Published:Updated:

`கன்டெய்னர் கடத்தலுக்கு ஸ்கெட்ச் போட்ட அரசு ஊழியர்!' - மாவுக்கட்டுக்கு ஆளான 4 கொள்ளையர்கள்

வேலூர் அருகே லாரியைக் கடத்திய கொள்ளைக் கும்பலைச் சேர்ந்த 4 பேர், போலீஸார் துரத்தியதில் தடுமாறி விழுந்தனர். இதில் கை, கால்கள் முறிந்த அவர்களுக்கு மாவுக்கட்டு போடப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கால் முறிந்து சிகிச்சை பெறும் நபர்
கால் முறிந்து சிகிச்சை பெறும் நபர்

சென்னையைச் சேர்ந்தவர் வெங்கடேசன். இவருக்குச் சொந்தமான கன்டெய்னர் லாரி, சென்னை துறைமுகத்திலிருந்து பல லட்சம் ரூபாய் மதிப்பிலான வாகன உதிரி பாகங்களுடன் நேற்று முன்தினம் இரவு ஓசூருக்குப் புறப்பட்டது. தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிபட்டியைச் சேர்ந்த துரை என்பவர் லாரியை ஓட்டினார். சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் வேலூரை அடுத்த பூட்டுத்தாக்குப் பகுதிக்கு வந்ததும், லாரியை நிறுத்திவிட்டு ஓட்டுநர் அருகில் உள்ள ஹோட்டலில் சாப்பிடச் சென்றார்.

கையில் மாவு கட்டுடன் கொள்ளையன்
கையில் மாவு கட்டுடன் கொள்ளையன்

இதனை நோட்டமிட்ட கொள்ளையர்கள் லாரியைக் கடத்தினர். ஓட்டுநர் உடனடியாக லாரி உரிமையாளருக்குப் போன் மூலம் தகவல் கொடுத்துவிட்டு அருகில் உள்ள ரத்தினகிரி காவல் நிலையத்துக்குச் சென்று புகார் அளித்தார். விரைந்து செயல்பட்ட போலீஸார், லாரியில் இருந்த ஜி.பி.எஸ் கருவியை `டிராக்’ செய்தனர். கடத்தப்பட்ட கன்டெய்னர் லாரி வேலூரைக் கடந்து கொணவட்டம் நோக்கிச் சென்றுகொண்டிருப்பதை போலீஸார் கண்டறிந்தனர். உடனே, வாக்கி டாக்கி மூலம் வேலூர் போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர்.

ரத்தினகிரி போலீஸாரும் டூ வீலரில், லாரி சென்ற வழியைப் பின்தொடர்ந்து வேகமாகச் சென்றனர். வேலூர் விமான நிலைய விரிவாக்கப்பணி நடைபெற்றுவரும் அப்துல்லாபுரம் பகுதியில் கன்டெய்னர் லாரியை போலீஸார் அதிரடியாகச் சுற்றி வளைத்தனர். லாரியிலிருந்த 5 பேரைப் பிடிக்க முயன்றபோது, ஒருவர் தப்பி ஓடிவிட்டார். 4 பேர் சிக்கிக்கொண்டனர். விசாரணையில், வேலூர் விருதம்பட்டு லோகேஷ் (21), முத்துமண்டபம் அன்பழகன் (24), சேண்பாக்கம் அசோக்குமார் (29) மற்றும் ராக்கேஷ் என்கிற ராம்குமார் (22) ஆகியோர் என்பது தெரியவந்தது.

கால் முறிந்து சிகிச்சை பெறும் கொள்ளையன்
கால் முறிந்து சிகிச்சை பெறும் கொள்ளையன்

இவர்களுக்குத் தலைவனாக செயல்பட்டுவந்தது, வேலூர் தொரப்பாடியில் உள்ள அரசு வேளாண்மைத் துறை அலுவலகத்தில் பணிபுரிந்துவரும் யாசீம் என்பதும் தெரியவந்திருக்கிறது. யாசீம் கடத்தலுக்கு மூளையாக இருந்து திட்டம் வகுத்துக் கொடுக்க மற்றவர்கள் லாரி உள்ளிட்ட சரக்கு வாகனங்களைக் கடத்தியுள்ளனர். இதுவரை பல்வேறு வாகனங்களைக் கடத்தி வேலூர் முத்துமண்டபம் பகுதியில் உதிரி பாகங்களாக பிரித்து விற்பனை செய்துவந்ததாகவும் போலீஸாரிடம் ஒப்புக்கொண்டுள்ளனர்.

தலைமறைவாக உள்ள கடத்தல் கும்பலின் தலைவனான அரசு ஊழியர் யாசீமை போலீஸார் தீவிரமாகத் தேடிவருகிறார்கள். பிடிபட்டவர்களிடமிருந்து கன்டெய்னர் லாரி, இரண்டு டூ வீலர்கள், ஒரு கார் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதனிடையே, லாரியை போலீஸார் சுற்றிவளைத்தபோது அதிலிருந்து குதித்த கொள்ளையர்கள் 4 பேரும் கண்மூடித்தனமாகக் கரடுமுரடான பாதையில் ஓடியதால் தடுமாறி விழுந்தனர். இதில் 4 பேருக்கும் கை, கால்களில் முறிவு ஏற்பட்டது.

கை முறிந்து சிகிச்சை பெறும் கொள்ளையர்
கை முறிந்து சிகிச்சை பெறும் கொள்ளையர்

இதனால் வலி தாங்க முடியாமல் ``அய்யோ... அம்மா’’ என்று அலறியதாக போலீஸார் கூறுகிறார்கள். பின்னர், மனிதாபிமான அடிப்படையில் கொள்ளையர்கள் நால்வரையும் மருத்துவமனைக்கு தூக்கிச் சென்று முறிவு ஏற்பட்ட கை, கால்களில் மாவுக்கட்டு போட்டு சிகிச்சை அளித்துள்ளனர். `குணமடைந்த பிறகு 4 பேரும் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்படுவார்கள்' என்று போலீஸார் கூறினர்.