கரூர்: காதல் மனைவி முன்பு வெட்டிக் கொல்லப்பட்ட கணவர்! - இளநீர்க் கடை பயங்கரம்

பைக்கில் வந்த இருவர், இளநீர்க் கடையில் வியாபாரம் செய்துகொண்டிருந்த கிருஷ்ணமூர்த்தியை, அவரது மனைவி ஷஸ்மிதா கணணெதிரிலேயே தலை மற்றும் கைகளில் வெட்டிவிட்டு, பைக்கில் தப்பிச் சென்றுவிட்டனர்.
கரூரில், இளநீர்க் கடையில் வியாபாரம் செய்து வந்தபோது, காதல் மனைவி முன்பு, பைக்கில் வந்த இருவர் கணவரை வெட்டிக் கொலை செய்த சம்பவம், கரூர் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

கரூர், சின்ன ஆண்டான்கோவில் கோவில்மேட்டுத் தெருவைச் சேர்ந்தவர் குணசேகரன். இவர், கரூர் - கோவை சாலையில், இளநீர்க் கடை வைத்து வியாபாரம் செய்துவருகிறார்.
குணசேகரனும், அவருடைய மனைவியும் இளநீர்க் காய்களை மொத்தமாக வாங்குவதற்கு, அதிகாலையில் பொள்ளாச்சிக்கு சென்றுவிட்டனர். இதனால், இளநீர்க் கடையை குணசேகரனின் மகன் கிருஷ்ணமூர்த்தியும் (27), அவருடைய மனைவி ஷஸ்மிதா (23) இருவரும் பார்த்துக்கொண்டனர்.

கிருஷ்ணமூர்த்தி தனது தந்தை நடத்தும் இளநீர்க் கடைக்கு அருகிலேயே, பழஜூஸ் கடை நடத்திவந்தார். அதனால், இரண்டு கடைகளையும் நேற்று அவர் பார்த்துக்கொண்டிருந்திருக்கிறார். இவருக்கும், ஷஸ்மிதாவுக்கும் திருமணம் நடந்து ஆறு மாதங்கள்தான் ஆகின்றன. இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டவர்கள்.
இந்தநிலையில், நேற்று மனைவியோடு கிருஷ்ணமூர்த்தி கடையில் பிஸியாக வியாபாரம் பார்த்துக்கொண்டிருந்தார். அப்போது, பைக்கில் வந்த இருவர், இளநீர்க் கடையில் வியாபாரம் செய்துகொண்டிருந்த கிருஷ்ணமூர்த்தியை, அவருடைய மனைவி ஷஸ்மிதா கண்ணெதிரிலேயே தலை மற்றும் கைகளில் வெட்டிவிட்டு, வந்த வேகத்தில் பைக்கில் தப்பிச் சென்றுவிட்டனர். ரத்த வெள்ளத்தில் கிடந்த கிருஷ்ணமூர்த்தியை அங்கிருந்தவர்கள் மீட்டு, கரூரிலுள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்த்தனர். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி கிருஷ்ணமூர்த்தி உயிரிழந்தார்.

இது குறித்து, கரூர் நகர போலீஸார் வழக்கு பதிவு செய்து, பைக்கில் வந்து கிருஷ்ணமூர்த்தியை வெட்டிக் கொலை செய்துவிட்டுச் சென்ற நபர்கள் யார் என விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். இந்த நிலையில், கிருஷ்ணமூர்த்தி, ஷஸ்மிதாவை காதலித்து திருமணம் செய்ததால், இந்தக் கொலைக்கு காதல் விவகாரம் பின்னணியாக இருக்கலாம் என்ற கோணத்தில் போலீஸார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். ஷஸ்மிதா வீட்டின் எதிர்ப்பை மீறித்தான், கிருஷ்ணமூர்த்தி அவரைத் திருமணம் செய்துகொண்டார் என்று சொல்கிறார்கள். போக்குவரத்து நிறைந்த முக்கியச் சாலையில், பட்டப்பகலில் நடைபெற்ற இந்த கொடூரக் கொலைச் சம்பவம், கரூர் மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.