Published:Updated:

`எங்கிட்டயே கேள்வி கேக்கறியா?'-சென்னை ரயில்நிலையத்தில் பெண்களோடு பிடிபட்ட `கஞ்சா' கணேசன்

எஸ்.மகேஷ்

ஆந்திராவிலிருந்து கஞ்சா பொட்டலங்களை வாங்கிக்கொண்டு பஸ் மூலம் சொந்த ஊர்களுக்குச் செல்ல ஆட்டோவில் ஏறிய 3 பெண்கள் உட்பட கஞ்சா கணேசனை போலீஸார் பிடித்துள்ளனர்.

Ganja Ganesan
Ganja Ganesan

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் நேற்று இரவு ஆட்டோவில் ஒரு ஆண் மற்றும் 3 பெண்கள் ஏறினர். அப்போது அந்த ஆட்டோவை 2 பெண்கள் உட்பட 6 பேர் மடக்கினர். இதனால் ஆட்டோவில் ஏற முயன்ற பெண்கள், `எங்களை ஏன் ஆட்டோவில் ஏறவிடாமல் தடுக்கிறீர்கள்?' என்று கேள்வி கேட்டனர். அதற்கு, `செய்றதையும் செஞ்சிட்டு எங்கிட்டயே கேள்வி கேக்கறியா?' என்று மப்டியில் இருந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயந்தி பதில் அளித்தார்.

ganja
ganja

இதனை எதிர்பார்க்காத அந்த கஞ்சா கும்பல் போலீஸாரிடமிருந்து தப்பிக்க முயற்சி செய்தனர். ஆனால் அவர்களை மடக்கிப் பிடித்த போலீஸார் எழும்பூர் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். அங்கு 4 பேரிடமும் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில், பிடிபட்ட 4 பேரும் கஞ்சா வியாபாரிகள் கஞ்சா கணேசன், பாத்திமா சலீம், சசிகலா, பாண்டீஸ்வரி என்று தெரியவந்தது.

இதுகுறித்து போலீஸாரிடம் கேட்டோம். ``கஞ்சா பிசினஸ் செய்துவரும் 3 பெண்கள் உட்பட 4 பேரையும் நீண்ட நாள்கள் கண்காணித்து எங்களுக்குக் கிடைத்த ரகசிய தகவலின்படி கைது செய்தோம்" என்றவர்கள்,

fathima Saleem
fathima Saleem

``ஆந்திராவிலிருந்து சென்னைக்கு ரயில் மூலம் கஞ்சாவைக் கடத்துவதாக ஒருங்கிணைந்த குற்ற நுண்ணறிவு பிரிவு போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ஜெயந்தி, சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் பாண்டியன் ஆகியோர் தலைமையிலான போலீஸ் டீம், எழும்பூர் ரயில் நிலையம் வடக்குப்பகுதியில் நேற்றிரவு 9 மணி முதல் கஞ்சா கடத்தல் கும்பலுக்காகக் காத்திருந்தது.

9.30 மணியளவில் ரயில் நிலையத்திலிருந்து ஆட்டோவில் ஏறி கோயம்பேடு செல்ல தயாராக இருந்த தேனி கூடலூரைச் சேர்ந்த கணேசன் என்கிற கஞ்சா கணேசன் (44), திருச்சி, தில்லைநகரைச் சேர்ந்த பாத்திமா சலீம் (66), தேனியைச் சேர்ந்த சசிகலா (38), தேனி பெரியகுளத்தைச் சேர்ந்த பாண்டீஸ்வரி (35) ஆகியோரை மடக்கிப்பிடித்தோம். அவர்களிடமிருந்து 23 பாக்கெட்டுகளிலிருந்த 46 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தோம்.

Sasikala
Sasikala

இவர்கள் ஆந்திராவிலிருந்து ரயிலில் கஞ்சா பொட்டலங்களை வாங்கிக் கொண்டு எழும்பூர் ரயில் நிலையத்துக்கு வந்துள்ளனர். இங்கிருந்து கோயம்பேடு சென்று பஸ் மூலம் சொந்த ஊர்களுக்குச் செல்ல முயன்றபோது போலீஸாரிடம் சிக்கிக் கொண்டனர். விசாரணைக்குப்பிறகு போதை தடுப்புப் பிரிவு போலீஸாரிடம் அவர்களை ஒப்படைத்துவிட்டோம்" என்கின்றனர்.