Published:Updated:

`கடவுள் யாருக்கும் இது போன்ற நண்பனைக் கொடுக்கக் கூடாது!’ - ரூ.96 லட்சத்தை இழந்தவர் கண்ணீர்

மும்பையில் போலி புகாரைக் காட்டி, உதவி செய்வதுபோல் நடித்து, உயிர் நண்பனிடம் ரூ.96 லட்சத்தைப் பறித்த நபர் கைதுசெய்யப்பட்டார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

மும்பையில் உயிர் நண்பன், தன்னுடைய நண்பனிடம் போலி ஆவணங்களைக் காட்டி மோசடி செய்திருக்கிறார். மும்பை ஒர்லி பகுதியைச் சேர்ந்தவர் உமேஷ். அதே பகுதியில் வசிக்கும் ஆதித்யா ரஜினிகாந்த் என்பவரும் உமேஷும் கடந்த 18 ஆண்டுகளாக நண்பர்களாக இருந்துவந்தனர். உமேஷ் தனியார் ஆயத்த ஆடை கம்பெனியில் வேலை செய்துவருகிறார். தன்னிடமிருக்கும் சொத்து, பணம், வீடு, காப்பீடு குறித்த விவரங்களை உமேஷ், ஆதித்யாவிடம் தெரிவித்தார். உயிர் நண்பன் என்ற முறையில் இவற்றை ஆதித்யாவிடம் தெரிவித்திருக்கிறார்.

ஆனால் ஆதித்யா அந்தப் பணத்தை உமேஷிடமிருந்து அபகரிக்க திட்டமிட்டார். கடந்த 2017-ம் ஆண்டு, மார்ச் மாதம் அவர்கள் வசிக்கும் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்குச் சட்டச் சிக்கல் ஏற்பட்டிருப்பதாகவும், அதற்குப் பணம் தேவைப்படுவதாகவும், விரைவில் திருப்பிக் கொடுத்துவிடுவதாகவும் ஆதித்யா உமேஷிடம் தெரிவித்தார். உமேஷ் தன்னிடமிருந்த ரூ.35 லட்சத்தை உடனே ஆதித்யாவிடம் கொடுத்தார். சில மாதங்கள் கழித்து உமேஷ் பணத்தைத் திருப்பிக் கொடுக்கும்படி ஆதித்யாவிடம் கேட்டிருக்கிறார்.

உமேஷ்
உமேஷ்

இதனால் ஆதித்யா ஃபேஸ்புக்கில் சட்டச் சிக்கலுக்கு பணம் கேட்ட பெண்ணின் பெயரில் போலி ஐடி-யை உருவாக்கி, அதன் மூலம் உமேஷிடம் ஆதித்யா சாட்டிங் செய்தார். விரைவில் பணத்தைக் கொடுத்துவிடுவதாகத் தெரிவித்தார். அடுத்த சில மாதங்களில் ஆதித்யா ஒரு வன்கொடுமை புகார், தற்கொலை முயற்சி புகார் தொடர்பான போலீஸ் ஆவணங்களை உமேஷிடம் காட்டி, உமேஷ்மீது வன்கொடுமை மற்றும் தற்கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறினார்.

இதனால் பயந்துபோன உமேஷ், இந்த வழக்கில் தான் கைதுசெய்யப்பட்டால் கௌரவம் போய்விடும் என்று கருதி பல்வேறு காலகட்டங்களில் ஆதித்யாவிடம் 65 லட்சம் ரூபாய் கொடுத்து வழக்கை முடிக்கும்படி சொல்லியிருக்கிறார். இந்தப் பணத்தைக் கொடுப்பதற்காக உமேஷ் தனது வீட்டை விற்பனை செய்திருக்கிறார். அதோடு தனது காப்பீடு பத்திரத்தை சரண்டர் செய்திருக்கிறார். மேலும் தனக்குத் தெரிந்தவர்களிடமெல்லாம் கடன் வாங்கியிருக்கிறார். அப்படியிருந்தும் ஆதித்யா தொடர்ந்து பணம் கேட்டுக்கொண்டே இருந்தார்.

மேற்கொண்டு கொடுக்க தன்னிடம் பணம் இல்லை என்று உமேஷ் சொல்லியிருக்கிறார். அதற்கு, `தற்கொலை செய்துகொள். இந்தப் பிரச்னை இத்தோடு முடிந்துவிடும்’ என்று ஆதித்யா உமேஷிடம் கூறியிருக்கிறார். உமேஷும் இரண்டு முறை ஓடும் ரயிலிலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்துகொள்ளப் பார்த்தார். ஆனால் அதிலும் உயிர் தப்பினார். மேற்கொண்டு கொடுக்கப் பணம் இல்லை என்பதாலும், தொடர்ந்து ஆதித்யா பணம் கேட்டுக்கொண்டிருந்ததாலும், நேரடியாக ஒர்லி போலீஸ் நிலையத்துக்குச் சென்று ஆதித்யா சொன்ன போலீஸ் அதிகாரியின் பெயரைச் சொல்லி உமேஷ் விசாரித்திருக்கிறார். ஆனால் அங்கு அது போன்ற ஓர் அதிகாரியே இல்லை என்று தெரிய வந்தது. அதன் பிறகே, தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து இது குறித்து ஆதித்யா மீது உமேஷ் போலீஸில் புகார் செய்தார்.

மோசடி
மோசடி
Representational Image

போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்துவருகின்றனர். ஆதித்யா கைதுசெய்யப்பட்டிருக்கிறார். அவர் போலீஸ் இன்ஸ்பெக்டரின் லெட்டர்ஹெட்டை தவறாக பயன்படுத்தியதோடு, போலி கையெழுத்தும் போட்டு மோசடி செய்துள்ளார். மொத்தம் 96 லட்சம் ரூபாயை சொந்த நண்பனிடமிருந்து ஆதித்யா போலி ஆவணங்களைக் காட்டிப் பறித்துள்ளார். இது குறித்து உமேஷ் கூறுகையில், ``ஆதித்யாவுக்கு நான் எப்போதும் நன்மைகளையே செய்திருக்கிறேன். 2017-ம் ஆண்டு ஆதித்யா எனது சொத்து, வங்கி இருப்பு போன்ற விவரங்களைக் கேட்டார். நானும் உயிர் நண்பன் என்ற முறையில் தகவல்களைத் தெரிவித்தேன். ஆனால் அந்த விவரங்களைக்கொண்டு என்னிடம் மோசடி செய்துவிட்டான். இது போன்ற ஒரு நண்பனைக் கடவுள் யாருக்கும் கொடுக்கக் கூடாது. அனைத்துச் சொத்துகளையும் இழந்துவிட்டு இப்போது கடனாளியாக இருந்துகொண்டிருக்கிறேன். பல நாள்கள் என்ன செய்வதென்று தெரியாமல் வேலைக்குப் போகாமல் ரயில் நிலையத்திலேயே இருந்திருக்கிறேன். இரண்டு முறை தற்கொலைக்கும் முயன்றேன்” என்று கண்ணீர் ததும்ப உமேஷ் தெரிவித்தார்.

சென்னை: ஐ.சி.எஃப்-ல் வேலை வாங்கித் தருவதாக ரூ.12 லட்சம் மோசடி; 7 பேர் கைதான பின்னணி!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு