Published:Updated:

காஜா பீடி, சப்ளை பாய்ஸ், டோர் டெலிவரி... கஞ்சா பூமியான திருவல்லிக்கேணி! #VikatanExclusive

கஞ்சா
கஞ்சா

புராதன சின்னங்களும் புனித தலங்களும் நிரம்பிய திருவல்லிக்கேணி, இன்று கஞ்சா பூமியாக மாறியிருக்கிறது.

108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றாகப் போற்றப்படும் பார்த்தசாரதி திருக்கோயில், மகாகவி பாரதியார் வாழ்ந்த இல்லம், புகழ்பெற்ற திருவல்லிக்கேணி பெரிய மசூதி, தொழுகை நடைபெறும் ஐந்து வேளையும் இஸ்லாமியர்களால் நிரம்பி வழியும் ஐஸ் ஹவுஸ் மசூதி, விவேகானந்தர் தியான மண்டபம் எனத் தடுக்கி விழுந்த இடமெல்லாம் புராதன சின்னங்களும் புனித தலங்களும் நிரம்பிய திருவல்லிக்கேணி, இன்று கஞ்சா பூமியாக மாறியிருக்கிறது.

கஞ்சா
கஞ்சா

திருவல்லிக்கேணியில் இருந்துதான் சென்னையின் கிழக்கு மற்றும் தெற்குப் பகுதிகளுக்கு கஞ்சா சப்ளை செய்யப்படுகிறது. ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் இக்காலகட்டத்தில்கூட சைதாப்பேட்டை, அரும்பாக்கம், முகப்பேரில் இருந்தெல்லாம் கஞ்சா வாங்குவதற்காகத் திருவல்லிக்கேணிக்கு ஆட்கள் படையெடுக்கின்றனர். வியாபாரம் கனஜோராக நடைபெறுவதால் 50 ரூபாய்க்கு விற்கப்பட்ட 10 கிராம் கஞ்சா பாக்கெட் இன்று 150 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. கஞ்சா பிசினஸ் குறித்து நாம் ஏற்கெனவே எக்ஸ்க்ளூசிவ் செய்தியை வெளியிட்டிருந்தாலும், ஊரடங்கு அமலாகியிருக்கும் இந்தக் காலகட்டத்திலும் இந்த கஞ்சா பிசினஸ் எப்படி நடைபெறுகிறது, சப்ளையர்கள் யார், போலீஸில் இருந்து எப்படித் தப்பிக்கிறார்கள்?

கேள்விகளுடன் களமிறங்கினோம்.

Shocking: தமிழ்நாட்டில் கஞ்சா சப்ளையாகும் திக் திக் ரூட்!

எகிறிய கஞ்சா டிமாண்ட்!

திருவல்லிக்கேணியைப் பொறுத்தவரை ஐஸ் ஹவுஸ் போலீஸ் லிமிட்டிற்குள் வரும் மாட்டான்குப்பம் வெங்கட்ரங்கம் தெருமுனையில் கஞ்சா விற்பனை கொடிகட்டிப் பறக்கிறது. தெருமுனையிலுள்ள `சி வியூ’ டீ கடை முன்பு குவியும் வாடிக்கையாளர்களை அங்கு காத்திருக்கும் வியாபாரிகளின் ஏஜென்டுகள் அணுகுகிறார்கள். சின்ன பாக்கெட்டுகள் என்றால், டீக்கடைக்குள்ளேயே இருந்து கஞ்சா எடுத்துத் தரப்படுகிறது. பெரிய ஆர்டராக இருந்தால், வெங்கட்ரங்கம் தெருமுனையிலுள்ள ஒரு வீட்டுக்குள் இருந்து பேப்பரில் கஞ்சாப் பொட்டலங்களை மடித்து எடுத்துவந்து தருகிறார்கள். இந்த வியாபாரத்தில் `பொண்ணு’ என்பவர் கொடிகட்டிப் பறப்பதாகக் கூறப்படுகிறது.

