Published:Updated:

கோல்டு பேஸ்ட், விபூதி பாக்கெட், ரூ.100 கோடி தங்கம்! -கடத்தல்காரர்களின் இலக்காகும் திருச்சி ஏர்போர்ட்

சி.ய.ஆனந்தகுமார்

தங்கத்தின் விலை நாளுக்கு நாள் கூடிக்கொண்டேபோகிறது. அதேபோல திருச்சி விமான நிலையத்தில் சிக்கும் கடத்தல் தங்கத்தின் அளவும் நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

கடத்தல் தங்கம்
கடத்தல் தங்கம்

திருச்சி விமான நிலையத்தில், கடந்த ஆறு மாதத்தில் பிடிபட்ட கடத்தல் தங்கத்தின் அளவு, 30 கிலோவை தாண்டிவிட்டது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 10 கோடி மதிப்பிலான தங்கம் சிக்கியுள்ளது.

கடந்த 6-ம் தேதி, திருச்சி மற்றும் கோவை விமான நிலையங்களுக்கு ஹை அலர்ட் வந்தது. அடுத்த சில நொடிகளில் அதிகாரிகள் பரபரப்பாக இயங்கினர். கோலாலம்பூரில் இருந்து துபாய்-கொழும்பு வழியாக திருச்சி வந்த ஶ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் வந்த பயணிகளை விமானப்படை நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் சோதனைசெய்தனர். அதில், 4 பேர் மீது அதிகாரிகளின் சந்தேக ரேகை படர்ந்தது. இதையடுத்து, அவர்களைத் தனியாக அழைத்துச்சென்று விசாரித்ததுடன், அவர்களிடம் சோதனை நடத்தினர்.

கடத்தல் தங்கம்
கடத்தல் தங்கம்

சோதனையில், சம்பந்தப்பட்ட நான்கு பேரும் 1 கிலோ 221 கிராம் தங்கத்தை மறைத்துக் கடத்தி வந்துள்ளனர். தொடர் விசாரணையில், அவர்கள் சென்னையைச் சேர்ந்த பைசல், சுல்தான், இப்ராஹிம், ஜாஹிர் உசேன், ராமநாதபுரம் முகமது யூசுப் என்பது தெரியவந்தது. இதையடுத்து, 4 பேரையும் கைது செய்த அதிகாரிகள், அவர்களிடம் இருந்த 1.31 கோடி மதிப்பிலான தங்கத்தைப் பறிமுதல் செய்து விசாரித்துவருகின்றனர்.

லேப்டாப்பில் தங்கம் கடத்திய விமான ஊழியர்!

இதேபோல், கடந்த திங்கள்கிழமை மலேசியாவிலிருந்து திருச்சி வந்த மலிண்டோ விமானத்தில் பணியாற்றும் ஊழிர்களின் உடைமைகளை மத்திய சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது, சென்னையைச் சேர்ந்த ஜும்மா கான் என்பவர் லேப்டாப்பில் மறைத்துவைத்திருந்த தங்கம் பிடிபட்டது. அதிகாரிகள் நடத்திய சோதனையில், அந்த தங்கம் 458 கிராம் என்றும் அதன் மதிப்பு 17 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் என்பதும் தெரியவந்தது. கடந்த வருடம் தங்கக் கடத்தலுக்குத் துணை போன திருச்சி சுங்க அதிகாரிகள் 6 பேர் உட்பட, 19 பேர் கைதுசெய்யப்பட்டனர். அதன்பிறகும் அதிகாரிகள் சிக்கியுள்ளனர். கடத்தலும் குறையவில்லை.

தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள்மீது நடவடிக்கை எடுக்கிறோம். இந்த விவகாரத்தில் துளியும் பாரபட்சம் காட்டுவதில்லை.
விமான நிலைய அதிகாரிகள்

'அயன்' திரைப்பட பாணியில்...

தொடர்ந்து, திருச்சியில் அதிகரித்துவரும் தங்கக் கடத்தலுக்கான யுக்திகள் பலவிதம். தங்கத்தைப் பொடிசெய்து கடத்துவது, ஆசனவாய் உள்ளிட்ட உடலின் பகுதிகளில் மறைத்துக் கடத்துவது, உடைமைகளில் மறைத்துக்கொண்டு வருவது என டிசைன் டிசைனாகக் கடந்த சில வருடங்களுக்கு முன்பு வெளியான அயன் திரைப்படத்தையே மிஞ்சும் அளவுக்கு தங்கக் கடத்தல் தொடர்கிறது.

கடந்த 1-ம் தேதி, மலேசியாவிலிருந்து ஏர் ஏசியா விமானத்தில் வந்த மயிலாடுதுறையைச் சேர்ந்த முகமது அப்துல் நாசர் என்பவரிடம் மத்திய சுங்கத்துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையில், அவர் தனது உடலின் ஆசனவாயில் 11 லட்சத்து 63 ஆயிரம் மதிப்பிலான 300 கிராம் எடையுள்ள மூன்று தங்கக் கட்டிகளை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.

