Published:Updated:

`மூன்று மாதம்தான் அவருடன் வாழ்ந்தேன்'- குழந்தைக் கடத்தலில் சிக்கிய இளம்பெண் பகீர் வாக்குமூலம்

அம்பிகா
அம்பிகா

`என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையில் நடந்த கசப்பான நிகழ்வுகளால்தான் நான் இப்படி மாறினேன்' என்று குழந்தைக் கடத்தல் வழக்கில் கைதான வேலைக்கார பெண் அம்பிகா போலீஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

சென்னை செனாய் நகரில் எல்.கே.ஜி மாணவி அன்விகா கடத்தப்பட்ட சம்பவத்தில் வேலைக்காரப் பெண் அம்பிகா, அவரின் ஆண் நண்பர் முகமது கலிபுல்லா சேட் ஆகியோரை போலீஸார் கைதுசெய்துள்ளனர். இந்த வழக்கில் புகார் கொடுத்தவுடன் காவல் நிலையத்துக்கு வந்த இணை கமிஷனர் விஜயகுமாரி, குழந்தை மீட்கப்பட்ட நள்ளிரவு வரை சம்பவ இடத்திலேயே இருந்தார். தனிப்படை போலீஸாரும் துரிதமாக செயல்பட்டதால் புகார் கொடுத்த 10 மணி நேரத்தில் அன்விகா மீட்கப்பட்டார். இதனால் தனிப்படை போலீஸார் மற்றும் காவல்துறை உயரதிகாரிகளை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் பாராட்டியுள்ளார்.

எல்.கே.ஜி மாணவி அன்விகா
எல்.கே.ஜி மாணவி அன்விகா

போலீஸாரிடம் அம்பிகா அளித்த வாக்குமூலத்தில், ``என்னுடைய சொந்த ஊர் விராலிமலை அருகே உள்ள சாரளபட்டி என்ற கிராமம். நானும் அம்மாவும் தனியாக வாழ்ந்துவருகிறோம். நான் ப்ளஸ் டூ வரை படித்துள்ளேன். எனக்கும் என் தாய்மாமனுக்கும் திருமணம் நடந்தது. ஆனால், எங்கள் இல்லற வாழ்க்கை மூன்று மாதங்களிலேயே முடிந்துவிட்டது. வேறு ஒரு பெண்ணை என் தாய்மாமன் திருமணம் செய்துகொண்டுவிட்டார். இதனால் நான், வேலை தேடி சென்னை வந்தேன். முகப்பேரில் உள்ள உணவகத்தில் எனக்கு வேலை கிடைத்தது. அங்குதான் முகமது கலிபுல்லா சேட் என்பவரைச் சந்தித்தேன். நாங்கள் இருவரும் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.

ஆடம்பரமாக வாழ்வது தொடர்பாக இருவரும் ஆலோசிப்போம். இந்தச் சமயத்தில் முகமது கலிபுல்லா சேட், புழல் பகுதியில் உள்ள உணவகத்தில் மேலாளராக வேலைக்குச் சேர்ந்தார். நான், முகப்பேர் வேலையை விட்டுவிட்டு புதிய வேலையைத் தேடிக் கொண்டிருந்தேன். இதற்காக இணைய தளம் ஒன்றில் மாதம் 10,000 ரூபாய் சம்பளம் கொடுத்தால் வீட்டிலேயே தங்கி வேலை செய்ய விருப்பம் என்று பதிவு செய்திருந்தேன். அதைப்பார்த்துவிட்டு அருள்ராஜ் என்பவர் எனக்கு கடந்த மாதம் போன் செய்தார். அவரிடம் நான் பேசினேன். அப்போது சம்பளம், வீட்டில் தங்கியிருப்பது என வேலை தொடர்பான விஷயங்களை போனில் பேசினோம். கடந்த 25 நாள்களுக்கு முன் அருள்ராஜ் வீட்டில் வேலைக்குச் சேர்ந்தேன். வேலை முடிந்தபிறகு அங்கேயே தங்கினேன்.

அம்பிகாவின் நண்பர் முகமது கலிபுல்லா சேட்
அம்பிகாவின் நண்பர் முகமது கலிபுல்லா சேட்

என்னை அருள்ராஜ், நந்தினி ஆகியோர் முழுமையாக நம்பினர். என் வேலையும் அவர்களுக்குப் பிடித்திருந்தது. குறுகிய காலத்தில் குழந்தை அன்விகாவும் என்னுடன் நன்றாக பழகிவிட்டாள். அவளை பள்ளிக்கு அனுப்புவதிலிருந்து அவளுக்கான அனைத்து வேலைகளையும் நான்தான் செய்வேன். என்னை ஆன்டி என்று அன்விகா அன்போடு கூப்பிடுவாள். நான் வேலை செய்த வீட்டின் ஓனர் அருள்ராஜ், இன்ஜினீயர் என்பதாலும் ஓனரம்மா நந்தினி டாக்டர் என்பதாலும் அவர்கள் இருவருக்கும் கைநிறைய சம்பளம் கிடைத்தது. இதனால் அவர்கள் ஆடம்பரமாக வாழ்ந்தனர்.

