Published:Updated:

“சத்தம் போட்டா சங்கை அறுத்துடுவோம்!” - நாகை கூட்டுப்பாலியல் கொடூரம்

நாகை கூட்டுப்பாலியல் கொடூரம்
பிரீமியம் ஸ்டோரி
நாகை கூட்டுப்பாலியல் கொடூரம்

‘உங்க அக்காவ நாங்கதான் கெடுத்தோம். அதேமாதிரி உன்னையும் கெடுக்கத்தான் போறோம். உன்னால என்னடி செய்ய முடியும்?’னு சொல்லி அடிக்க வந்தான்.

“சத்தம் போட்டா சங்கை அறுத்துடுவோம்!” - நாகை கூட்டுப்பாலியல் கொடூரம்

‘உங்க அக்காவ நாங்கதான் கெடுத்தோம். அதேமாதிரி உன்னையும் கெடுக்கத்தான் போறோம். உன்னால என்னடி செய்ய முடியும்?’னு சொல்லி அடிக்க வந்தான்.

Published:Updated:
நாகை கூட்டுப்பாலியல் கொடூரம்
பிரீமியம் ஸ்டோரி
நாகை கூட்டுப்பாலியல் கொடூரம்

நாகை மாவட்டத்தில், இரவில் தனியாகத் தெருவில் நடந்து சென்ற பெண்மணியை இரண்டு வாலிபர்கள் பலவந்தப்படுத்தி, விநாயகர் கோயிலில்வைத்துக் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்திருக்கும் சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது!

அந்தப் பெண்மணிக்கு எட்டாவது மற்றும் பத்தாவது படிக்கும் இரண்டு பெண் குழந்தைகள் இருக்கிறார்கள். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கணவரை இழந்தவர், கூலி வேலைக்குச் சென்று பிழைப்பு நடத்திவருகிறார். ஜனவரி 6-ம் தேதி இரவு, அவருக்கு நிகழ்ந்த கொடூரம் நம்மைப் பதைபதைக்கவைக்கிறது.

ஆனந்தராஜ் - அருண்ராஜ்
ஆனந்தராஜ் - அருண்ராஜ்

மருத்துவச் சிகிச்சையிலிருக்கும் அந்தப் பெண்மணி, நடந்த கொடூரத்தின் அதிர்ச்சியிலிருந்து இன்னும் மீளவில்லை. ‘‘அன்னிக்கு வேலை முடிஞ்சு வந்து குளிச்சிட்டு, ராத்திரி ஒன்பது மணியளவுல பக்கத்துத் தெருவுல இருக்குற தங்கச்சி வீட்டுக்குச் சாப்பிட போனேன். புள்ளையார் கோயில்கிட்ட போனப்போ, அங்கே நின்னுக்கிட்டிருந்த ரெண்டு பேரு வந்து பேச்சு கொடுத்தானுங்க. அவனுங்களைக் கண்டுக்காம, வேகமா நடந்தேன். திடீர்னு எம்மேல பாய்ஞ்சு வாயில துணியை வெச்சு அடைச்சு, புள்ளையார் கோயிலுக்குத் தூக்கிட்டுப் போய் என்னோட துணிமணியை பலவந்தமா கழட்டுனானுங்க. அப்பவும், ‘தம்பிகளா உங்களுக்கு நான் அக்கா மாதிரி... என்னையப் போய் கெடுக்கப் பாக்குறீங்களே... இதோ நான் வேலை செஞ்சு சம்பாரிச்ச 1,500 ரூபா பணமிருக்கு. இதை எடுத்துக்கிட்டு என்னை விட்டுடுங்க தம்பி’னு கையெடுத்து கும்பிட்டேன். ‘பணங்காசா முக்கியம்? நாங்க காய்ஞ்சு கெடக்கோம். நீதாண்டி வேணும்’னு சொன்னானுங்க. நான் அழுது சத்தம்போட ஆரம்பிச்சதும், ‘சத்தம் போட்டா சங்கை அறுத்துடுவோம்’னு சொல்லி கண்டபடி அடிக்க ஆரம்பிச்சிட்டானுங்க. ஒருத்தனா இருந்தா சமாளிச்சு தப்பிச்சிடலாம். ரெண்டு முரட்டுப் பசங்க. நான் என்ன பண்ண முடியும்? ராத்திரி ரெண்டு மணி வரை மாறி மாறி கொடுமைப்படுத்துனானுங்க. ‘இதை யாருகிட்டயாவது சொன்னா உன்னை உசிரோட விட மாட்டோம். உன் ரெண்டு பொண்ணுகளையும் நாசப்படுத்திடுவோம்’னு சொல்லிட்டுப் போய்ட்டானுங்க. ஜாக்கெட்டெல்லாம் கிழிஞ்சு போச்சு. என்னை இந்தக் கோலத்துல பாத்தா தங்கச்சி தாங்க மாட்டா... பக்கத்துல தனியா இருக்கும் ஒரு அம்மா வீட்டுக்குப் போய், அவங்ககிட்ட நடந்ததைச் சொல்லிட்டுப் படுத்துட்டேன்’’ என்று விம்மியபடியே அடிபட்ட வீக்கங்களைக் காண்பித்தார் பரிதாபமாக.

