Published:Updated:

` ரசாயனப் பவுடரைக் கலந்து கொடுத்துக் கொன்றேன்!'‍- பேராசிரியர் கொலையில் கைதான அரசு ஊழியர்

சென்னைப் பேராசிரியரை பிரசாதத்தில் விஷம் வைத்துக் கொன்றதால் கைதான அரசு ஊழியர், அதிர்ச்சி வாக்குமூலம் அளித்துள்ளார்.

விஷம் கொடுத்து கொல்லப்பட்ட பேராசிரியர்
விஷம் கொடுத்து கொல்லப்பட்ட பேராசிரியர்

சென்னை காசிமேடு சூரிய நாராயணன் தெருவைச் சேர்ந்த கார்த்திக் (42), அங்குள்ள தனியார் கல்லூரில் பேராசிரியராகப் பணியாற்றிவந்தார். ஆட்குறைப்பு நடவடிக்கையால் வேலையை இழந்தார் கார்த்திக். இவரது மனைவி சரண்யா (30). இந்தத் தம்பதிக்கு 2 மகன்கள் இருக்கின்றனர். வேலை பறிபோனதால், கார்த்திக் மனவேதனையில் இருந்துள்ளார். சில ஆண்டுகளுக்கு முன்பு, அரசு வேலை வாங்கித்தருவதாக சென்னை, வியாசர்பாடி புதுநகரைச் சேர்ந்த வேலாயுதம் என்பவரிடம் 3 லட்ச ரூபாய் கொடுத்துள்ளார் கார்த்திக். பல வருடங்கள் ஆகியும் அரசு வேலை கிடைக்காததால், வேலை வாங்கித் தர வேண்டாம் என்றும் நான் கொடுத்த பணத்தைத் திரும்ப கொடுத்துவிடுங்கள் என்றும் வேலாயுதத்திடம் கேட்டுவந்துள்ளார். ஆனால், வேலாயுதம் பணம் கொடுக்காமல் இழுத்தடித்து வந்துள்ளார். ஒரு கட்டத்தில், பணம் தருவதாகக் கூறி முல்லை நகருக்கு அழைத்துள்ளார் வேலாயுதம்.

3 லட்ச ரூபாயைக் கொடுக்கும்படி தொல்லை கொடுத்துவந்தார். இதனால், அவரைத் தீர்த்துக்கட்ட முடிவுசெய்தேன். இதற்காக, நான் பணியாற்றிவரும் அலுவலகத்திலிருந்து ரசாயனப் பவுடரை எடுத்துவந்தேன்.
கைதான வேலாயுதம் வாக்குமூலம்

இரு சக்கர வாகனத்தில் மனைவியுடன் வந்துள்ளார் கார்த்திக். வேலாயுதம் அவர்களிடம், சாய்பாபா கோயில் பிரசாதம் எனக் கூறி, அதில் விஷம் வைத்துக் கொடுத்துள்ளார். இதை சாப்பிட்ட இருவரும் மயக்கம் அடைந்தனர். அங்கிருந்து வேலாயுதம் தப்பிச்சென்றுவிட்டார். மயங்கிக் கிடந்த இருவரையும் பொதுமக்கள், ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பரிசோதனை செய்த டாக்டர்கள், ஏற்கெனவே கார்த்திக் இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். சரண்யாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. இதுகுறித்து எம்.கே.பி.நகர் காவல்துறையினர் வேலாயுதத்தைத் தேடி வந்தனர். இந்த நிலையில், வேலாயுதத்தை (45) காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர்.

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், `` சம்பவம் நடந்த பகுதியில் சிசிடிவி கேமரா இல்லாததால், அருகில் இருந்த கடைகளில் இருந்த சிசிடிவி கேமராவை ஆய்வுசெய்தோம். அதில் கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் கார்த்திக்கின் மனைவி சரண்யாவிடம் விசாரணை நடத்தினோம். அவர், வேலாயுதத்தின் முகவரியைக் கூறினார். அதன்படி வேலாயுதத்தைக் கண்காணித்தோம். ஆனால், அவர் தலைமறைவாக இருந்தார். இந்தநிலையில், அவரை நேற்று கைதுசெய்தோம். வேலாயுதம், கிண்டியில் உள்ள மாநில அரசின் உணவு பாதுகாப்பு ஆராய்ச்சி மையத்தில் அலுவலக உதவியாளராகப் பணியாற்றிவருகிறார்.

கைதான அரசு ஊழியர் வேலாயுதம்
கைதான அரசு ஊழியர் வேலாயுதம்

அவரிடம் விசாரணை நடத்தினோம். அப்போது அவர், கார்த்திக் என்னிடம் அறிமுகமான பின்னர், நான் பணியாற்றிவரும் துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறினேன். இதற்கு 3 லட்ச ரூபாய் வேண்டும் என்று சொன்னேன். இதை நம்பிய கார்த்திக், 3 லட்ச ரூபாய் கொடுத்தார். திடீரெனக் கல்லூரிப் பேராசிரியர் வேலை பறிபோய்விட்டதாக கார்த்திக் என்னிடம் கூறினார். அதனால் தான் கொடுத்த 3 லட்ச ரூபாயைக் கொடுக்கும்படி தொல்லைகொடுத்துவந்தார். இதனால், அவரைத் தீர்த்துக்கட்ட முடிவுசெய்தேன். இதற்காக, நான் பணியாற்றி வரும் அலுவலகத்திலிருந்து ரசாயனப் பவுடரை எடுத்துவந்தேன்.

`வாங்கிய ரூ.3 லட்சத்தைத் தருகிறேன், வாங்க!'‍‍ - பிரசாதத்தில் விஷம் வைத்து சென்னை பேராசிரியர் கொலை

சம்பவத்தன்று, பணம் தருகிறேன் என்று கூறி கார்த்திக்கையும் அவரது மனைவியையும் வரவழைத்தேன். வந்ததும், சாய்பாபா கோயில் பிரசாதத்தில் பவுடரைக் கலந்து கொடுத்தேன். இருவரும் சாப்பிட்டவுடன் மயங்கிவிட்டனர். தலைமறைவாக இருந்த என்னைக் காவல்துறையினர் பிடித்துவிட்டனர்" என்று கூறியதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட வேலாயுதத்தை எம்.கே.பி.நகர் இன்ஸ்பெக்டர் மனோன்மணி, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார்.

மனைவியுடன் கார்த்திக்
மனைவியுடன் கார்த்திக்

நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து அவரைச் சிறையில் அடைத்தனர். விஷம் கொடுத்து கொல்லப்பட்ட கார்த்திக்கின் மனைவி சரண்யாவுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அரசு வேலைக்காகப் பணம் கொடுத்து ஏமாந்ததோடு, பேராசிரியர் கார்த்திக் விஷம் கொடுத்து கொல்லப்பட்ட சம்பவம் இந்தப் பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.