தெற்கு டெல்லி பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் வேலை தேடியிருக்கிறார். நீண்ட நாள்களாக வேலை தேடியும் கிடைக்காததால் மிகுந்த மனவருத்தத்திலிருந்த அந்தப் பெண்ணுக்கு, தெற்கு டெல்லியின் சித்தரஞ்சன் பகுதியில் புதிதாக ஒரு ஃபர்னிச்சர் ஷோ ரூம் திறக்கப்பட்டிருப்பது குறித்து இணையதளம் மூலம் தெரியவந்திருக்கிறது.
உடனே அவர் அந்த ஷோ ரூம் பணிக்கு இணையத்தில் விண்ணப்பித்திருக்கிறார். நேர்காணலுக்கு நேரில் வர வேண்டும் என பதிலளிக்கப்பட்டிருக்கிறது. தனக்கு வேலை கிடைக்கும் என ஆர்வத்துடன் அந்தப் பெண்ணும் தகவல் தெரிவிக்கப்பட்ட இடத்துக்கு நேர்காணலுக்காகச் சென்றிருக்கிறார். ஆனால், அந்தப் பெண்ணை அந்த ஷோ ரூமின் உரிமையாளர் நேர்காணல் செய்வதுபோல அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார்.

பின்னர் அந்த நபரிடமிருந்து தப்பியோடிய அந்தப் பெண் உடனடியாக காவல் நிலையத்துக்குச் சென்று தகவல் தெரிவித்து, காவலர்களுடன் அந்த இடத்துக்குச் சென்றிருக்கிறார். ஆனால், அந்த ஷோ ரூம் உரிமையாளர் அதற்குள் அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.
அதையடுத்து, அந்தப் பெண்ணை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று மருத்துவப் பரிசோதனை செய்ததில், அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது உறுதியானது. போலீஸார் இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவுசெய்து அந்த ஷோ ரூம் உரிமையாளரைத் தீவிரமாகத் தேடிவருகின்றனர்.
