கிருஷ்ணகிரி மாவட்டம், குருபரப்பள்ளி அருகே, சென்னை – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில், வேலூரிலிருந்து ராணுவ போர் தடவாளங்களை ஏற்றிக்கொண்டு, மத்திய தொழிற்சாலை பாதுகாப்புப்படையினர் (CISF) இன்று, உதவி ஆய்வாளர் பிரதாப் தலைமையில், மூன்று வாகனங்களில் பெங்களூரு நோக்கிச் சென்றுகொண்டிருந்தனர். அப்போது, குருபரப்பள்ளி அருகே வந்தபோது கிருஷ்ணகிரியிலிருந்து ஓசூர் நோக்கிச் சென்ற அரசு பஸ், ராணுவ வாகனத்தை முந்த முயன்றிருக்கிறது.
இதனால், திடீரென்று ஆத்திரமடைந்த அந்தப் பாதுகாப்புப்படை வீரர்கள், அரசு பஸ்சை நிறுத்தவைத்து அதை இயக்கிவந்த டிரைவர் தமிழரசை, சரமாரியாகத் தாக்கியிருக்கின்றனர். இதையடுத்து, அரசு பஸ் டிரைவர் லாரிக்கு முன்பு, பெங்களூர் ரோட்டில் பஸ்ஸை நிறுத்திய நிலையில், ‘பாதுகாப்புப்படை வீரர்கள் டிரைவரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்’ எனக் கூறி, டிரைவர் தமிழரசுக்கு ஆதரவாக பஸ்ஸில் பயணித்த மக்கள், அங்குள்ளவர்கள் என 200-க்கும் மேற்பட்டோர் பாதுகாப்புப்படை வீரர்களிடம் வாக்குவாதம் செய்தனர்.
‘பிஸ்டல்’ எடுத்ததால் பரபரப்பு!
பேசிக்கொண்டிருந்தபோது, கையில் துப்பாக்கி ஏந்தியிருந்த பாதுகாப்புப்படை வீரர்கள் மக்களை மிரட்டியதுடன், அவர்களுக்கு மத்தியில் வந்த உதவி ஆய்வாளர் பிரதாப், அவர் வைத்திருந்த ‘பிஸ்டல்’ துப்பாக்கியை ஏந்தியதும், வெகுண்டெழுந்த மக்கள் அவர்களிடம் கடுமையாக வாக்குவாதம் செய்தனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார், இருதரப்பிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர்.
மன்னிப்புக் கேட்காமல் விடமாட்டோம்...
‘டிரைவரிடம் மன்னிப்புக் கேட்காமல், பாதுகாப்புப்படை வீரர்கள் இங்கிருந்து நகர முடியாது, அவர்களது வாகனமும் செல்லாது’ எனக் கூறிய மக்கள், மீண்டும் சாலைமறியல் செய்தனர். பிறகு டிரைவர் தமிழரசிடம், உதவி ஆய்வாளர் பிரதாப், பாதுகாப்புப்படை வீரர்கள் மன்னிப்புக் கேட்டனர்.
அதன்பிறகு, மக்கள் பாதுகாப்புப்படை வீரர்கள், அவர்களது வாகனங்களை விடுவித்து, போராட்டத்தைக் கைவிட்டு கலைந்துசென்றனர். காயமடைந்த டிரைவர் தமிழரசு அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கிறார்.
இந்தச் சம்பவத்தால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டதுடன், சென்னை – பெங்களூரு ரோட்டில் அரை மணி நேரம் போக்குவரத்து ஸ்தம்பித்தது. குருபரப்பள்ளி போலீஸார் சம்பவம் குறித்து விசாரிக்கின்றனர்.