Published:Updated:

”கடவுள் வீடியோ எடுக்கச் சொன்னார் எடுத்தேன்”- தூத்துக்குடியில் 2 சைக்கோ வாலிபர்களால் பரபரப்பு!

தூத்துக்குடியில் விண்வெளி விளக்க கண்காட்சி நடைபெற உள்ள கல்லூரியை வீடியோ எடுத்ததுடன், போலீஸ் விசாரணையில் “கடவுள் எடுக்கச் சொன்னார் எடுத்தோம்” என கூறிய இரண்டு சைகோ வாலிபர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட 2 வாலிபர்கள்
கைது செய்யப்பட்ட 2 வாலிபர்கள்

உலக விண்வெளி வாரத்தை முன்னிட்டு மகேந்திரகிரி விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் சார்பில் தூத்துக்குடியில் உள்ள வ.உ.சிதம்பரம் கல்லூரியில் விண்வெளி விளக்க கண்காட்சி வரும் அக்டோபர் 9-ம் தேதி முதல் 11-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில், ராக்கெட், கோள்கள், நட்சத்திரங்கள் ஆகியவற்றை பூமியிலிருந்து பார்க்கும் படியான தொலைநோக்கி மாதிரிகள் வைக்கப்பட உள்ளது.

விண்வெளி விளக்க கண்காட்சி (கோப்பு படம்)
விண்வெளி விளக்க கண்காட்சி (கோப்பு படம்)

இதனைப் பார்வையிட பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்களுக்கு விண்வெளி மையம் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இக்கண்காட்சி நடைபெற உள்ள கல்லூரிக்குள் நுழைந்து கட்டிடங்களை பல கோணங்களில் இரண்டு பேர் வீடியோ எடுத்துள்ளனர். “யாருப்பா நீங்க.. காலோஜ்ல வீடியோ எடுக்குறீங்க?” என கல்லூரி நிர்வாகத் தரப்பினர் கேட்க, “நான் இந்த காலேஜ்லதான் படிச்சேன். பழைய மாணவன். சும்மாதான் வீடியோ எடுத்தேன்” என பதில் சொல்லி மழுப்பி இருவரும் அங்கிருந்து கிளம்ப முயன்றனர்.

இருவரின் பேச்சு, நடவடிக்கைகளில் சந்தேகம் ஏற்பட்டதால், அந்த இருவரும் கூறிய பாடப்பிரிவு, கல்வியாண்டு பழைய மாணவர் பட்டியலில் தேடிப் பார்த்த போது அவர்களது பெயர்கள் இல்லை. சந்தேகமடைந்த கல்லூரியின் முதல்வர், தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையத்திற்கு தகவல் சொல்ல, போலீஸார் விரைந்து வந்து அவர்களிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள், நெல்லை மாவட்டம் மேலப்பாளையத்தைச் சேர்ந்த ஜாபர் அலி மற்றும் ரஷிக் அகமது என தெரியவந்தது.

விண்வெளி விளக்க கண்காட்சி (கோப்பு படம்)
விண்வெளி விளக்க கண்காட்சி (கோப்பு படம்)

இதில் ஜாபர் அலி, கடந்த 23-ம் தேதி ஓமன் நாட்டிலிருந்து சொந்த ஊருக்குத் திரும்பி வந்துள்ளார். ரஷீக் அகமதை, ஜாபர் அலிதான் கல்லூரியை வீடியோ எடுக்க அழைத்து வந்துள்ளார். ”எதற்காக வீடியோ எடுத்தாய்? யார் உன்னை வீடியோ எடுக்கச் சொன்னது?” என போலீஸார், கேட்க, “என் கனவில் கடவுள் தோன்றி விண்வெளி விளக்க கண்காட்சி நடைபெறும் இந்தக் கல்லூரியை வீடியோ எடுக்கச் சொன்னார். அதனாலதான் எடுத்தேன்” என ஜாபர் அலி சொன்ன பதிலைக் கேட்டு அதிர்ந்தே போனார்கள்.

”ஜாபர் அலியின் கனவில் கடவுள் வீடியோ எடுக்கச் சொன்னதால் நானும் வீடியோ எடுக்க உதவியாக வந்தேன்” என சொன்னார் ரஷீக் அகமது. அவர்களிடமிருந்த பைக், 2 செல்போன்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. போலீஸார். உதவி ஆய்வாளர், ஆய்வாளர் மட்டுமல்லாமல் டவுண் டி.எஸ்.பி, எஸ்.பி., நெல்லை சரக டி.ஐ.ஜி உட்பட பலர் விசாரித்தும் மூளைச் சலவை செய்யப்பட்டது போலச் சொன்ன பதிலையே இருவரும் மீண்டும் மீண்டும் கூறியுள்ளனர். அவர்களிடமிருந்து உருப்படியான தகவல்கள் ஏதும் கிடைக்காததால் திணறிய போலீஸார், 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து தூத்துக்குடி குற்றவியல் 3வது நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.

விண்வெளி விளக்க கண்காட்சி (கோப்பு படம்)
விண்வெளி விளக்க கண்காட்சி (கோப்பு படம்)

வழக்கை விசாரித்த நீதிபதி, இருவரையும் 10 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து, இருவரும் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். மேலப்பாளையத்தில் உள்ள அவர்களது வீட்டைச் சோதனையிட்டதில் 8 செல்போன்கள், ஹார்டு டிஸ்க் உள்ளிட்டவற்றை போலீஸார் கைப்பற்றியதுடன், இவர்களுக்கு வேறு ஏதும் அமைப்புகளுடன் தொடர்பு உள்ளதா எனவும் விசாரணை நடத்தி வருகின்றனர். கல்லூரியை வீடியோ எடுத்த சைக்கோ வாலிபர்களின் பேச்சால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.