Published:Updated:

லக்னோவில் பாலியல் வன்கொடுமை; புகாரளிக்க 800 கி.மீ பயணம்! - உ.பி-யில் பாதிக்கப்பட்ட நேபாளப் பெண்

சாலை
சாலை

சில நாள்களுக்குப் பிறகு, தன்னுடன் தங்கியிருக்கும் பெண்ணிடம் கொடுத்துவைத்திருந்த ஒன்றரை லட்சம் ரூபாய் பணத்தை நேபாளப் பெண் திருப்பிக் கேட்டபோது இருவருக்கும் மோதல் முற்றியதாகக் கூறப்படுகிறது

``போலீஸில் புகாரளித்தால் வீடியோவை வைரலாக்கிவிடுவேன்" பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர் மிரட்டியதால், 22 வயதான நேபாளப் பெண் ஒருவர் தனக்கு நேர்ந்த கொடுமையை போலீஸில் புகாரளிக்க, உத்தரபிரதேச மாநிலம் லக்னோவிலிருந்து 800 கி.மீ தூரம் காரில் பயணம் செய்து, மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் கோரடி காவல் நிலையத்தில் புகாரளித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

உத்தரப்பிரதேச மாநிலம், ஹத்ராஸில் 19 வயது இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதுடன், கொடூரமாகத் தாக்கப்பட்டார். மருத்துவமனையில் உயிரிழந்த அவரின் உடலை காவல்துறை அதிகாரிகள் இரவோடு இரவாக தகனம் செய்தது நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

பாலியல் வன்கொடுமை
பாலியல் வன்கொடுமை

கடந்த 2018 -ம் ஆண்டு, இந்தியாவில் பணிபுரிய வந்த நேபாளத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில், பைசாபாத் சாலையிலுள்ள குடியிருப்பில் பெண் நண்பர் ஒருவருடன் தங்கி வேலை பார்த்துவந்தார்.

நேபாளப் பெண்ணுடன் குடியிருப்பில் தங்கியிருந்த பெண், துபாயில் மென்பொருள் நிறுவனத்தில் வேலை பார்க்கும் தன் நண்பரான லக்னோவைச் சேர்ந்த பிரவீன் ராஜ்பால் யாதவ் என்பவரை நேபாளப் பெண்ணுக்கு வீடியோ கால் மூலம் அறிமுகம் செய்துவைத்திருக்கிறார்.

பாலியல் வன்கொடுமை
பாலியல் வன்கொடுமை
மாதிரி படம்

சில நாள்களுக்கு பிறகு, தன்னுடன் தங்கியிருக்கும் பெண்ணிடம் கொடுத்துவைத்திருந்த ஒன்றரை லட்சம் ரூபாய் பணத்தை நேபாளப் பெண் திருப்பிக் கேட்டபோது இருவருக்கும் மோதல் முற்றியதாகக் கூறப்படுகிறது. நேபாளத்தைச் சேர்ந்த பெண் இது குறித்து துபாயிலுள்ள பிரவீன் யாதவிடம் தெரிவிக்க, அதற்கு பிரவீன் லக்னோவிலுள்ள தனியார் ஹோட்டலில் அறை ஒன்றை வாடகைக்கு எடுத்துக் கொடுத்து, நேபாளப் பெண்ணை அங்கு தங்கிக்கொள்ளுமாறு அறிவுறுத்தியிருக்கிறார்.

இதையடுத்து, இரண்டு நாள்களுக்குப் பின்னர் துபாயிலிருந்து லக்னோவுக்கு வந்த பிரவீன் யாதவ், தனியார் ஹோட்டல் அறையில் தங்கியிருந்த நேபாளப் பெண்ணைச் சந்தித்து, அந்த பெண்ணுக்கு போதைப்பொருள் கொடுத்து, மயக்கமடைந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார்.

ஹத்ராஸ் இளம்பெண் குடும்பத்தினர் கோரிக்கை என்ன? - 5 விஷயங்களைப் பட்டியலிட்ட பிரியங்கா காந்தி

பிரவீன் யாதவ் இளம்பெண்ணைப் பாலியல் வன்கொடுமை செய்ததோடு, அதை புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களாகவும் பதிவு செய்திருக்கிறார். அதைத் தொடர்ந்து, அந்தப் பெண்ணை லக்னோவிலுள்ள தன் நண்பரின் இடத்துக்கு அழைத்துச் சென்று, அங்கு மீண்டும் போதை வஸ்துக்களைக் கொடுத்து அந்தப் பெண்ணை மீண்டும் மீண்டும் பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார்.