இதேபோல கடந்த ஆகஸ்ட் 2-வது வாரம், சிங்கப்பூரிலிருந்து விமானத்தில் வந்த, கடலூர் மாவட்டம் திட்டக்குடியைச் சேர்ந்த அன்பழகன், புதுக்கோட்டையைச் சேர்ந்த பழனியப்பன் மற்றும் துபாயிலிருந்து வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் பயணம் செய்த திருச்சியைச் சேர்ந்த அகமது ஃபைசல் உள்ளிட்ட பயணிகளிடமிருந்து 36 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான 977 கிராம் தங்க நகைகளை மத்திய நுண்ணறிவுப் பிரிவினர் பறிமுதல் செய்தனர். அதில், 776 கிராம் தங்கச் செயினாகவும், 251 கிராம் தங்கத்தை பேஸ்ட் போன்று உருக்கி கூல்நிலையில் எடுத்து வந்ததும் தெரியவந்தது.

இதேபோல், மலேசியாவைச் சேர்ந்த ரோஸி அருணாசலம் என்பவர் 12 லட்சத்து 14 ஆயிரம் மதிப்பிலான 326 கிராம் தங்கத்தை கோலாலம்பூரிலிருந்து கடத்தி வந்தபோது பிடிபட்டார். சிங்கப்பூரில் இருந்து திருச்சி வந்த விமானத்தில் பயணம் செய்த புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த திருநாவுக்கரசு என்பவர், தன் உடலில் மறைத்துக் கொண்டுவந்த 8 லட்சத்து 63 ஆயிரம் மதிப்பிலான 229 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

திருச்சி விமான நிலையம்
திருச்சி விமான நிலையம்

விபூதி பாக்கெட்டில்...

கடந்த ஆகஸ்ட் மாதம், பக்திமயமாக வந்த திருப்பூரைச் சேர்ந்த ஜெயலட்சுமி என்பவரிடம் விசாரித்தபோது, தனது கைப்பையில் வைத்திருந்த விபூதி பாக்கெட்டில் 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 270 கிராம் எடையுள்ள தங்கச் சங்கிலி மற்றும் இரண்டு தங்கக் கட்டிகள் இருந்தன. தங்கக் கடத்தல் போன்று உயிரினங்களைக் கடத்துவதும் சமீபகாலமாக அதிகரித்துள்ளது.

கடந்த 5-ம் தேதி, திருச்சி விமான நிலையத்துக்கு கோலாலம்பூரிலிருந்து மலிண்டோ விமானத்தில் 2 ஆயிரம் அரியவகை ஆமைகளை உயிரோடு கடத்திவந்த சென்னையைச் சேர்ந்த பீர் முகமது முஸ்தபா சிக்கினார். அதைத் தொடர்ந்து, விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள், வனத்துறை அதிகாரிகள் மூலம் இந்தியாவின் காலநிலைக்கு சீன ஆமைகள் ஏற்றதல்ல என்பதால், மொத்த ஆமைகளையும் சீன நாட்டிற்கே திருப்பி அனுப்ப உள்ளனர். இதேபோல், சமீபகாலமாக வெளிநாடுகளிலிருந்து அரியவகை கடல் அட்டைகள் உள்ளிட்ட உயிரினங்கள் கடத்தப்படுவது வாடிக்கையாகி உள்ளது.

கடத்தல் குறித்து நம்மிடம் பேசியவர்கள், ``சென்னையைவிட திருச்சியிலிருந்து மற்ற பகுதிகளுக்கு சுலபமாகச் சென்றுவிடலாம் என்பதால் சர்வதேச கடத்தல்காரர்களின் முக்கிய தளமாக திருச்சி மாறிவருகிறது.

மலேசியா, சிங்கப்பூர், இலங்கை மற்றும் துபாய், குவைத் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் இருந்து திருச்சி வழியாக தங்கக் கடத்தல் அதிகரித்து வருகிறது. கடத்தல் தங்கம் சிக்கினால், அதிகாரிகள் மார்க்கெட் மதிப்பைவிட 2ல் 1 மடங்கு குறைவாகவே கணக்கிடுகிறார்கள். கடந்த ஆறு வருடத்தில் மட்டும் 100 கோடி ரூபாய் மதிப்புக்கும் மேலான கடத்தல் தங்கம் திருச்சி வழியாகச் சென்றுள்ளது.

கைப்பற்றப்பட்ட சீன ஆமைகள்
கைப்பற்றப்பட்ட சீன ஆமைகள்

கடத்தலுக்குத் துணைபோகும் அதிகாரிகள்

அதிகாரிகளும் இந்தக் கடத்தலுக்குத் துணைபோகிறார்கள். கடந்த வருடம் தங்கக் கடத்தலுக்குத் துணைபோன திருச்சி சுங்க அதிகாரிகள் 6 பேர் உட்பட, 19 பேர் கைதுசெய்யப்பட்டனர். அதன்பிறகும் அதிகாரிகள் சிக்கியுள்ளனர். கடத்தலும் குறையவில்லை. இன்னும் தீவிரமான நடவடிக்கைகள் மூலமே கட்டுப்படுத்த முடியும். இல்லையெனில், நாளுக்குநாள் கடத்தல் அதிகரிக்கத்தான் செய்யும்” என்கின்றனர் ஆதங்கத்துடன்.

இதுகுறித்து விமானநிலைய அதிகாரிகளிடம் பேசினோம். “தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள்மீது நடவடிக்கை எடுக்கிறோம். இந்த விவகாரத்தில் துளியும் பாரபட்சம் காட்டுவதில்லை. தொடர்ந்து கண்காணிப்பைத் தீவிரப்படுத்தி வருகிறோம்” என்கின்றனர் உறுதியாக.