Published:Updated:

காலில் விழுந்து மன்னிப்பு... ரூ.2,000 அபராதம்... சிறுமியைச் சீரழித்த காமுகனுக்கு இதுதான் தண்டனையாம்!

ஜெயகுமார்
பிரீமியம் ஸ்டோரி
ஜெயகுமார்

- ராணிப்பேட்டை அநீதி!

காலில் விழுந்து மன்னிப்பு... ரூ.2,000 அபராதம்... சிறுமியைச் சீரழித்த காமுகனுக்கு இதுதான் தண்டனையாம்!

- ராணிப்பேட்டை அநீதி!

Published:Updated:
ஜெயகுமார்
பிரீமியம் ஸ்டோரி
ஜெயகுமார்

14 வயது சிறுமியைச் சீரழித்த காமுகனை, தண்டனையிலிருந்து காப்பாற்றுவதற்காக கிராமப் பஞ்சாயத்தார் எடுத்த முடிவு, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ‘காலில் விழுந்து மன்னிப்பு... 2,000 ரூபாய் அபராதம்’ என்று பாதிக்கப்பட்ட தரப்பினரை மிரட்டியிருக்கிறார்கள். இது, ஏதோ வட இந்தியாவின் பின்தங்கிய மாநிலம் ஒன்றில் நடந்த சம்பவமில்லை. பெண்ணுரிமை பற்றி கோஷமிடும் தமிழகத்தில் நடந்திருப்பதுதான் வேதனையின் உச்சம்!

ராணிப்பேட்டை மாவட்டம், பனப்பாக்கம் அருகில் இருக்கிறது கல்பலாம்பட்டு காலனி. 2021, செப்டம்பர் 4-ம் தேதி... 9-ம் வகுப்பு படிக்கும் 14 வயது சிறுமி ஒருவர், பள்ளியில் சத்துணவு முட்டை வாங்குவதற்காக நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது பைக்கில் சென்றுகொண்டிருந்த அதே பகுதியைச் சேர்ந்த ஜெயகுமார் என்கிற 44 வயதுடையவன், வக்கிரபுத்தியுடன் சிறுமியைப் பார்த்தான். இத்தனைக்கும் அந்தச் சிறுமிக்கு ஜெயகுமார் ‘பெரியப்பா’ உறவு முறை. சிறுமியைப் பள்ளியில் விடுவதாகக் கூறி பைக்கில் ஏற்றிச் சென்றவன், வழியிலுள்ள ஏரிப்பகுதியில் பைக்கை நிறுத்தினான். ஆள் நடமாட்டம் இல்லாத அங்குவைத்து சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்தவன், ‘இது பற்றி வெளியில் சொன்னால் கொன்றுவிடுவேன்’ என்று மிரட்டி, பள்ளிக்கு அருகில் விட்டிருக்கிறான்.

காலில் விழுந்து மன்னிப்பு... ரூ.2,000 அபராதம்... சிறுமியைச் சீரழித்த காமுகனுக்கு இதுதான் தண்டனையாம்!

அந்தச் சிறுமி தந்தையை இழந்தவள்; தாய் சற்றே புத்தி சுவாதீனம் இல்லாதவர். ஒரே அண்ணனும் வெளியூரில் வேலை பார்த்துவருகிறார். தனக்கு நேர்ந்த கொடுமையைப் பற்றி புத்தி சுவாதீனமில்லாத தன் தாயிடமும் அவளுக்குச் சொல்ல முடியவில்லை. இதற்கிடையே அடுத்த சில நாள்களில் மீண்டும் சிறுமியை மிரட்டிச் சீரழித்திருக்கிறான் ஜெயகுமார். சில நாள்களில் சிறுமியின் உடல்நிலை பாதிக்கப்படவே, அக்கம் பக்கத்தினர் சிறுமியை வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு மருத்துவர்கள் சிறுமியைப் பரிசோதனை செய்தபோது, அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருப்பது தெரிந்தது. தொடர்ந்து மருத்துவர்கள் விசாரித்தபோது, தனக்கு நேர்ந்த கொடுமையைக் கொட்டி அழுது தீர்த்திருக்கிறார் அந்தச் சிறுமி. இது குறித்து மருத்துவர்கள், அரக்கோணம் அனைத்து மகளிர் போலீஸாருக்குத் தகவல் கொடுத்ததை அடுத்தே, ‘போக்சோ’ சட்டத்தின்கீழ் ஜெயகுமார் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டான்.

இந்த வழக்கு, பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் வேலூர் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்துவரும் நிலையில், மூன்று மாதங்களுக்கு மேல் சிறையிலிருந்த ஜெயகுமார், ஒரு மாதத்துக்கு முன்புதான் ஜாமீனில் வெளியே வந்தான். வந்தவுடனேயே தனது பண பலத்தைப் பயன்படுத்தி, வழக்கிலிருந்து தப்புவதற்காகச் சிறுமியின் குடும்பத்தினரை மிரட்டத் தொடங்கினான்.

கூடவே கிராமப் பஞ்சாயத்தைக் கூட்டி, ‘நான் செஞ்சது தப்புதான்’ என்று கூறியவன், சிறுமியின் அண்ணன் காலில் விழுந்து மன்னிப்பும் கேட்டிருக்கிறான். இதைத் தொடர்ந்து பஞ்சாயத்துப் பேசிய ஊரின் முக்கியப் பிரமுகர்கள் சிலர், ‘‘வழக்கை வாபஸ் வாங்கிக்கணும். இல்லைன்னா, ஊரைவிட்டுத் தள்ளிவெச்சுடுவோம். செஞ்ச தப்புக்கு மூணு மாசத்துக்கு மேல ஜெயில்ல இருந்துட்டான். அவன் ரெண்டாயிரம் ரூபாய் அபராதம் செலுத்திட்டு வேலையைப் பார்க்கலாம். இதுதான் பஞ்சாயத்துத் தீர்ப்பு’’ என்று சொல்லியிருக்கிறார்கள். அதிர்ச்சியடைந்த சிறுமியின் உறவினர்கள், பஞ்சாயத்தார் தீர்ப்பை ஏற்க மறுத்ததால் மிரட்டல்களும் வந்துள்ளன.

ஜெயகுமார்
ஜெயகுமார்

இதற்கிடையே, பாதிக்கப்பட்ட சிறுமி பிப்ரவரி 7-ம் தேதி அன்று நேரடியாக ஆஜராகி விளக்கம் அளிக்க சிறப்பு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது. அதைத் தெரிந்துகொண்ட ஜெயகுமார் சிறுமியின் வீட்டுக்கே சென்று, ‘விசாரணைக்கு ஆஜராகக் கூடாது’ என்று மிரட்டியிருக்கிறான். இதனால், பயந்துபோன சிறுமியின் குடும்பத்தினர், கடந்த 10 நாள்களுக்கு முன்பு வேறொரு கிராமத்திலுள்ள உறவினர் வீட்டில் சிறுமியை தங்கவைத்துள்ளார்கள். தொடர்ந்து பிப்ரவரி 7 அன்று சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜரான சிறுமி, தனக்கு நேர்ந்த கொடுமை குறித்தும், தற்போது ஊர்ப் பஞ்சாயத்தில் வழக்கை வாபஸ் வாங்கச் சொல்லி மிரட்டுவது குறித்தும் சொல்லியிருக்கிறார். இதைக் குறிப்பெடுத்துக்கொண்ட நீதிமன்றம், விசாரணையை வரும் பிப்ரவரி 15 அன்று ஒத்திவைத்திருக்கிறது.

இந்தத் தகவல் நமக்குக் கிடைக்கவே சிறுமி தங்கவைக்கப்பட்டிருந்த வீட்டுக்குச் சென்று உறவினர்களிடம் பேசினோம்... ‘‘எங்க குழந்தையை மட்டும் ஜெயகுமார் இப்படிப் பண்ணலை... இன்னும் சில குழந்தைங்ககிட்டயும் தப்பா நடந்துக்கிட்டிருக்கான்னு ஊருக்குள்ள பேசிக்கிறாங்க. அவன் தம்பி ஒருத்தன் சி.ஆர்.பி.எஃப்-ல இருக்கான். அவன், ‘புகாரை வாபஸ் வாங்கலைன்னா வீட்டோட கொளுத்தி சாகடிச்சிடுவேன்’னு மிரட்டுறான். பஞ்சாயத்து பேசின ஊர் ஆட்களும், ‘கால்ல விழுந்துட்டான். ரெண்டாயிரம் அபராதம் போட்டுட்டோம்... கேஸை வாபஸ் வாங்கு’னு வாய்கூசாமச் சொல்றாங்க. இவங்க அத்தனை பேர் மேலயும் நடவடிக்கை எடுக்கணும்னு முதலமைச்சர் தனிப்பிரிவு, உயர் நீதிமன்றப் பதிவாளர், வேலூர் சிறப்பு நீதிமன்றம், டி.ஜி.பி அலுவலகம், ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம்... அத்தனைக்கும் புகார் மனு அனுப்பியிருக்கோம். ஆனாலும், எந்த நடவடிக்கையும் இல்லை’’ என்றார்கள் குமுறலோடு.

புகழேந்தி கணேஷ்
புகழேந்தி கணேஷ்

இது தொடர்பாக, அரக்கோணம் டி.எஸ்.பி புகழேந்தி கணேஷிடம் கேட்டபோது, ‘‘வழக்கை வாபஸ் பெறக் கோரி சிறுமியை அச்சுறுத்தியவர்கள்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பழைய பஞ்சாயத்தார், புதிய பஞ்சாயத்தார், நாட்டாமைதாரர்கள் எனப் பட்டியல் தயாரித்துவருகிறோம். விரைவில் அனைவரும் கைதுசெய்யப்படுவார்கள். ஜெயகுமாரின் ஜாமீனை ரத்து செய்து, சிறையில் அடைப்பதற்கான நடவடிக்கையும் எடுக்கப்படும்’’ என்றார்.

மனசாட்சியே இல்லாமல் கட்டப்பஞ்சாயத்து பேசிய அத்தனை பேர்மீதும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism