Published:Updated:

திருமணம் நடந்த முதல்நாளில் எரிக்கப்பட்ட காதல் மனைவி; சாம்பல்கூட கிடைக்கல!‍- கதறிய சித்தூர் இளைஞர்

காதலர்கள்
News
காதலர்கள்

எதிர்ப்புகளுக்கு இடையே கடந்த வெள்ளிக்கிழமை காதலர்கள் இருவரும் அருகில் உள்ள கிராமத்தின் கோயிலில் வைத்து திருமணம் செய்துள்ளனர்.

ஆந்திராவின் சித்தூர் அருகே உள்ள குப்பம் ரெட்ல பள்ளி கிராமத்தைச் சேர்ந்த 18 வயதுப் பெண் சித்தாரா (பெயர் மாற்றம்). அரசு கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பட்டப்படிப்பு படித்துவந்த சித்தாரா பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர். இவரும் அதேபகுதியைச் சேர்ந்த நந்தகுமார் என்பவரும் காதலித்து வந்துள்ளனர். நந்தகுமார் பட்டியலினத்தைச்சேர்ந்தவர் என்பதால் பெண்ணின் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர்.

காதலர்கள்
காதலர்கள்

எதிர்ப்புகளுக்கு இடையே காதலர்கள் இருவரும் கிராமத்தின் அருகில் உள்ள கோயிலில் வைத்து கடந்த வெள்ளிக்கிழமை திருமணம் செய்துள்ளனர். திருமணத்துக்குப் பிறகு குப்பம் பகுதியில் தங்கியுள்ளனர். இருவரும் ஊர் திரும்பிய பிறகு இரு குடும்பத்துக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. நீண்ட வாக்குவாதத்துக்குப் பின் சித்தாராவின் பெற்றோர் சமாதானமாகியுள்ளனர். அப்போது,`பெண்ணுக்கு திருமணச் சடங்குகள் செய்ய வேண்டியுள்ளது' எனக் கூறி சித்தாராவை தங்கள் வீட்டுக்கு அவரது பெற்றோர்கள் அழைத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

நீண்ட நேரமாகியும் சித்தாரா கணவர் வீட்டுக்குத் திரும்பவில்லை. மறுநாள் காலை பெண்ணின் தாய்க்கு, நந்தகுமார் போன்செய்து சித்தாரா குறித்து விசாரித்துள்ளார். அதற்கு, நேற்று இரவே அவள் தற்கொலை செய்துகொண்டாள் எனவும், உடலை எரித்து இறுதிச் சடங்குகள் செய்துவிட்டோம் என சித்தராவின் தாய் பதில் கூறியதாகத் தெரிகிறது. அவரின் பதிலைக் கேட்டு அதிர்ந்த நந்தகுமார் குடும்பத்தினர் உடனடியாக குப்பம் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.

கொலை செய்யப்பட்ட இடம்
கொலை செய்யப்பட்ட இடம்

புகாரின் பேரில் போலீஸார் நடத்திய விசாரணையில், தங்களுக்குச் சொந்தமான பண்ணையில் சித்தாராவை எரித்துவிட்டோம் எனக் கூறப்பட, பண்ணைக்குச் சென்று சோதனை நடத்தப்பட்டது. அங்கு சித்தாராவின் உடல் எரிக்கப்பட்டதற்கான அடையாளம் இருந்தது. ஆனால், எரிந்த இடத்தைத் தவிர சிறு சாம்பல்கூட போலீஸுக்குக் கிடைக்கவில்லை. `எங்கள் மகள் தற்கொலை செய்துகொண்டாள். அதனால்தான் எரித்தோம்' என அவரது பெற்றோர்கள் உறுதியாகக் கூறுவதால் சந்தேகத்திற்கிடமான மரணம் என வழக்கு பதிவுசெய்து விசாரித்துவருகின்றனர். இளம்பெண் ஆணவப் படுகொலை செய்யப்பட்டாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. சித்தூரில் காதல் திருமணம் செய்துகொண்ட இளம்பெண் எரித்துக்கொல்லப்பட்ட சம்பவம் அந்தப் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.