கஞ்சா பொட்டலம்
கஞ்சா பொட்டலம்

வழக்கமாக ஒடிசாவில் இருந்து ரயில் மூலமும் பெங்களூரு, மதுரையில் இருந்து வாகனங்கள் மூலமாகவும் கஞ்சா சென்னை நகருக்கு வந்தன. ஊரடங்கு உத்தரவால் ரயில், வாகன போக்குவரத்து முடங்கியுள்ள சூழலில், சென்னையின் பெரும்பாலான ஏரியாக்களில் கஞ்சா சப்ளை முடங்கிப் போயுள்ளது. திருவல்லிக்கேணியைச் சேர்ந்த கஞ்சா வியாபாரிகள் மட்டும் ஒருமாதத்துக்குத் தேவையான கஞ்சாவை மொத்தமாக ஸ்டாக் செய்து வைத்துக்கொண்டதால், திருவல்லிக்கேணி கஞ்சாவுக்கு டிமாண்ட் எகிறியுள்ளது.

சப்ளை பாய்ஸ்

நகருக்குள் ஆங்காங்கே போலீஸ் செக்போஸ்ட்கள் இருப்பதால், கஞ்சாவை எடுத்துச் செல்ல விரும்பாத வாடிக்கையாளர்கள், திருவல்லிக்கேணி சந்துபொந்து தெருக்களுக்குள்ளேயே அமர்ந்து கஞ்சாவை இழுக்கிறார்கள். இதனால், ஏரியாவாசிகளுக்கு மிகுந்த சிரமம் ஏற்பட்டிருப்பதுடன் சட்டம் ஒழுங்கு பிரச்னையும் எழ ஆரம்பித்துள்ளது. புதிதாகக் கட்டப்பட்டுள்ள ஐஸ் ஹவுஸ் போலீஸ் ஸ்டேஷன் முன்புள்ள வைக்கோல் தொட்டித் தெருவில் பகலிலேயே கஞ்சா வியாபாரம் தூள் பறப்பதாகக் குமுறுகிறார்கள் ஏரியாவாசிகள்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய ஏரியாவாசி ஒருவர், ``செல்லம்மா தோட்டத்தில் வசிக்கும் பத்மா என்பவரின் மகன் ஏழுமலைதான் இந்த ஏரியாவுக்கு கஞ்சா சப்ளை செய்பவர். அவருக்குக் கஞ்சா ரமேஷ் என்பவர் சப்ளை செய்கிறார். ஏழுமலையிடமிருந்து சின்னச் சின்ன ஏஜென்டுகள் ஏரியா முழுவதும் வியாபாரத்துக்காக கஞ்சாவை வாங்கிச் செல்கின்றனர். ஐஸ் ஹவுஸில் மாநகராட்சி அலுவலகம் அமைந்துள்ள முத்தையா தெருவில், வயதான பிச்சைக்காரர் ஒருவர் மூன்று சக்கர லோடு வண்டியில் அமர்ந்திருப்பார். அதுபோல, ராயப்பேட்டை அரசு மருத்துவமனை மேம்பாலம் கீழே ஒருவர், வைக்கோல்தொட்டி தெரு அருகே இரண்டு ஆட்டோக்களில் அமர்ந்திருப்பவர்கள் என ஆங்காங்கே ஏஜென்டுகளின் ஆட்கள் கஞ்சா பொட்டலங்களோடு அமர்ந்திருப்பார்கள். இவர்களைப் பார்த்தால் சந்தேகம் வராத வண்ணம் நடந்துகொள்வார்கள்.

