Published:Updated:

அதிகரிக்கும் தங்கக் கடத்தல்... கோட்டைவிடுகிறதா திருச்சி சுங்கத்துறை?

சுங்கத்துறை
பிரீமியம் ஸ்டோரி
சுங்கத்துறை

கடந்த ஆறு மாதங்களில் மட்டும் 22 நபர்களிடமிருந்து கடத்தல் தங்கத்தைப் பறிமுதல் செய்திருப்பதாக, சுங்கத்துறையினர் சொல்கிறார்கள்.

அதிகரிக்கும் தங்கக் கடத்தல்... கோட்டைவிடுகிறதா திருச்சி சுங்கத்துறை?

கடந்த ஆறு மாதங்களில் மட்டும் 22 நபர்களிடமிருந்து கடத்தல் தங்கத்தைப் பறிமுதல் செய்திருப்பதாக, சுங்கத்துறையினர் சொல்கிறார்கள்.

Published:Updated:
சுங்கத்துறை
பிரீமியம் ஸ்டோரி
சுங்கத்துறை

கடந்த ஒரே ஆண்டில் 15 லட்சம் பயணிகள் வந்து சென்றதால், மூன்றாம் நிலையிலிருந்து இரண்டாம் நிலைக்குத் தரம் உயர்த்தப்பட்டிருக்கிறது திருச்சி சர்வதேச விமான நிலையம். தரம் உயர்த்தப்பட்டதாலோ என்னவோ, இந்த விமான நிலையம் வழியாக நடக்கும் தங்கக் கடத்தல் களும், அது தொடர்பான குற்றங்களும் அதிகரித்துவிட்டன.

உதாரணத்துக்கு சில சம்பவங்களைப் பார்ப்போம்...

அதிகரிக்கும் தங்கக் கடத்தல்... கோட்டைவிடுகிறதா திருச்சி சுங்கத்துறை?

சம்பவம் 1: சமீபத்தில், ‘அப்துல் மஜீத் என்பவரை பீர் முகம்மது என்பவர் கடத்திவிட்டார்’ என்று திருச்சி திரு.வி.க நகரைச் சேர்ந்த யாசர் அராபத் திருச்சி விமான நிலைய காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். போலீஸ் விசாரணையைத் தொடங்கிய சிறிது நேரத்திலேயே அப்துல் மஜீத்தை காவல் நிலையத்தில் ஒப்படைத்துவிட்டார் பீர் முகம்மது. பிரச்னை அத்துடன் முடிந்து விடவில்லை. அடுத்த சில நாள்களில் யாசர் அராபத்தைச் சிலர் காரில் கடத்த முயன்றார்கள். யாசர் அராபத்தின் அலறலைக் கேட்ட அந்தப் பகுதி மக்கள், கடத்தல் கும்பலைப் பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர். இதிலும் பீர் முகம்மது சம்பந்தப் பட்டிருந்தார். விசாரணையில் துபாயி லிருந்து இரண்டு கிலோ தங்கத்தைக் கடத்திவந்த ‘குருவி’ அப்துல் மஜீத், அதை பீர்முகம்மதுவிடம் ஒப்படைக் காததால் வந்த பிரச்னை என்று தெரியவந்தது.

அதிகரிக்கும் தங்கக் கடத்தல்... கோட்டைவிடுகிறதா திருச்சி சுங்கத்துறை?

சம்பவம் 2: துபாயிலிருந்து திருச்சிக்கு வந்த நஜீர் அகமது என்பவரிடம் நாகூர் மீரான், ஷேக் உஸ்மான் ஆகியோர் விமான நிலைய வாயிலில் சண்டை போட்டுக் கொண்டிருந்தனர். போலீஸார் அவர்களை அள்ளிவந்து விசாரித்ததில், நஜீர் அகமது ஒரு கிலோ தங்கத்தைக் கடத்திவந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தங்கத்தைச் சம்பந்தப்பட்ட நபர்களிடம் ஒப்படைக்காததால் வந்த பிரச்னைதான் இதுவும்.

அதிகரிக்கும் தங்கக் கடத்தல்... கோட்டைவிடுகிறதா திருச்சி சுங்கத்துறை?

சம்பவம் 3: துபாயிலிருந்து திருச்சிக்கு வந்த மும்தாஜையும் அவரின் தந்தையையும் கடத்திச் சென்ற ஒரு கும்பல், ஹோட்டல் அறையில்வைத்து சித்ரவதை செய்திருக்கிறது. தகவல் அறிந்த போலீஸார் ஹோட்டலுக்குச் சென்று இருவரையும் மீட்டதுடன், அவர்களைக் கடத்திய முபாரக் அலி, சாகுல் அமீது ஆகியோரைக் கைதுசெய்தனர். இதுவும் தங்கக் கடத்தல் தொடர்பான பிரச்னைதான்.

இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம்... கடந்த ஆறு மாதங்களில் மட்டும் 22 நபர்களிடமிருந்து கடத்தல் தங்கத்தைப் பறிமுதல் செய்திருப்பதாக, சுங்கத்துறையினர் சொல்கிறார்கள். ஆனால், இவையெல்லாம் கணக்கு காட்ட போடப்பட்ட கண்துடைப்பு வழக்குகள் என்று கண்சிமிட்டுகிறார்கள் சீனியர் ‘குருவிகள்.’ மேலே பார்த்த மூன்று சம்பவங்களுமே இதை உண்மை என்றே நிரூபிக்கின்றன. ஆம், இந்த மூன்று சம்பவங்களிலுமே சுங்கத்துறையினரிடம் பிடிபடாமல் தங்கத்தை வெளியே கொண்டு வந்திருக்கிறார்கள் கடத்தல்காரர்கள். விமானப் போக்குவரத்து குறித்த ஆய்வாளரும், சமூக ஆர்வலருமான உபைதுல்லா இது தொடர்பான சில தகவல்களைப் பகிர்ந்து கொண்டார். “ஆண்டுக்கு 220 முதல் 250 டன் அளவுக்குச் சட்ட விரோதமாக இந்தியாவுக்குள் தங்கம் கொண்டுவரப்படுவதாக ‘உலக தங்க கவுன்சில்’ சொல்கிறது. மும்பை, சென்னை, மங்களூரு, திருவனந்தபுரம், மதுரை, திருச்சி ஆகிய விமான நிலையங்களின் வழியாகத்தான் அதிக அளவில் கடத்தல் நடப்பதாகவும் சொல்கிறது, உலக தங்க கவுன்சில். தமிழகத்தின் மையப்பகுதியில் திருச்சி அமைந்திருப்பதாலும், சென்னை விமான நிலையத்தைவிட கெடுபிடிகள் குறைவு என்பதாலும் திருச்சி விமான நிலையம் வழியாக நடக்கும் தங்கக் கடத்தல் அதிகரித்துவிட்டது.

கடந்த மூன்று ஆண்டுகளில் 150 கோடி ரூபாய் மதிப்பிலான கடத்தல் தங்கம் திருச்சி விமான நிலையம் வழியாக வந்துள்ளது. ஆனால், பிடிபட்ட தங்கத்தின் மதிப்பு, பதியப்பட்ட வழக்குகள் போன்றவை பற்றிய முழுமையான தகவல்களை சுங்கத்துறையினர் வெளியிடுவதில்லை. மற்ற சர்வதேச விமான நிலையங்களில் பிடிபட்ட கடத்தல் தங்கம் குறித்த தகவல்களை இணையதளத்தில் பதிவுசெய்கிறார்கள். திருச்சி விமான நிலையத்தில் அந்த வெளிப்படைத்தன்மை இல்லை.

 யாசர் அராபத் - உபைதுல்லா
யாசர் அராபத் - உபைதுல்லா

அதேபோல, அதிநுட்பமான ஸ்கேனர்களைக் கடந்து தங்கத்தை எப்படிக் கடத்திக்கொண்டு வர முடியும் என்ற கேள்வியும் எழுகிறது. இதனால் தங்கம் கடத்தி வருபவர்களுக்கும், அதிகாரிகளுக்கும் தொடர்பு இருக்குமோ என்ற சந்தேகம் எழுகிறது. கடந்த 2018-ம் ஆண்டு தங்கக் கடத்தலுக்குத் துணைபோன திருச்சி சுங்க அதிகாரிகள் ஆறு பேர் உட்பட, 19 பேர் கைதுசெய்யப்பட்டனர். அதுமட்டுமல்ல... கடந்த 2015, மார்ச் 20-ம் தேதி திருச்சி வில்லியம்ஸ் சாலையிலுள்ள மத்திய கலால் - சுங்கத்துறை ஆணையர் அலுவலகத்தின் பாதுகாப்புப் பெட்டகத்தில் வைக்கப்பட்டிருந்த 14.5 கிலோ கடத்தல் தங்கம் திருடுபோனது. இந்த வழக்கு சி.பி.ஐ-க்கு மாற்றப்பட்டும், இதுவரை வழக்கில் எந்த முன்னேற்றமும் இல்லை. இதிலும் அதிகாரிகளின் தலையீடு இருக்கலாம். எனவே, கடுமையான நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இந்தக் கடத்தலை தடுக்க முடியும்” என்றார் விரிவாக.

திருச்சி சுங்கத்துறை உதவி கமிஷனர் தயாளனை சந்தித்துப் பேசினோம். “இது குறித்துப் பேச எனக்கு அனுமதி இல்லை. உயரதிகாரிகளிடம் ஒப்புதல் பெற்றுவிட்டு உங்களிடம் பேசுகிறேன்” என்று முடித்துக்கொண்டார்.

தொடரும் தங்கக்கடத்தல்களைப் பார்க்கும்போது கண்காணிப்பு ஏற்பாடுகளில் ஓட்டை இருப்பது மட்டும் தெளிவாகத் தெரிகிறது!