காயம் ஏற்பட்டது. அதனால் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. போலீஸ் பிடியிலிருந்து தப்பி ஓட முயன்ற கடத்தல் கும்பலைச் சேர்ந்த இருவரில் ஒருவருக்கு காலில் முறிவு ஏற்பட்டுள்ளது. இன்னொருவருக்கு கையில் முறிவு ஏற்பட்டுள்ளது. அதனால் இருவரையும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்துள்ளோம். கைதானவர்களை வேலூர் சிறையில் அடைத்துள்ளோம்" என்றனர்.

கடத்தல் கும்பலுடன் சண்டை போட்டு பைசுதீனை மீட்ட இன்ஸ்பெக்டர் மோகன்தாஸ், வேறு ஒரு குற்றச்சாட்டுக்காக இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

இதுகுறித்து போலீஸாரிடம் கேட்டபோது, ``சமீபத்தில் நடந்த ஒரு பார்ட்டியில் மோகன்தாஸ் கலந்துகொண்டது தொடர்பான ஆதாரங்கள் உயர் அதிகாரிகளின் கவனத்துக்குச் சென்றன. அதனால்தான் அவர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்" என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு