சென்னை: போலீஸ் எனக்கூறி நகைகள், வெள்ளிக்கட்டிகள், பணம் வழிப்பறி - ஒரே நாளில் 2 சம்பவங்கள்!

சென்னையில் நகைக்கடை ஊழியரிடம் பைக்கில் வந்த இளைஞர்கள், தங்களை போலீஸ் என அறிமுகப்படுத்திக்கொண்டு தங்க நகைகள், பணத்தைப் பறித்துவிட்டு தப்பிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
கேரளாவிலுள்ள நகைக்கடையில் வேலை பார்த்துவருபவர் மனோஜ். இவர் பழைய தங்க நகைகளைப் புதுப்பிக்க கேரளாவிலிருந்து சென்னைக்கு வந்தார். பின்னர் தங்க நகைகள், பணத்துடன் சௌகார்பேட்டையிலுள்ள நகைப் பட்டறைக்குச் செல்ல என்.எஸ்.சி போஸ் சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது அவரைப் பின்தொடர்ந்து பைக்கில் இரண்டு பேர் வந்தனர். அவர்கள் மனோஜை வழிமறித்து தங்களை போலீஸ் என அறிமுகப்படுத்திக்கொண்டனர்.

பின்னர், மனோஜிடம், `நீ ஹவாலா பணத்தைக் கடத்துவதாகவும், திருட்டு நகைகளை வைத்திருப்பதாகவும் எங்களுக்கு ரகசியத் தகவல் கிடைத்திருக்கிறது. அதனால், உன்னை சோதனை செய்ய வேண்டும்’ என்று போலீஸ் பாணியில் கேட்டிருக்கின்றனர். அதற்கு மனோஜ், `நான் கேரளாவிலுள்ள நகைக் கடையில் வேலை பார்க்கிறேன்’ என்று கூறியிருக்கிறார். அதைக் காதில் வாங்கிக்கொள்ளாத அந்த இரண்டு பேரும், மனோஜ் கையில் வைத்திருந்த பையைப் பறித்திருக்கிறார்கள். பின்னர், `பையை காவல் நிலையத்தில் வந்து ஆவணங்களைக் காட்டி வாங்கிக்கொள்ளவும்’ என்று கூறிவிட்டுச் சென்றிருக்கிறார்கள்.
தன்னிடம் தங்க நகைகள், பணத்தை வாங்கிச் சென்றது போலீஸ் என நம்பிய மனோஜ், கேரளாவிலுள்ள தங்க நகைக்கடைக்குத் தகவல் தெரிவித்தார். உடனடியாக அவர்கள், சம்பவம் நடந்த இடம் யானைக்கவுனி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதி என்பதால், அங்கு சென்று விசாரிக்கும்படி கூறினர். இதையடுத்து மனோஜ், யானைக்கவுனி காவல் நிலையத்துக்குச் சென்று விவரத்தைக் கூறினார். அப்போது பைக்குள் 30 சவரன் தங்க நகைகள், 2 லட்சம் ரூபாய் இருந்ததாக யானைக்கவுனி போலீஸாரிடம் அவர் கூறியிருக்கிறார்.

உடனடியாக யானைக்கவுனி போலீஸார், தகவலை உயரதிகாரிகளுக்குத் தெரிவித்தனர். அதன் பிறகு சென்னையிலுள்ள காவல் நிலையங்களில் தங்க நகைகள், பணம் பறித்த சம்பவம் தொடர்பாக போலீஸார் விசாரித்தனர். அப்போது, போலீஸார் யாரும் மனோஜிடம் தங்க நகைகள், பணத்தை வாங்கிச் செல்லவில்லை என்று தெரிந்தது. இந்தத் தகவலை மனோஜிடம் போலீஸார் தெரிவித்தனர். அதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த மனோஜ் நகைகள், பணத்தை மீட்டுத் தரும்படி யானைக்கவுனி காவல் நிலையத்தில் புகாரளித்தார்.
அதன்பேரில் போலீஸார் சம்பவம் நடந்த இடத்துக்கு மனோஜை அழைத்துச் சென்று விசாரித்தனர். பின்னர் அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராப் பதிவுகளை போலீஸார் ஆய்வு செய்தனர். அப்போது பைக்கில் வரும் இரண்டு பேர் மனோஜிடம் பேசும் காட்சிகள் பதிவாகியிருந்தன. அதன் அடிப்படையில் போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர். பைக்கின் பதிவு எண்ணைக்கொண்டும் விசாரணை நடந்துவருகிறது.

இதற்கிடையில் மனோஜிடம் தங்க நகைகள், பணத்தைப் பறித்ததுபோல இன்னொரு சம்பவம் மிண்ட் தெருவில் நடந்திருக்கிறது. அந்தப் பகுதியில் வெள்ளிப் பட்டறை நடத்திவருபவர் மகேந்திரன். இவர், பட்டறைக்கு ஒரு கிலோ வெள்ளிக்கட்டிகள், வெள்ளித் தட்டுகளைக் பையில்வைத்து நடந்து சென்றபோது, பைக்கில் வந்த இரண்டு பேர், மகேந்திரனை வழிமறித்திருக்கிறார்கள். அப்போது அவர்கள், தங்களை போலீஸ் எனக் கூறி, மகேந்திரனிடமிருந்த வெள்ளிக்கட்டிகள், வெள்ளித் தட்டுகளை வாங்கிச் சென்றிருக்கிறார்கள். காவல் நிலையத்துக்கு வந்து ஆவணங்களைக் காட்டி வெள்ளிக்கட்டிகளை வாங்கிச் செல்லும்படி அவர்கள் கூறிவிட்டுச் சென்றனர். இது தொடர்பாக மகேந்திரன், ஏழுகிணறு காவல் நிலையத்துக்குச் சென்று விசாரித்தபோதுதான், அவரையும் போலீஸ் எனக் கூறி வழிப்பறிக் கொள்ளையர்கள் ஏமாற்றியது தெரியவந்தது. அது தொடர்பாக மகேந்திரன் அளித்த புகாரின்பேரில் ஏழுகிணறு போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர். இந்தச் சம்பவம் தொடர்பாகவும் சிசிடிவி பதிவுகளை போலீஸார் ஆய்வு செய்துவருகின்றனர். போலீஸ் எனக் கூறி தங்க நகைகள், வெள்ளிக்கட்டிகள், பணம் ஆகியவற்றை அடுத்தடுத்து கொள்ளையடித்த சம்பவங்கள், வடசென்னை வியாபாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றன.