பின்னர், இந்தச் சம்பவம் குறித்து போலீஸில் புகாரளித்தாலோ, தான் சொல்வதைக் கேட்காவிட்டாலோ வீடியோக்கள் அனைத்தையும் சமூக ஊடகங்களில் பதிவேற்றம் செய்து விடுவேன் என்று நேபாளப் பெண்ணை மிரட்டியிருக்கிறார்.

பாலியல் வன்கொடுமை
பாலியல் வன்கொடுமை
Representational Image

இதையடுத்து, உத்தரப்பிரதேச மாநிலம், லக்னோவிலிருந்து காரில் 800 கி.மீ தூரம் பயணம் செய்து தப்பித்து வந்த அந்தப் பெண், மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரிலுள்ள நேபாளத்தைச் சேர்ந்த நண்பரின் வீட்டுக்குக் கடந்த செப்டம்பர் 30-ம் தேதி வந்திருக்கிறார். பின்னர் இருவரும் சேர்ந்து நாக்பூர் கோரடி காவல் நிலையத்தில் பிரவீன் யாதவ், அவரின் பெண் நண்பர் இருவர் மீதும் பண மோசடி செய்து பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாகப் புகாரளித்துள்ளனர்.

புகாரின் அடிப்படையில், இந்திய தண்டனைச் சட்டத்தின் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீது நாக்பூர் போலீஸார் சனிக்கிழமை வழக்கு பதிவு செய்திருக்கின்றனர்.

கோரடி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, குற்றம் சாட்டப்பட்டவர் வசிக்கும் லக்னோவில் இந்தச் சம்பவம் நடந்திருப்பதால், அது இப்போது உத்தரப்பிரதேச போலீஸாருக்கு அனுப்பப்பட்டிருப்பதாக நகர காவல்துறை ஆணையர் அமிதேஷ்குமார் தெரிவித்தார்.

இந்தச் சம்பவம் குறித்து கோரடி காவல் நிலைய மூத்த ஆய்வாளர் வஜீர் ஷேக் கூறுகையில், ``அந்தப் பெண் ஆரம்பத்தில் லக்னோவில் புகார் பதிவு செய்ய விரும்பினார். ஆனால் யாதவ் அவருடன் ஒரு கான்ஸ்டபிளை அழைத்து வந்து, இந்த விஷயத்தைப் பேசித் தீர்த்துக்கொள்ளவும், குற்றம்சாட்டப்பட்டவருடன் சமரசம் செய்துகொள்ளவும் கேட்டார். அதன் பிறகு உ.பி போலீஸ் மீதான நம்பிக்கையை இழந்த நேபாளப் பெண், கோரடியிலுள்ள மஹாதுலாவுக்கு வந்திருக்கிறார். அங்கு அவரது நேபாள நண்பர் ஒருவர் இருந்த நிலையில் அவர் உதவியை நாடியிருக்கிறார்.

அவர் எங்களிடம் வந்த பிறகு, நாங்கள் அவருடன் பேச இரண்டு பெண் அதிகாரிகளை அழைத்தோம். தனது புகாரைப் பதிவு செய்வதற்கு முன்பே அந்தப் பெண் நிம்மதியாக உணர்ந்தார்” என்று கூறினார்.

பாலியல் வன்கொடுமை
பாலியல் வன்கொடுமை

மேலும், `நாங்கள் இப்போது இந்த வழக்கை லக்னோவின் சின்ஹாட் காவல் நிலையத்துக்கு அனுப்பியிருகிறோம். எங்கள் காவல்துறை அதிகாரிகளையும், பாதிக்கப்பட்ட அந்தப் பெண்ணையும் அனுப்பியிருக்கிறோம். மேலும் சின்ஹாட் காவல் நிலையத்தின் பொறுப்பாளரிடம் இது குறித்துப் பேசிவிட்டோம்" என்றார்.

முதல் தகவல் அறிக்கை எனப்படும் எஃப்.ஐ.ஆர் (FIR) எந்தவொரு காவல் நிலையத்திலும் தாக்கல் செய்யப்பட்டு, பின்னர் அதை தகுதியான அதிகார வரம்பைக்கொண்ட, பொருத்தமான காவல் நிலையத்துக்கு மாற்றலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

`நான்கு மாதங்களாகத் துன்புறுத்தப்பட்ட இளம்பெண்!’ - ஹத்ராஸ் சம்பவத்தில் நடந்தது என்ன?
அடுத்த கட்டுரைக்கு