Election bannerElection banner
Published:Updated:

தேனி : திடீர் வயிற்றுவலி... குழந்தை பெற்றெடுத்த சிறுமி உயிரிழப்பு! - போக்சோ சட்டத்தில் ஒருவர் கைது

சிறுமி
சிறுமி

17 வயது சிறுமி, மருத்துவமனையில் குழந்தையைப் பெற்றெடுத்து, சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவத்தில், ஒருவர் கைதுசெய்யப்பட்டிருக்கிறார். மற்றொருவரை போலீஸார் தேடிவருகின்றனர்.

தேனி மாவட்டம், போடி அருகேயுள்ள கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமி, கரூர் மாவட்டத்திலுள்ள தனியார் செவிலியர் பயிற்சிக் கல்லூரியில் படிப்பை முடித்து, கரூரில் தனியார் மருத்துவமனையில் பயிற்சி செவிலியராக பணியாற்றிவந்திருக்கிறார். கொரோனா ஊரடங்கு காரணமாக, சில மாதங்களுக்கு முன்னர் தனது சொந்த கிராமத்துக்கு வந்த அவர், போடியிலுள்ள தனியார் மருத்துவமனையில் வேலைக்குச் சேர்ந்திருக்கிறார். தாய்-தந்தை இருவரும் இறந்துவிட்ட சூழலில், தனது தாத்தாவின் அரவணைப்பில், அவருடன் தங்கி, மருத்துவமனைப் பணிக்குச் சென்றுவந்திருக்கிறார்.

போடி ஊரக காவல் நிலையம்
போடி ஊரக காவல் நிலையம்

இந்தநிலையில், கடந்த 2-ம் தேதி, கடும் வயிற்றுவலி ஏற்பட்டதாகக் கூறி, அந்தச் சிறுமியை போடி அரசு மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார் அவருடைய தாத்தா. சிறுமியைப் பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர், எட்டு மாத கர்ப்பமாக இருப்பதாகக் கூறியிருக்கிறார்கள். அன்றைய தினமே அவருக்குப் பெண் குழந்தை பிறந்தது. பிரசவத்தின்போது அந்தச் சிறுமிக்குக் கடுமையான ரத்தப்போக்கு ஏற்படவே, தேனி கானாவிலக்கு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு, மேல் சிகிச்சைக்காக சிறுமியும், குழந்தையும் அனுப்பிவைக்கப்பட்டனர். அங்கே குழந்தை உடல் ஆரோக்கியத்துடன் இருந்தபோதும், சிறுமி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது தொடர்பாக, சிறுமியின் தாத்தா, போடி ஊரக காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

தேனி: முதியவர் மர்ம மரணம்... பிரேத பரிசோதனையால் சிக்கிய  இளைஞர்!
கைதுசெய்யப்பட்ட மணிகண்டன்
கைதுசெய்யப்பட்ட மணிகண்டன்

சிறுமியின் தாத்தா அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணையில் இறங்கிய போலீஸார், சிறுமியின் செல்போனைக் கைப்பற்றி ஆய்வு செய்ததில், மணிகண்டன், கார்த்திக் என்ற இருவரிடம் அந்தச் சிறுமி அடிக்கடி பேசியது தெரியவந்தது. இந்தநிலையில், சிறுமியின் கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டனைப் பிடித்த போலீஸார், அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

தேனி: கர்ப்பிணி மனைவி கொலை - அ.தி.மு.க பேரூராட்சி முன்னாள் தலைவருக்குத் தூக்கு!

அதைத் தொடர்ந்து போக்சோ சட்டத்தின் கீழ் மணிகண்டனைக் கைதுசெய்து சிறையிலடைத்தனர். கார்த்திக்கைத் தேடிவருகின்றனர். சிறுமி உயிரிழந்த சம்பவத்துக்குக் காதல் விவகாரம் காரணமா, அல்லது மணிகண்டன், கார்த்திக் இருவரும் சிறுமியைக் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கினார்களா என்பது போன்ற கோணத்தில் விசாரிப்பதாக கூறும் போலீஸ் தரப்பினர், விசாரணையின் முடிவில்தான் உண்மைநிலை தெரியவரும் என்கின்றனர்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு