Published:Updated:

நள்ளிரவில் ஆட்டுப்பட்டியில் புகுந்த மர்ம கும்பல்; உரிமையாளரை கட்டிப்போட்டு 30 ஆடுகள் கடத்தல்!

திருடு போன ஆட்டுப்பட்டி

ஒன்றிரண்டு ஆடுகள் திருடு போவது வழக்கம். ஆனால், ஒரு டீமாக வந்து இப்படி கடத்திச் சென்றிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

நள்ளிரவில் ஆட்டுப்பட்டியில் புகுந்த மர்ம கும்பல்; உரிமையாளரை கட்டிப்போட்டு 30 ஆடுகள் கடத்தல்!

ஒன்றிரண்டு ஆடுகள் திருடு போவது வழக்கம். ஆனால், ஒரு டீமாக வந்து இப்படி கடத்திச் சென்றிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Published:Updated:
திருடு போன ஆட்டுப்பட்டி

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூரை அடுத்த சிறுகனூர் குரும்பர் தெருவைச் சேர்ந்தவர் ராமர் (55). ஆடு வளர்ப்புத் தொழிலைச் செய்துவரும் ராமர், பகலில் ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்றுவிட்டு, இரவில் பட்டியில் அடைத்து அங்கேயே பாதுகாப்பிற்காக தங்குவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். சுமார் 70 ஆடுகளை வளர்த்து பராமரித்து வந்த ராமர், அவரது வீட்டிலிருந்து சற்று தூரத்தில் உள்ள தனியார் கம்பெனியின் மகளிர் விடுதி அருகே ஆட்டுப்பட்டியினை அமைத்துள்ளார். நேற்று வழக்கம்போல ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்ற ராமர், மாலையில் ஆடுகளை பட்டியில் அடைத்து தண்ணீர் வைத்துவிட்டு, அங்கேயே ஒரு கட்டிலைப் போட்டு காவலுக்கு இருந்துள்ளார்.

திருடு போன ஆட்டுப்பட்டி
திருடு போன ஆட்டுப்பட்டி

குளிர் அதிகமாக இருந்ததால் போர்வையை இழுத்துப் போர்த்தி லேசாக கண் அசந்து தூங்கியிருக்கிறார். இந்த நிலையில், நள்ளிரவில்  சுமார் 7-8 மர்மநபர்கள் திபுதிபுவென ராமரின் ஆட்டுப்பட்டிக்குள் இறங்க, பயந்துப்போன ஆடுகள் கத்தி நாலாபுறமும் பட்டிக்குள்ளேயே சிதறி ஓடியிருக்கின்றன. இந்த சத்தத்தினைக் கேட்டு, தூக்கத்திலிருந்த ராமர் சுதாரித்து எழுந்திருக்கிறார். அவர் என்ன நடக்கிறது என பார்ப்பதற்குள்ளாகவே அந்த மர்மக் கும்பல், ராமரை நெருங்கி கத்தியைக் காட்டி மிரட்டியதோடு, அவர் போர்த்தியிருந்த போர்வையை எடுத்தே அவரது முகத்தை மூடி கட்டிலில் கிடத்தியிருக்கிறது. மேலும், அவரை கட்டிலில் படுக்க வைத்து கை, கால்களை கட்டிப்போட்டுள்ளனர். இதில் நிலைகுலைந்துபோன ராமர் எதுவும் செய்யமுடியாமல் முடங்கிப் போயிருக்கிறார்.

மாதிரி படம்
மாதிரி படம்

இதற்கிடையே ஆட்டுப்பட்டியில் இறங்கிய அந்த மர்மக் கும்பல், மளமளவென பட்டியில் இருந்த ஆடுகளை தூக்கி, அவர்கள் கொண்டு வந்த வண்டியில் ஏற்றியிருக்கின்றனர். ஒருகட்டத்தில் ஆடுகளை ஏற்றிக்கொண்டு அவர்கள் கிளம்ப, கட்டப்பட்ட கயிற்றை போராடி அவிழ்த்துப் பார்க்க 30 ஆடுகளை கொள்ளையர்கள் திருடிச் சென்றது ராமருக்கு தெரியவந்திருக்கிறது. உடனே சிறுகனூர் காவல் நிலையத்திற்குச் சென்று நடந்த சம்பவத்தைச் சொல்லி ராமர் கலங்கி நிற்க, சம்பவ இடத்திற்கு வந்த சிறுகனூர் போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரணையில் இறங்கியிருக்கின்றனர். மேலும், கிடைத்த தகவலையும், அடையாளங்களையும் வைத்து ஆடுகளை திருடிச் சென்ற கும்பலை சிறுகனூர் போலீஸார் தேடி வருகின்றனர். வழக்கமாக பட்டியில் அடைக்கப்பட்டிருக்கும் ஒன்றிரண்டு ஆடுகள் திருடு போவது வழக்கம். ஆனால், ஒரு டீமாக வந்து இப்படி கடத்திச் சென்றிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.