Published:Updated:

விருதுநகர்: மீன் வியாபாரியைக் கடத்திய கும்பல்; 20 கி.மீ சேஸிங்! - மடக்கிப் பிடித்த போலீஸார்

கோவில்பட்டி மேற்கு காவல் நிலையம்
News
கோவில்பட்டி மேற்கு காவல் நிலையம்

முன் விரோதத்தால் மீன் வியாபாரியை காரில் கடத்தி ரூ.6 லட்சம் பணம் பறிக்க முயன்ற 5 பேர் கும்பலை 20 கி.மீ தூரம் போலீஸார் ஜீப்பில் துரத்தி மடக்கிப் பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டம், சாத்தூர், நேதாஜி நகரைச் சேர்ந்தவர் சிவா. இவர் மீன்கடை நடத்திவருகிறார். கோவில்பட்டி அருகேயுள்ள மந்தித்தோப்புவிலுள்ள தனது தாயைப் பார்ப்பதற்காக கடந்த மூன்று நாள்களுக்கு முன்பு பைக்கில் வந்தார். அப்போது, இரண்டு கார்களில் வந்த ஐந்து பேர்கொண்ட கும்பல், சிவாவின் பைக்கை வழிமறித்து, அவரைத் தாக்கி காரில் கடத்திச் சென்றனர். கோவில்பட்டியிலிருந்து தென்காசி மாவட்டம், குற்றாலத்துக்குச் சென்ற அந்தக் கும்பல், அங்குள்ள இரு லாட்ஜில் சிவாவை அடைத்துவைத்திருக்கிறது. பின்னர், “உன் புருஷனைக் கடத்திவெச்சிருக்கோம். 6 லட்ச ரூபாய் பணம் கொடுத்தாத்தான் அவரை வெளியில விடுவோம்.

கைதுசெய்யப்பட்டவர்கள்
கைதுசெய்யப்பட்டவர்கள்

பணம் தரலேன்னா அவரைக் கொலை செஞ்சு ஆத்துல வீசிடுவோம்” என அந்தக் கும்பலில் இருந்த ஒருவர் போனில் பேசியிருக்கிறார். இதையடுத்து மல்லிகா, கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். உடனேமாவட்ட எஸ்.பி ஜெயக்குமாரின் உத்தரவின் பேரில் கோவில்பட்டி டி.எஸ்.பி உதயசூரியன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இதற்கிடையில், ”பணம் தயாராகி விட்டதா?” என இரண்டு முறை அந்தக் கும்பல் போனில் மல்லிகாவிடம் கேட்டிருக்கிறது. அவரும் போலீஸாரின் ஆலோசனைப்படி ``பணத்தைத் தயார் பண்ணிட்டேன். எங்கே வரணும்?” என போனில் கூறியுள்ளார். கயத்தாருவிலுள்ள ஒரு பிரபலமான ஹோட்டலின் பெயரைச் சொல்லி அங்கு பணத்துடன் வருமாறு அந்தக் கும்பல் கூறியது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இதையடுத்து அந்தக் கும்பல் சொன்ன நேரத்தில், சொன்ன இடத்தில் ஒரு சூட்கேஸுடன் மல்லிகா நின்றார். கடத்தப்பட்ட சிவாவுடன் இரு கார்களில் அந்தக் கும்பல் வந்தது. அப்போது காரிலிருந்து இறங்கிய ஒருவரிடம் சூட்கேஸைக் கொடுத்தார் மல்லிகா. அப்போது மறைந்திருந்த தனிப்படை போலீஸார், இரண்டு கார்களையும் சுற்றிவளைத்தனர். போலீஸாரைப் பார்த்த பயத்தில் சிவாவைக் கீழே இறக்கி விட்டுவிட்டு இரண்டு கார்களும் கோவில்பட்டி நோக்கிப் பறந்தன.

கோவில்பட்டி மேற்கு காவல் நிலையம்
கோவில்பட்டி மேற்கு காவல் நிலையம்

இருப்பினும் அந்த இரண்டு கார்களையும் 20 கி.மீ தூரம் ஜீப்பில் விரட்டிச் சென்று பெத்தேல் என்ற இடத்தில் மடக்கினர். காரை நிறுத்திவிட்டு தப்பியோட முயன்ற ஐந்து பேரையும் போலீஸார் கைதுசெய்தனர்.

போலீஸாரின் விசாரணையில், சிவாவுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்பவருக்கும் ஏற்கெனவே முன் விரோதம் இருந்துள்ளது. இதன் காரணமாக மணிகண்டன் தன் நண்பர்களான ரமேஷ், கருத்தப்பாண்டி, ஏமராஜ், அகஸ்டின்ராஜ் ஆகியோருடன் சேர்ந்து சிவாவைக் கடத்திப் பணம் கேட்டது தெரியவந்துள்ளது. இதையடுத்து அந்த ஐந்து பேரும் கோவில்பட்டி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.