Published:Updated:

சந்தோஷ்குமாரை மிரட்டிய ஆளுங்கட்சி புள்ளி யார்? - ரயில் முன் பாய்ந்து அரசுப் பொறியாளர் தற்கொலை...

சந்தோஷ்குமார்
பிரீமியம் ஸ்டோரி
News
சந்தோஷ்குமார்

அவர் போன்ல பேசிக்கிட்டே ரயில் வர்றதை கவனிக்காம தண்டவாளத்தை கிராஸ் பண்ணியிருக்காரு. அப்ப ரயில் மோதி இறந்துட்டாரு

நெல்லையில் ஆறு வருடங்களுக்கு முன்பு அரசியல்வாதிகளின் நெருக்கடி தாங்க முடியாமல் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார் வேளாண் பொறியாளர் முத்துக்குமாரசாமி. இப்போது அதேபோன்றதொரு சம்பவம் நெல்லையில் நடந்திருக்கிறது. ராதாபுரம் யூனியன் ஆபீஸில் கிராமப் பஞ்சாயத்துப் பிரிவின் பொறியாளராகப் பணிபுரிந்த சந்தோஷ்குமார், டிசம்பர் 8-ம் தேதி ஓடும் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டிருக்கிறார். இதையடுத்து, ‘‘அரசியல்வாதிகள் சிலரது முறைகேட்டுக்குத் துணைபோக மறுத்ததால், அவர்களின் நெருக்கடி தாங்க முடியாமல்தான் சந்தோஷ்குமார் தற்கொலை செய்துகொண்டார்’’ என்ற குற்றச்சாட்டு அரசு அலுவலர்களைக் கொதிக்கவைத்திருக்கிறது.

கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டம் அருகே காப்புக்காடு பின்பாதிரிவிளையைச் சேர்ந்தவர் சந்தோஷ்குமார். அவரின் மனைவி ஷோபா. மகள், பொறியியல் பட்டதாரி. மகன், ப்ளஸ் ஒன் படிக்கிறார். டிசம்பர் 8-ம் தேதி சந்தோஷ்குமார் தனது பைக்கில் காவல்கிணறு ரயில்வே கிராஸிங் அருகே சென்றுகொண்டிருந்தார். ரயில் வரும் நேரம் என்பதால், ரயில்வே கேட் அடைக்கப்பட்டிருந்தது. கேட்டில் காத்திருந்தவருக்கு அலைபேசியில் அழைப்பு வரவே, அதில் பேசியவர் திடீரென்று ஓடிச் சென்று வேகமாக வந்துகொண்டிருந்த ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார். அதிர்ச்சியூட்டும் இந்தச் சம்பவத்தின் பின்னணியில் என்ன நடந்தது என்று ராதாபுரம் யூனியன் அலுவலக வட்டாரத்தில் விசாரித்தோம்.

சந்தோஷ்குமாரை மிரட்டிய ஆளுங்கட்சி புள்ளி யார்? - ரயில் முன் பாய்ந்து அரசுப் பொறியாளர் தற்கொலை...

“சந்தோஷ்குமாருக்கு கடந்த சில மாசமாகவே நிறைய நெருக்கடி இருந்துச்சு. செய்யாத வேலைக்கு பில் போட்டுக் கொடுக்கச் சொல்லி கட்சிக்காரங்க சிலபேரு அழுத்தம் கொடுத்தாங்க. அதுக்கு சந்தோஷ்குமார் மறுத்ததால, அவரைத் தொடர்ந்து மிரட்டியிருக்காங்க. ஏற்கெனவே செய்யாத தவறுக்கு அவர்மேல லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணையும், துறைரீதியான விசாரணையும் நடந்துக்கிட்டிருக்கு’’ என்றவர்கள் அது பற்றி விளக்கினார்கள்.

‘‘ஒன்பது மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடந்தப்ப, சமூகரெங்கபுரம் பஞ்சாயத்து செயலாளரா இருந்த பாலசுப்பிரமணியம், ரெண்டு அரசு ஒப்பந்ததாரர்கள் வங்கிக் கணக்குல 17 லட்சம் ரூபாயைச் செலுத்தியிருக்காரு. செய்யாத வேலைக்குப் பணம் வந்ததால அவங்க ரெண்டு பேரும் குழப்பத்துல இருந்திருக்காங்க. அப்போ அவங்ககிட்ட பேசுன பாலசுப்பிரமணியம், ‘பணம் தவறுதலா உங்க வங்கிக் கணக்குக்கு வந்துடுச்சு... அதைக் கொடுத்துடுங்க’னு கேட்டிருக்காரு. இதுல ஏதோ வில்லங்கம் இருக்குன்னு ஒப்பந்ததாரர், கலெக்டர்கிட்ட புகார் செஞ்சுட்டார். இந்த விவகாரத்துல யூனியன் பொறியாளரா இருந்த சந்தோஷ்குமாரையும் சிக்கவெச்சுட்டாங்க. அதுலயே ரொம்பவும் நொந்து போயிருந்தாரு. இதுக்கு நடுவுலதான் ஆளுங்கட்சிக்காரங்க சிலர், போர் போட்டதா பல லட்சம் ரூபாய்க்கு போலி பில்களைப் போடச் சொல்லி வற்புறுத்தியிருக்காங்க. அதுக்கு சந்தோஷ்குமார் ஒத்துழைக்கலை. ஆனாலும் தொடர்ந்து மிரட்டுனதுனால கடுமையான மன அழுத்தத்துல இருந்தார். ஆனா, இப்படி ரயில் முன்னாடி பாய்ஞ்சு உயிரைவிடுவாருன்னு நினைச்சுக்கூட பார்க்கலை’’ என்றார்கள் வேதனையுடன்.