“சத்தம் போட்டா சங்கை அறுத்துடுவோம்!” - நாகை கூட்டுப்பாலியல் கொடூரம்

பாதிக்கப்பட்ட பெண்மணியின் தங்கையிடம் பேசினோம். ‘‘விடியக் காலையில என் வீட்டுக்காரருக்கு விஷயம் தெரிஞ்சதும், அக்காவை இப்படி செஞ்சது யாருனு விசாரிச்சாரு. அக்கரைகுளத்தைச் சேர்ந்த குமாரோட மகன் ஆனந்தராஜ், வண்டிப்பேட்டையைச் சேர்ந்த முருகனோட மகன் அப்பாஸ்ங்கிற அருண்ராஜ் ரெண்டு பேரும்தான் இந்தப் படுபாதகத்தைச் செஞ்சவங்கனு தெரிஞ்சுது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த அறிவுங்கிற அறிவழகன் கட்டுப்பாட்டுலதான் அந்தப் பசங்க இருக்குறாங்கனு சொன்னாங்க. அதனால நானும் என் வீட்டுக்காரரும் அறிவுகிட்ட போய் முறையிட்டோம். ‘கஞ்சா போடுற பசங்க. இப்ப யாரு சொன்னாலும் கேட்க மாட்டானுங்க. இதையெல்லாம் பெரிசுபடுத்த வேணாம். நாளைக்குப் பேசி முடிச்சிக்கலாம்’னு அலட்சியமா சொல்லி அனுப்பிட்டாரு.

நாங்க பஞ்சாயத்துல சொன்ன விஷயம் அருண்ராஜுக்குத் தெரிஞ்சு போச்சு. உடனே அவன் எங்க வீட்டுக்கு வந்து, ‘உங்க அக்காவ நாங்கதான் கெடுத்தோம். அதேமாதிரி உன்னையும் கெடுக்கத்தான் போறோம். உன்னால என்னடி செய்ய முடியும்?’னு சொல்லி அடிக்க வந்தான். தடுக்கப்போன என் வீட்டுக்காரரை அடிச்சான். தெருவுல யாரும் உதவிக்கு வரலை. முன்னாள் கவுன்சிலர் கலா அக்கா புருஷன்கிட்ட போன்ல நடந்ததைச் சொன்னேன். அவங்க போலீஸுக்குச் சொல்லவும், ரெண்டு பேரையும் புடிச்சுட்டுப் போனாங்க. போலீஸ் ஸ்டேஷன் வாசல்ல வெச்சு அருண்ராஜ் என்கிட்ட ‘கேஸ் கொடுத்துட்டல்ல... நாலு நாள்ல வெளியே வந்துடுவோம். உங்க அக்காவ செஞ்சா மாதிரி உன்னை செய்யிறமா இல்லையா பாரு’னு சவால்விட்டான்.

