Published:Updated:

“சாமி கும்பிடப் போனவள் சடலமாகத்தான் கிடைத்தாள்!”

அறந்தாங்கி
பிரீமியம் ஸ்டோரி
அறந்தாங்கி

சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்

“சாமி கும்பிடப் போனவள் சடலமாகத்தான் கிடைத்தாள்!”

சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்

Published:Updated:
அறந்தாங்கி
பிரீமியம் ஸ்டோரி
அறந்தாங்கி
சாத்தான்குளம் சம்பவத்தின் அதிர்ச்சியி லிருந்து தமிழகம் இன்னமும் மீளாத நிலையில், அடுத்த அதிர்ச்சியை ஏற்படுத்தி யிருக்கிறது, புதுக்கோட்டை மாவட்டத்தில் ஏழு வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமாகக் கொல்லப்பட்ட சம்பவம்.

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி பகுதியைச் சேர்ந்த சிறுமிதான் கொடுமைக்கு ஆளானவர். குழந்தைக்கு இறுதிச்சடங்கு செய்துவிட்டு மீளாத்துயரில் இருந்தார் சிறுமியின் தந்தை. அவரிடம் பேசினோம். ‘‘ஜூன் 30-ம் தேதி அன்னிக்கு சாயந்திரம் வீட்டுக்கு வெளியே விளையாடிக்கிட்டு இருந்திருக்கா. பக்கத்துல குடியிருக்கிற ராஜாதான் அவளை, ‘கோயிலுக்கு வா’னு சொல்லி, கூட்டிட்டுப் போயிருக்கான். பழக்கமான ஆளுங்கிறதால இவளும் அவன்கூட போயிட்டா போலிருக்கு. எங்களுக்கு இந்த விஷயம் தெரியாது. ரொம்ப நேரம் ஆகியும் அவ வீட்டுக்கு வராததால நாங்க தேட ஆரம்பிச்சோம். போலீஸுக்கும் தகவல் கொடுத்தோம்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

விடிய விடிய தேடியும் பாப்பா கிடைக்கலை. மறுநாள் காலையிலயும் பாப்பாவைத் தேடினோம். போலீஸ்காரங்களும் விசாரணை செய்ய வந்தாங்க. அப்போதான், ‘ராஜாகூடத்தான் பாப்பா கோயிலுக்கு வந்துச்சு’னு கோயில் பூசாரி சொல்லியிருக்கார். உடனே ராஜாவைக் கூட்டிட்டுப்போய் விசாரிக்க ஆரம்பிச்சாங்க.

“சாமி கும்பிடப் போனவள் சடலமாகத்தான் கிடைத்தாள்!”

அன்னைக்கு சாயந்தரமாத்தான் வீட்டுக்குப் பக்கத்துல இருக்குற கண்மாய்ப் புதருக்குள்ள இறந்த நிலையில் பாப்பா கிடந்ததைக் கண்டுபிடிச்சோம். உடம்பெல்லாம் பல்லால கடிச்ச காயம்... மண்டை உடைஞ்சு, ரத்தம் உறைஞ்சுபோய்க் கிடந்தது. பிள்ளையை எறும்புகள் மொய்ச்சுட்டு இருந்துச்சு. அதைப் பார்த்ததும், ஈரக்குலையே நடுங்கிடுச்சு. ஊர்க்காரங்க எல்லாருமே அந்தக் கொடுமையைப் பார்த்து ஆத்திரப்பட்டாங்க.

அதுக்கப்புறம்தான் எங்க பாப்பாவை சிதைச்சது ராஜாதான்னு போலீஸ் சொன்னாங்க. அவ்வளவு கொடுமையைச் செஞ்சுட்டு, அந்தப் படுபாவியும் எங்களோட சேர்ந்து விடிய விடிய பாப்பாவைத் தேடினதுதான் கொடுமை. பச்சைப் புள்ளையை இப்படி அடிச்சு கொல்றதுக்கு எப்படித்தான் மனசு வந்துச்சோ... அந்த நேரத்துல அவ எப்படி துடிச்சிருப்பானு நினைச்சா, தாங்க முடியலை. இந்த மாதிரி கொடுமை எந்தப் பிள்ளைக்கும் வந்துடக் கூடாது. அந்தப் பாவியை தூக்குல போட்டாக்கூட எங்க மனசு ஆறாது’’ என்று கதறி அழுதார்.