சந்தோஷ்குமாரின் சொந்த ஊரான காப்புக்காடு பின்பாதிரிவிளை கிராமத்துக்குச் சென்றோம். அவரின் மனைவி ஷோபா, ‘‘வேலையை விட்டுட்டு வந்துடுன்னு எவ்வளவோ சொன்னேனே... கேட்காம அநியாயமா உசுர விட்டுட்டியே...’’ என்று கதறிக் கொண்டிருந்தார். அவர்கள் குடும்பத்தில் யாருமே பேசும் நிலையில் இல்லை.

இந்தச் சம்பவத்தின் பின்னணியில் ஆளுங்கட்சியினர் இருப்பதாகக் குற்றம்சாட்டும் அ.தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ இன்பதுரை, ‘‘சந்தோஷ்குமாருக்கு கடந்த சில வாரங்களாகவே ஆளுங்கட்சிக்காரங்க கடும் நெருக்கடி கொடுத்திருக்காங்க. சில தினங்களுக்கு முன்னாடி முக்கியமான தி.மு.க புள்ளி ஒருத்தர், சந்தோஷ்குமார்கிட்ட பேசி, தன்னோட ஆதரவாளர்கள் சொல்றபடி பில் போடச்சொல்லி மிரட்டியிருக்காரு. அவரு தற்கொலை செஞ்சுக்குறதுக்கு முந்தைய தினம், ராதாபுரம் யூனியன் சேர்மன் சௌமியாவோட கணவரும், மாவட்ட பஞ்சாயத்துத் தலைவருமான வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ், தன்னோட பெட்ரோல் பங்குக்குக் கூப்பிட்டு மிரட்டியிருக்காரு. பெட்ரோல் பங்க் சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றினாலே உண்மை தெரிஞ்சுடும். சம்பவம் நடந்தன்னைக்கு சந்தோஷ்குமாருக்கு செல்போன்ல அழைப்பு வந்திருக்கு. எதிர்முனையில பேசினவர் ஏதோ சொல்லியிருக்கணும்... அதனாலதான் ரயில் முன்னாடி பாய்ஞ்சு தற்கொலை செஞ்சுக்கிட்டிருக்காரு. அவர் கடைசியா யார்கிட்ட பேசினார், அவருக்கு நெருக்கடி கொடுத்தவங்க யாருன்னு நேர்மையாக விசாரிச்சு நடவடிக்கை எடுக்கணும்” என்றார்.

சந்தோஷ்குமாரை மிரட்டியதாகக் கூறப்படும் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷிடம் கேட்டால், ‘‘ஏற்கெனவே அவர்மேல லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடக்குது. அதனால, அந்த விசாரணையை முடிச்சுக்கொடுக்கச் சொல்லி என்கிட்ட பேசியிருந்தார். சம்பவத்துக்கு முதல் நாள் வரைக்கும் அவர் என்கிட்ட பேசிக்கிட்டுதான் இருந்தார். ஆனா, எதுக்காக இப்படியொரு முடிவெடுத்தார்னு தெரியலை. நான் யாருக்கும் அழுத்தம் கொடுக்கலை... மிரட்டவும் இல்லை. அவரோட இந்த முடிவு எனக்கு வேதனையளிக்குது’’ என்றார்.

இன்பதுரை, ஜெகதீஷ், விஷ்ணு
இன்பதுரை, ஜெகதீஷ், விஷ்ணு

நெல்லை கலெக்டர் விஷ்ணுவிடம் பேசினோம்... ‘‘சமூகரெங்கபுரம் பஞ்சாயத்துச் செயலாளர்மீது புகார் வந்ததால் அவரை சஸ்பெண்ட் செய்தோம். துறைரீதியாகத் தொடர்ந்து விசாரணை நடக்கிறது. பொறியாளர் சந்தோஷ்குமார் தற்கொலை அதிர்ச்சி அளிக்கிறது. அவருக்கு யாராவது நெருக்கடி கொடுத்தார்களா என்பது பற்றி எனக்குத் தெரியாது’’ என்பதுடன் முடித்துக்கொண்டார்.

இதை விபத்து வழக்காக மட்டுமே பதிவுசெய்திருக்கும் நாகர்கோவில் சரக ரயில்வே போலீஸாரோ, “அவர் போன்ல பேசிக்கிட்டே ரயில் வர்றதை கவனிக்காம தண்டவாளத்தை கிராஸ் பண்ணியிருக்காரு. அப்ப ரயில் மோதி இறந்துட்டாரு...” என்றார்கள் சாதாரணமாக!

இந்தச் சம்பவத்தை விபத்து வழக்காக மட்டுமே பதிவுசெய்து உண்மையை மறைக்க முயல்வது தெரிகிறது. சந்தோஷ்குமார் கடைசியாக யாரிடம் அலைபேசியில் பேசினார், உண்மையிலேயே மிரட்டப்பட்டாரா, மிரட்டியது யார் என்றெல்லாம் விசாரணை நடத்தி நேர்மையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.