அவர்களின் லைப் ஸ்டைலைப் பார்த்த நான், அவர்களைப் போல வாழ ஆசைப்பட்டேன். இதனால்தான், முகமது கலிபுல்லா சேட்டுவைச் சந்தித்துப் பேசினேன். அப்போது அன்விகா மீது அவளின் பெற்றோர் பாசமாக இருக்கிறார்கள். இதனால் அவளை நாம் கடத்தி பணம் கேட்டால் கண்டிப்பாக கிடைக்கும். இதுதான் நாம் இருவருக்கும் ஆடம்பரமாக வாழ கிடைத்த வாய்ப்பு என்று கூறினேன்.

அன்விகாவின் குடும்பத்தினர்
அன்விகாவின் குடும்பத்தினர்

சம்பவத்தன்று பள்ளி முடிந்து அன்விகா வந்ததும் அவளைக் கடத்த திட்டமிட்டோம். காரோடு வீட்டின் முன் முகமது கலிபுல்லா சேட் வந்தார். உடனே நானும் அன்விகாவும் அந்தக் காரில் ஏறினோம். அதை நந்தினி பார்த்துவிட்டார். ஏற்கெனவே நாங்கள் திட்டமிட்டப்படி கோவளத்தில் உள்ள விடுதிக்குச் சென்றோம். அங்கு என்னையும் அன்விகாவையும் விட்டுவிட்டு புழலுக்கு வந்துவிட்டார் முகமது கலிபுல்லா சேட்.

அன்விகாவை நான் அழைத்துச் சென்றபோது அவர், எங்கே செல்கிறோம் என்று என்னிடம் கேட்டார். அதற்கு நான் அவுட்டிங் போகிறோம் என்று கூறினேன். அதை அவளும் நம்பினாள். விடுதியில் இருந்தபோதுதான் அம்மாவைப் பார்க்க வேண்டும் என்று அழுது அடம்பிடித்தாள். அவளை சமாதானப்படுத்தினேன். என்னுடைய செல்போன் நம்பரிலிருந்து அருள்ராஜிக்கு போன் செய்து 60 லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டினோம். இதனால்தான் நாங்கள் இருவரும் சிக்கிக்கொண்டோம். மேலும், என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையில் நடந்த சில கசப்பான சம்பவங்களால்தான் நான் இப்படி மாறிவிட்டேன்" என்று கூறியதாக போலீஸார் தெரிவித்தனர்.

அவர்களின் லைப் ஸ்டைலைப் பார்த்த நான், அவர்களைப் போல வாழ ஆசைப்பட்டேன். இதனால்தான், முகமது கலிபுல்லா சேட்டுவைச் சந்தித்துப் பேசினேன். அப்போது அன்விகா மீது அவளின் பெற்றோர் பாசமாக இருக்கிறார்கள். இதனால் அவளை நாம் கடத்தி பணம் கேட்டால் கண்டிப்பாக கிடைக்கும். இதுதான் நாம் இருவருக்கும் ஆடம்பரமாக வாழ கிடைத்த வாய்ப்பு என்று கூறினேன்.
வேலைக்காரப் பெண் அம்பிகா

இந்த வழக்கை விசாரித்த தனிப்படை போலீஸ் அதிகாரி ஒருவர் நம்மிடம், ``வேலைக்காரப் பெண் அம்பிகாவுக்கு மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் சில பிரச்னைகள் உள்ளன. இதனால்தான் அவரின் இல்லற வாழ்க்கை திருமணம் நடந்து மூன்று மாதங்களிலேயே முடிந்துவிட்டது. இதனால்தான் அம்பிகா மனரீதியில் அதிகளவு பாதிக்கப்பட்டுள்ளார். மேலும், அம்பிகா, எப்போதும் மேக்கப் போட்டு சினிமா நடிகைபோல இருக்க விரும்பியுள்ளார். மேலும், அவருக்கு சிறு வயது முதலே பணக்காரர்கள் போல வாழ வேண்டும் என்ற ஆசை இருந்துள்ளது. இந்த ஆசையால்தான் அவரும் அவரை நம்பிய முகமது கலிபுல்லா சேட்டும் சிறை கம்பிகளை எண்ணிக் கொண்டிருக்கின்றனர்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு