Published:Updated:

சென்னை: `நட்சத்திர ஹோட்டலில் அரசு மருத்துவர் தற்கொலை!' - போலீஸார் விசாரணை

சென்னை மயிலாப்பூரிலிருக்கும் நட்சத்திர ஹோட்டலில் அரசு மருத்துவர் தற்கொலை செய்துகொண்டார். அவரின் எழுதிய கடிதத்தை போலீஸார் கைப்பற்றி விசாரித்துவருகின்றனர்.

சென்னை மதுரவாயல், கிருஷ்ணாபுரம், 3-வது பிரதான சாலை, 23-வது குறுக்குத்தெருவைச் சேர்ந்தவர் மகேஸ்வரன் (34). இவர் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில், அறுவை சிகிச்சை பிரிவு மருத்துவராக பணியாற்றிவந்தார். இவரின் மனைவி நந்தினி. அவரும் மருத்துவர். கடந்த 24.11.2021-ம் தேதி அன்று, தன்னுடைய சொகுசு காரில், மகேஸ்வரன், மயிலாப்பூரிலிருக்கும் நட்சத்திர ஹோட்டல் ஒன்றுக்குச் சென்றார். பின்னர் காரை அவரின் டிரைவர் வீட்டுக்குக் கொண்டு சென்றார். டாக்டர் மகேஸ்வரன், அறையெடுத்துத் தங்கியிருந்தார்.

தற்கொலை
தற்கொலை
சித்தரிப்புப் படம்
கரூர் மாணவி தற்கொலை: `எந்தத் தப்பும் செய்யவில்லை' - கடிதம் எழுதிவைத்துவிட்டு ஆசிரியர் தற்கொலை

இந்தச் சூழலில், மகேஸ்வரனுடன் பணியாற்றும் டாக்டர் ஒருவர் மகேஸ்வரனின் கார் டிரைவரிடம் விசாரித்திருக்கிறார். அப்போது மகேஸ்வரன், ஹோட்டலில் தங்கியிருக்கும் தகவலை அவர் தெரிவித்திருக்கிறார். இதையடுத்து அந்த டாக்டர், ஹோட்டலுக்குச் சென்றார். அப்போது மகேஸ்வரன் தங்கியிருந்த அறை உள்பக்கமாகப் பூட்டியிருந்தது. கதவைப் பல தடவை தட்டியும் மகேஸ்வரன் திறக்கவில்லை. அதனால் ஹோட்டல் நிர்வாகத்திடம் தகவலைத் தெரிவித்தார். இதையடுத்து மாற்றுச் சாவி மூலம் கதவைத் திறந்து பார்த்தபோது, படுக்கையில் டாக்டர் மகேஸ்வரன் இறந்துகிடந்தார். அவரின் கையில் ஊசி குத்திய காயம் இருந்தது. மேலும் அந்த அறையில் ஒரு கடிதமும் இருந்தது. அதில் தன்னுடைய சாவுக்கு யாரும் காரணம் இல்லை என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதையடுத்து ராயப்பேட்டை காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் பிரேம் ஆனந்த் தலைமையில் போலீஸார், சம்பவ இடத்துக்குச் சென்று மகேஸ்வரனின் சடலத்தைக் கைப்பற்றி விசாரணை நடத்திவருகின்றனர்.

டாக்டர் ஒருவர் நட்சத்திர ஹோட்டலில் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு