Published:Updated:

லோடு வாகனம் திருட்டு... டாஸ்மாக்கில் கொள்ளை! - ஒரே இரவில் திருத்தணியை அலறவிட்ட கொள்ளைக் கும்பல்!

கொள்ளையடிக்கப்பட்ட டாஸ்மாக்
கொள்ளையடிக்கப்பட்ட டாஸ்மாக்

திருத்தணியில் டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து திருடச் சென்ற கொள்ளைக் கும்பல் ஒன்று, லாக்கரில் பணம் இல்லாததால் சாராய பாட்டில்களைத் திருடிக் குடித்துவிட்டுச் செய்த ரகளை அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

திருத்தணியை அடுத்த பள்ளிப்பட்டு, பொதட்டூர்பேட்டைப் பகுதியில் நேற்று முன்தினம் இரவு சாலையோரத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த லோடு வண்டி ஒன்றைக் கொள்ளையர்கள் திருடிச் சென்றனர். திருடிய வாகனத்துடன் அருகிலிருந்த டாஸ்மாக் கடையில் கொள்ளையடிக்கச் சென்றவர்கள், டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து லாக்கரை உடைத்துப் பார்த்தபோது அதில் பணம் எதுவும் இல்லாததால் மிகுந்த ஏமாற்றமடைந்துள்ளனர்.

கொள்ளையடிக்கப்பட்ட டாஸ்மாக் கடை
கொள்ளையடிக்கப்பட்ட டாஸ்மாக் கடை

பணம் இருக்கும் என்று நினைத்து வந்தவர்கள் ஆறுதலுக்கு டாஸ்மாக் கடையிலிருந்த மது பாட்டில்களில் தங்களுக்குப் பிடித்த மது வகைகளைப் போதும் என்ற அளவுக்கு ஆற அமர கடையிலேயே குடித்துவிட்டு, கையில் கிடைத்த மது பாட்டில்களை அள்ளி வண்டியில் போட்டுக்கொண்டு அங்கிருந்து நகர்ந்திருக்கிறார்கள்.

போதை அதிகமானதால் வண்டியைத் தள்ளாடியபடி ஓட்டி வந்திருக்கிறார்கள். சொரக்காய்பேட்டை ஏரிக்கரை அருகே வந்தபோது வண்டி மின்கம்பத்தில் மோதிக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. விபத்து சத்தம் கேட்டு உறங்கிக்கொண்டிருந்த வாத்து மேய்க்கும் முதியவர் ஒருவர், உதவ ஓடி வந்திருக்கிறார். ஆனால், போதையில் இருந்த கொள்ளையர்கள் உதவி செய்ய வந்த முதியவரைச் சரமாரியாகத் தாக்கிவிட்டு அவரின் செல்போனை பிடுங்கிக்கொண்டு அங்கிருந்து சென்றனர்.

அதையடுத்து, சொரக்காய் பேட்டையை அடுத்துள்ள கீலபூடி கிராமத்துக்குள் புகுந்த போதை ஆசாமிகள் மீண்டும் வீடுகளில் புகுந்து கொள்ளையடிக்க முயன்றனர். ஆனால், பொதுமக்கள் அவர்களை விரட்டியடித்தனர். பொதுமக்கள் பிடிக்க முயன்றபோது கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பி ஓட்டம் பிடித்தனர்.

விபத்துக்குள்ளான வண்டி
விபத்துக்குள்ளான வண்டி

கொள்ளையர்கள் குறித்து பள்ளிப்பட்டு காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு விரைந்த காவலர்கள் லோடு வண்டி திருடப்பட்ட இடத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் மூன்று பேர் முகமூடிகளை அணிந்துகொண்டு வண்டியைத் திருடியது தெரியவந்தது. வாத்து மேய்க்கும் முதியவர் மற்றும் கீலபூடி கிராம மக்கள் அளித்த தகவல்களின்பேரில் போலீஸார் விசாரணை மேற்கொண்டு கொள்ளையர்களைத் தேடிவருகின்றனர்.

அடுத்த கட்டுரைக்கு