Published:Updated:

நீலகிரி: 400 பவுன் தங்க நகை; ரூ.1 கோடி மோசடி! - பிரபல நகைக்கடன் நிறுவன ஊழியர்கள் சிக்கியது எப்படி?

ரூ.1 கோடி மோசடி
News
ரூ.1 கோடி மோசடி

புதிய வாடிக்கையாளர்களின்‌ பெயர்களில்‌ அந்த வாடிக்கையாளர்களுக்கே தெரியாமல்‌ போலியான ஆவணங்களை உருவாக்கி அவர்களின் கையொப்பங்கள் இட்டு கடன்‌ கணக்குகளில்‌ அடகு வைத்ததைப் போல பணத்தை எடுத்து கையாடல் செய்துள்ளனர்.

கேரளாவைத் தலைமை இடமாகக் கொண்டு பல கிளைகளில் இயங்கி வரும் தனியார் நகைக்கடன் நிறுவனமான முத்தூட் ஃபினான்ஸ் நிறுவனத்தின் கிளை ஒன்று நீலகிரி மாவட்டம் மஞ்சூரில் செயல்பட்டு வருகிறது. மஞ்சூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள கிராமங்களைச் சேர்ந்த சிலருக்கு இந்த நிறுவனத்தில் இருந்து பெற்ற நகைக் கடனுக்கான வட்டியை செலுத்துமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதில் வேடிக்கை என்னவென்றால், வாடிக்கையாளர்கள் அடகு வைத்த தங்கத்தின் அளவை விட அதிக மதிப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது.

ரூ.1 கோடி மோசடி
ரூ.1 கோடி மோசடி

அதிர்ச்சியடைந்த கிராம மக்கள், நகைக் கடன் நிறுவனத்திற்குச் சென்று வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.இந்த விவகாரம் குறித்து அந்த கடன் நிறுவனம் விசாரித்ததில் முறைகேடு நடந்திருப்பது உறுதியானது. தங்கள் நிறுவனத்தில் பணியாற்றி வந்த ஊழியர்களே போலியான ஆவணங்கள் உருவாக்கி பணத்தை கையாடல் செய்ததோடு, அடகு வைத்த தங்க நகைகளை மாற்றி போலி நகைகளை கணக்கு காண்பித்து மோசடி செய்திருக்கிறார்கள் என நிறுவன மேலாளர் ரவி, நீலகிரி மாவட்ட குற்றப்பிரிவு போலீஸில் புகார் அளித்தார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். நிறுவன ஊழியர்களான கணக்காளர் நந்தினி‌, கம்ப்யூட்டர் ஆப்ரேட்டர் விஜயகுமார் ஆகிய இருவரை கைது செய்து விசாரணையை மேலும் தீவிரப்படுத்தினர். நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வந்த சாந்திபிரியா, நகை மதிப்பீட்டாளர்‌ ராஜீ, கேஷியர் நந்தினி மற்றும்‌ கம்ப்யூட்டர்‌ ஆப்ரேட்டர்‌ விஜயகுமார்‌ ஆகிய நால்வரும் சேர்ந்து கடந்த 2021 ஆம் ஆண்டு மார்ச் 9-ம் தேதி முதல் செப்டம்பர் மாதம் 1-ம் தேதி வரையிலான காலகட்டத்தில்‌ அந்த நிதி நிறுவனத்தில் அடகு வைக்கப்பட்டிருந்த 81 வாடிக்கையாளர்களின்‌ கடன்‌ கணக்குகளில்‌ இருந்த தங்க நகைகளை எடுத்து போலி நகைகளை மாற்றாக வைத்ததுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள்
கைது செய்யப்பட்டவர்கள்

புதிய வாடிக்கையாளர்களின்‌ பெயர்களில்‌ அந்த வாடிக்கையாளர்களுக்கே தெரியாமல்‌ போலியான ஆவணங்களை உருவாக்கி அவர்களின் கையொப்பங்கள் இட்டு கடன்‌ கணக்குகளில்‌ அடகு வைத்ததைப் போல பணத்தை எடுத்து கையாடல் செய்துள்ளனர். சுமார் 400 பவுன் வரை போலி நகைகளை அடகு வைத்து மோசடியில் ஈடுபட்டு 1 கோடி ரூபாய் வரை கையாடல் செய்துள்ளனர் என்பது தெரிய வந்தது. மோசடியில் ஈடுபட்ட 4 பேர் மீதும் குற்றப்பிரிவு போலீஸார் 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். மஞ்சூர் கெரப்பாடு பகுதியைச் சேர்ந்த நந்தினி(28), மஞ்சூர் கண்டிபிக்கை பகுதியைச் விஜயகுமார்(29) ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தலைமறைவில் இருக்கும் முக்கிய குற்றவாளிகளான மேலாளர் சாந்திபிரியா மற்றும் நகை மதிப்பீட்டாளர் ராஜூ ஆகிய இருவரையும் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.