அறிவழகன் - முருகவேல்
அறிவழகன் - முருகவேல்

அப்ப ராத்திரி ஒரு மணி இருக்கும். அறிவும், விஜயராகவன்ங்கிற வக்கீலும் இன்ஸ்பெக்டர்கிட்ட ‘இதை நாங்க பேசி முடிச்சிக்கிறோம். பசங்கள அனுப்புங்கன்னு வாதம் பண்ணினாங்க. ஒருகட்டத்துல இன்ஸ்பெக்டர்கிட்ட கொஞ்சம் ராங்கா பேசினாங்க. ‘இனிமே ஏதும் பேசுனா உங்களையும் கேஸ்ல சேர்த்து உள்ளே போடுவேன்’னு இன்ஸ்பெக்டர் சொன்னதும், அவங்க போயிட்டாங்க. அவனுங்க வெளியில வந்து என்ன பண்ணுவானுங்களோன்னு பயமா இருக்கு’’ என்றார் அச்சம் விலகாமல்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நாகை சட்டமன்றத் தொகுதிச் செயலாளர் அறிவழகனிடம் விளக்கம் கேட்டோம். ‘‘என்கிட்ட அந்தப் பெண்ணின் தங்கச்சி வந்து நடந்த விஷயத்தைச் சொன்னதும், பேசி முடிக்கலாம்னு சொன்னேன். அதுக்குள்ள விஷயம் போலீஸ் ஸ்டேஷன் போயிடுச்சு. நானும் எங்க வக்கீலும் ஸ்டேஷனுக்குப் போய், அந்தப் பெண்கள் சார்பா இன்ஸ்பெக்டர்கிட்ட பேசினோம். `நாங்களே இதை முடிச்சுக்கிறோம்’ என்றோம். இன்ஸ்பெக்டர் மறுக்கவே கிளம்பிவிட்டோம்” என்றவர், ‘‘சம்பந்தப்பட்ட ரெண்டு பேரும் எங்க இயக்கத்தைச் சேர்ந்தவங்க இல்லை. அவங்க யாருன்னே எனக்குத் தெரியாது’’ என்று மொத்தமாக அந்தர்பல்டி அடித்தார். ஒரு கொடூரக் குற்றத்தை ஏதோ வாய்த்தகராறு போலக் கருதி பேச்சுவார்த்தை நடத்தவும் பஞ்சாயத்து செய்யவும் இவர்கள் யார்? எங்கிருந்து வருகிறது இவர்களுக்குத் துணிச்சல்?

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலாளர் பரிமளச் செல்வனிடம் கேட்டபோது, ‘‘யார் தவறு செய்தாலும் தவறுதான். அதை நானோ, எங்கள் கட்சியோ, தலைவரோ ஏற்றுக்கொள்ள மாட்டோம். இந்தச் சம்பவத்துக்கு எங்கள் தலைவர் ட்விட்டரில் கண்டனம் தெரிவித்திருக்கிறார்’’ என்றார்.

நாகை டி.எஸ்.பி முருகவேலைச் சந்தித்தோம். ‘‘புகார் கிடைத்த சில மணி நேரத்துக்குள் ஆனந்தராஜ், அப்பாஸ் என்ற அருண்ராஜ் இருவரையும் கைதுசெய்தோம். அவர்கள்மீது பலாத்காரம், கொலை மிரட்டல், அசிங்கமாகப் பேசுதல் ஆகிய கடும் பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவுசெய்து சிறையிலடைத்திருக்கிறோம். அவர்கள்மீது குண்டர் சட்டம் போட நடவடிக்கை மேற்கொண்டுவருகிறோம்’’ என்றார்.

இரண்டு பெண் குழந்தைகளின் தாயை இரக்கமின்றி பலவந்தப்படுத்தி, அதுவும் கோயிலில்வைத்தே பாலியல் வன்கொடுமை செய்திருக்கும் இரண்டு கொடூரர்களும் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்மணியின் குடும்பத்துக்கு அரசு உடனடியாக உதவ வேண்டும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism