Published:Updated:

தூத்துக்குடி: மகனின் கழுத்தில் கத்தி... பெற்றோரை மிரட்டிப் பறிக்கப்பட்ட 14.5 சவரன் தங்க நகைகள்!

செய்துங்கநல்லூர் காவல் நிலையம்
News
செய்துங்கநல்லூர் காவல் நிலையம்

தூத்துக்குடியில் வீடு புகுந்து மகனின் கழுத்தில் கத்தியைவைத்து கொலை செய்துவிடுவதாக மிரட்டி, பெற்றோரிடமிருந்து 14.5 சவரன் தங்க நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம், செய்துங்கநல்லூர், தமிழன்நகரைச் சேர்ந்தவர் உதயகுமார். இவர், ஜவுளி வியாபாரம் செய்துவருகிறார். இவரின் மனைவி சுதா, ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனையில் காசநோய் பிரிவில் செவிலியராகப் பணிபுரிந்துவருகிறார். இவர்களுக்கு அரவிந்த், ஆனந்த் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். நேற்று மாலை அரவிந்த் ஆன்லைன் வகுப்பில் படித்துக்கொண்டிருந்தார். மனைவி சுதாவைப் பேருந்து நிலையத்திலிருந்து அழைத்து வருவதற்காக உதயகுமார் சென்றிருந்தார்.

கொள்ளையர்கள் நுழைந்த பின்பக்கக் கதவு
கொள்ளையர்கள் நுழைந்த பின்பக்கக் கதவு

இந்த நிலையில், மூன்று மர்ம நபர்கள், வீட்டின் பின்பக்கக் கதவை உடைத்து உள்ளே சென்றுள்ளனர். அவர்களைப் பார்த்ததும் அலறிச் சத்தம் போட்ட சிறுவனின் கழுத்தில் கத்தியைவைத்து, பீரோவை திறக்கச் சொல்லி பெட்ரூமுக்கு அழைத்துச் சென்றுள்ளனர். பயந்துபோன சிறுவனும் பீரோவைத் திறக்க, பீரோவுக்குள் இருந்த துணிகளை எடுத்து கீழே போட்டு நகைகள் இருக்கின்றனவா என தேடிக்கொண்டிருந்தனர்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

அப்போது மனைவியை வீட்டுக்கு அழைத்து வந்திருக்கிறார் உதயகுமார். இருவரும் வீட்டுக்குள் நுழைந்தனர். தன் மகனின் வாயைப் பொத்தியும், கழுத்தில் கத்தியைவைத்தும் மிரட்டியவர்களைப் பார்த்து சத்தம் போட்டிருக்கிறார்கள். ``வீட்ல இருக்குற தங்க நகைகளை ஒழுங்கா எடுத்துக் கொடுத்துடுங்க. இல்லேன்னா உங்க மகனைக் கொலை செஞ்சுடுவோம்” எனச் சொல்லி மிரட்டியுள்ளனர் அந்த மர்ம நபர்கள். பதறிப்போன சுதா, தன் கழுத்தில் அணிந்திருந்த ஏழு சவரன் தங்கச் சங்கிலியைக் கழற்றிக் கொடுத்திருக்கிறார்.

உடைக்கப்பட்ட பீரோ
உடைக்கப்பட்ட பீரோ

மேலும், வீட்டிலிருந்த ஏழரை சவரன் தங்க நகைகளையும் எடுத்துக் கொடுத்திருக்கிறார். நகைகளைக் கைக்குட்டையில் சுற்றி எடுத்துக்கொண்டவர்கள், சிறுவனைக் கீழே தள்ளிவிட்டுவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். இந்தத் திருட்டுச் சம்பவம் குறித்து உதயகுமார், செய்துங்கநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மாவட்ட எஸ்.பி ஜெயக்குமார் உத்தரவின் பேரில் கொள்ளையர்களைப் பிடிக்க இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. மகனின் கழுத்தில் கத்தியைவைத்து மிரட்டி, பெற்றோரிடமிருந்து நகைகளைப் பறித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.