இந்தப் படுபாதகச் செயலைச் செய்த ராஜா, 29 வயது நிரம்பியவர். அந்தப் பகுதியில் பூ வியாபாரம் செய்துவருகிறார். அவர்மீது கடத்தல், பாலியல் வன்கொடுமை, கொலை உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவுசெய்து சிறையில் அடைத்துள்ளனர் போலீஸார்.

போலீஸாரிடம் ராஜா கொடுத்த வாக்குமூலத்தில், ‘‘கோயிலுக்குப் போலாம்னு அந்தப் பிள்ளையைக் கூட்டிட்டுப் போனேன். திரும்பி வர்ற வழியில் முட்புதருக்குள் வெச்சு பாலியல் வன்கொடுமை செஞ்சேன். அதுக்கப்புறம் அவ ஊருல சொல்லிருவாளோனு பயம் வந்திடுச்சு. அதனால மரத்துல அவளை முட்டவெச்சி, மயக்கமானதும் புதருக்குள்ள தூக்கிப்போட்டுட்டேன்’’ என்று சர்வ சாதாரணமாகச் சொல்லியிருக்கிறார்.

ராஜா - சலோமி
ராஜா - சலோமி

குழந்தையின் உடலில் குறிப்பிட்ட சில பகுதிகளிலிருந்த காயங்களைப் பார்த்த போலீஸாருக்கு ‘அந்தக் குழந்தை பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டிருக்கலாம்’ என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. உடனே துரிதமாகச் செயல்பட்டு குற்றவாளியைக் கைது செய்துள்ளனர் போலீஸார்.

இந்தச் சம்பவம் குறித்துப் பேசிய புதுக்கோட்டை இந்திய ஜனநாயக மாதர் சங்க மாவட்டச் செயலாளர் சலோமி, ‘‘அந்தச் சிறுமிக்கு நேர்ந்த விஷயம், கண்கலங்க வைக்கிறது. இது போன்ற குற்றங்களுக்கு சட்டங்களைக் கடுமையாக்கி, தண்டனை களை அதிகப்படுத்த வேண்டும். விசாரணைகளையும் துரிதப்படுத்தி, பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக நீதி கிடைக்க வழி செய்ய வேண்டும். பெண் குழந்தைகளுக்கு, பள்ளிப் பருவத்திலேயே பாலியல் தொடர்பான பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். பெண்கள் தங்களுக்கு நேர்ந்த வன்கொடுமை குறித்து புகார் அளிக்க வரும்போது, காவல்துறையினர் பரிவுடன் விசாரிக்க வேண்டும்’’ என்றார்.

சிறுமிக்கு நேர்ந்த கொடூரத்தைக் கேள்விப் பட்டதும், சினிமா பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள், பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள், சமூக ஆர்வலர்கள் எனப் பல தரப்பினரும் கண்டனம் தெரிவித்துவருகிறார்கள். தமிழக அரசு சிறுமியின் குடும்பத்துக்கு 5 லட்சம் ரூபாய் நிவாரணம் அளித்திருக்கிறது. மேலும், ‘வன்கொடுமைத் தடுப்புச் சட்ட சீர் உதவித் தொகையாக 8,25,000 ரூபாய் வழங்கப்படும்’ என அறிவித்து முதற்கட்டமாக 4 லட்சம் ரூபாயை வழங்கியிருக்கிறார் புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் உமா மகேஸ்வரி.

நிதி மட்டும் போதாது... உரிய நீதியையும் விரைவில் வழங்க வேண்டும்!