இவர்களிடமிருந்து டூவீலரில் வரும் நவநாகரிக இளைஞர்கள் கஞ்சா பொட்டலங்களை வாங்கிக்கொள்கிறார்கள். இவர்கள்தான் சப்ளை பாய்ஸ். புதிதாக வரும் ஒரு வாடிக்கையாளர் கஞ்சா வேண்டுமென்று அணுகினால், அவரை ஒரு சாலையில் நிறுத்திவிட்டு, இந்த சப்ளை பாய்ஸ்தான் டெலிவரி செய்கிறார்கள். வந்த வாடிக்கையாளர் ஸ்பெஷல் போலீஸ் டீம் என்றால் தப்பித்துக்கொள்ளவே இந்த ஏற்பாடு. பழகிய வாடிக்கையாளர் என்றால் ஏஜென்டுகளிடமிருந்தே நேரடியாகக் கஞ்சாவை வாங்கிக் கொள்ளலாம். இப்போது, போன் செய்தால் கஞ்சா பொட்டலங்களை டோர் டெலிவரி செய்யும் வேலையையும் இந்த சப்ளை பாய்ஸ் குரூப் ஆரம்பித்துள்ளது. ஒருநாளைக்கு குறைந்தது 2,000 ரூபாய் சம்பாதிக்க முடியும் என்பதால், இளைஞர்கள் அதிகம் பேர் கஞ்சா சப்ளை பிசினஸில் குதித்துள்ளனர்” என்று அதிர்ச்சியைக் கிளப்பினார்.

Representational Image
Representational Image

காஜா பீடிக்குத் தட்டுப்பாடு

``இப்ப காஜா பீடிக்கு திருவல்லிக்கேணியில பெரிய தட்டுப்பாடுங்க” என்றபடி நம்மிடம் பேச்சைத் தொடங்கினார் வியாபாரி ஒருவர். ``மத்த பீடியைவிட காஜா கம்பெனி பீடிகளின் இலை பெரியதாக இருக்கும். அதிலுள்ள புகையிலையைக் கீழே கொட்டிவிட்டு, கஞ்சாவை நுணுக்கி இலையில் சுற்றி, பீடியைப் புகைப்பதுபோல கஞ்சாவை புகைக்கிறார்கள். இதனால், திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை ஏரியாக்களில் காஜா பீடிக்கு கடும் டிமாண்ட் ஏற்பட்டுள்ளது. இளைஞர்கள் பலரும் இப்போது கஞ்சா புகைக்க ஆரம்பித்திருப்பதுதான் வேதனைக்குரிய விஷயம்” என்றார்.

`பகலில் கஞ்சா விற்பனை... இரவில் வழிப்பறி!’ - நெல்லை போலீஸுக்கு அதிர்ச்சி கொடுத்த இளைஞர்கள்

சென்னையில் வீதிக்கு வீதி வாகன தணிக்கையில் ஈடுபடும் போலீஸாருக்குத் தெரியாமல் கஞ்சா வியாபாரம் செய்யப்படுகிறது என்றால் குழந்தைகூட நம்பாது. லோக்கல் காவல்துறையைக் கையில் போட்டுக்கொண்டு, கஞ்சா வியாபாரிகள் நடத்தும் இந்த வியாபாரத்தில் ஒரு நாளைக்கு லட்சக்கணக்கில் பணம் புரள்கிறது. காவல்துறை அதிகாரிகளோ, ``கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, புதிதாக எந்தக் கைதியையும் சிறைச்சாலைகள் ஏற்றுக் கொள்ள விரும்பவில்லை. இதனால், கஞ்சா வியாபாரிகளைக் கைது செய்து சிறைக்கு அனுப்புவதில் நடைமுறை சிக்கல் எழுந்துள்ளது. யார் யாரெல்லாம் கொட்டமடிக்கிறார்கள், எந்தெந்த அதிகாரிகள் எல்லாம் கூட்டுக்கொள்ளையடிக்கிறார்கள் என்பதைக் கண்காணித்து வருகிறோம். தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்” என்கின்றனர்.

சென்னை போலீஸ்
சென்னை போலீஸ்

இதற்கிடையே திருவல்லிக்கேணியில் நடைபெறும் கஞ்சா வியாபாரம் குறித்து, சென்னை கிழக்கு காவல்துறை இணை ஆணையர் சுதாகரிடம் பேசினோம். நமக்குக் கிடைத்த தகவல்கள் குறித்து பகிர்ந்துகொண்டதும், பொறுமையாகக் கேட்டுக்கொண்டவர் உடனடி நடவடிக்கை எடுப்பதாக நம்மிடம் உறுதியளித்தார்.

அடுத்த கட்டுரைக்கு