Published:Updated:

நாயகன் பட பாணியில் கடத்தல்; கடலில் மூழ்கி மீட்ட கோஸ்ட் கார்டு! - அதிர்ச்சி கொடுத்த மீனவர்கள்

கடத்தல் தங்கம்
கடத்தல் தங்கம் ( விகடன் )

மண்டபம் கடலோரக் காவல் படையினர் உதவியுடன் வருவாய் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் காத்திருந்தனர். அப்போது அப்பகுதியில் நாட்டுப்படகு ஒன்று வந்தது. இதைப் பிடித்து அதிகாரிகள் அதில் இருந்த மீனவர்கள் இருவரிடம் விசாரணை நடத்தினர்.

இலங்கையிலிருந்து கடத்தி வரப்பட்ட போது கடலில் மூழ்கடிக்கப்பட்ட சுமார் 14 கிலோ தங்கக் கட்டிகளை இந்தியக் கடலோரக் காவல் படையினர் உதவியுடன் மத்திய வருவாய் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் கைபற்றினர். இந்தக் கடத்தல் தொடர்பாக மண்டபம் பகுதியைச் சேர்ந்த இருவரைக் கைது செய்த வருவாய் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடத்தல் தங்கம்
கடத்தல் தங்கம்
விகடன்

இலங்கையிலிருந்து நாட்டுப்படகுகள் மற்றும் விசைப்படகுகள் மூலம் தங்கக் கட்டிகள் இந்தியாவிற்குக் கடத்தி வரப்படுவது சமீப காலமாக அதிகரித்து வருகிறது. கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்கள் மீனவர்களிடம் அதிக பண ஆசையினைத் தூண்டி அவர்களை இந்தக் கடத்தல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தி வருகின்றனர்.

மேலும், இலங்கையிலிருந்து கடத்தி வரப்படும் தங்கத்திற்குப் பதிலாக இங்கிருந்து கஞ்சா, பீடி இலைகள், மற்றும் போதைப் பொருள்கள் இலங்கைக்குக் கடத்திச் செல்லப்படுகின்றன. கடந்த சில நாள்களுக்கு முன் ராமேஸ்வரம், தனுஷ்கோடி, மண்டபம் பகுதிகளில் இது போன்று கடத்துவதற்காகக் கொண்டு வரப்பட்ட பீடி இலைகள் மூடை மூடையாகச் சிக்கின.

இதைத் தொடர்ந்து இலங்கையிலிருந்து வந்த ஒரு படகினை இந்தியக் கடற்படையினர் ஹெலிகாப்டர் மூலம் துரத்திப் பிடித்தனர். தனுஷ்கோடி கரைக்குக் கொண்டு வரப்பட்ட அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையினைத் தொடர்ந்து அவர்களது படகில் மறைத்து வைத்திருந்த தலா 100 கிராம் எடை கொண்ட 34 தங்கக் கட்டிகள் சிக்கின.

கடலிருந்து தங்கம் மீட்ட வீரர்கள்
கடலிருந்து தங்கம் மீட்ட வீரர்கள்
விகடன்

இந்நிலையில் நேற்று காலை இலங்கையிலிருந்து தங்கம் கடத்தி வரப்படுவதாகத் தூத்துக்குடியில் உள்ள வருவாய் புலனாய்வு அதிகாரிகளுக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து மண்டபம் கடலோரக் காவல் படையினர் உதவியுடன் வருவாய் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் காத்திருந்தனர். அப்போது அப்பகுதியில் நாட்டுப்படகு ஒன்று வந்தது. இதைப் பிடித்து அதிகாரிகள் அதில் இருந்த மீனவர்கள் இருவரிடம் விசாரணை நடத்தியதுடன், அவர்களது படகினையும் சோதனையிட்டனர். ஆனால், சோதனையில் எதுவும் சிக்கவில்லை. இதையடுத்து மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்ட மீனவர்கள் இருவரையும் விசாரணைக்காக தூத்துக்குடி அழைத்துச் சென்றனர்.

அங்கு நடத்திய விசாரணையில் தாங்கள் தங்கம் கடத்தி வந்ததையும், வழியில் கடலோரக் காவல் படையினரைக் கண்டவுடன் படகில் இருந்த தங்கக் கட்டி பார்சல்களில் கல்லினைக் கட்டி முயல் தீவு அருகே கடலில் போட்டுவிட்டு அந்த இடத்தை ஜி.பி.எஸ் கருவி மூலம் அடையாளம் செய்துகொண்டு வந்ததாகவும் தெரிவித்துள்ளனர். இதைத் தொடர்ந்து இன்று காலை மீனவர்கள் இருவரும் மண்டபம் கடலோரக் காவல் படைக்குச் சொந்தமான ஹோவர் கிராஃப்ட் கப்பலில் அப்பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

கடலிலிருந்து மீட்கப்பட்ட தங்கக் கட்டி பார்சல்கள்
கடலிலிருந்து மீட்கப்பட்ட தங்கக் கட்டி பார்சல்கள்
விகடன்

கடலில் மீனவர்கள் காட்டிய அடையாள மார்க்கினைக் கொண்டு இந்தியக் கடலோரக் காவல் படையின் நீச்சல் வீரர்கள் மூலம் கடலினுள் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. இதில் கடலிலிருந்து மீட்கப்பட்ட ஒரு சாக்குப் பையில் 5 பார்சல்கள் இருந்தன. அதைப் பிரித்துப் பார்த்த போது அதில் சுமார் 14 கிலோ தங்கக் கட்டிகள் சிக்கின. அவற்றை மீட்ட வருவாய் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் அதிகாரிகள் கடத்தலில் ஈடுபட்ட மண்டபம் மரைக்காயர் பட்டிணம் பகுதியைச் சேர்ந்த செய்யது என்பவரின் மகன் ஆஷிக், புகாரி என்பவரின் மகன் பாரூக் ஆகியோரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நாயகன் சினிமா படப் பாணியில் கடத்தி வரப்பட்ட சுமார் 6 கோடி மதிப்பிலான கடத்தல் தங்கம் சிக்கியிருப்பது மீனவர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு