Published:Updated:

திண்டுக்கல்: அரசு மருத்துவமனை செவிலியர் அடித்துக் கொலை; போலீஸார் தீவிர விசாரணை!

செல்வி அணிந்திருந்த நகை, வீட்டிலிருந்த பணம் அப்படியே இருப்பதாகத் தெரிகிறது. எனவே, இந்தக் கொலை நகை, பணத்துக்காக நடந்திருக்க வாய்ப்பில்லை.

திண்டுக்கல் மாவட்டம், பாரதிபுரம் டிப்போ ரோட்டைச் சேர்ந்தவர் சுரேஷ் (44). இவர் மனைவி செல்வி (43). இந்தத் தம்பதிக்கு, ஒரு மகனும் ஒரு மகளும் இருக்கின்றனர். சுரேஷ் திண்டுக்கல்லில் கேட்டரிங் தொழில் செய்துகொண்டு, தன் இரு குழந்தைகளுடன் வசித்துவந்தார். செல்வி ஆண்டிபட்டி பாப்பம்மாள்புரத்தில் தங்கி, ஆண்டிபட்டி அரசு மருத்துவமனை செவிலியராகப் பணிபுரிந்துவந்தார்.

இந்த நிலையில், நேற்று சுரேஷ் அவர் மனைவி செல்விக்கு செல்போனில் தொடர்புகொண்டிருக்கிறார். ஆனால் நீண்ட நேரமாக செல்போன் சுவிட்ச் ஆஃப் ஆன நிலையிலிருந்ததால், அவருடைய உறவினரான சக்கம்பட்டியைச் சேர்ந்த கார்த்திக் என்பவரிடம் தெரிவித்து வீட்டுக்குச் சென்று பார்க்கச் சொல்லியிருக்கிறார்.

செவிலியர் செல்வி
செவிலியர் செல்வி

வீடு பூட்டியிருந்த நிலையில் நீண்டநேரத்துக்குப் பிறகு, கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது செல்வி வீட்டிலுள்ள பூஜை அறையில் முகத்திலும் தலையிலும் பலத்த காயங்களுடன் இறந்துகிடந்தார்.

அதையடுத்து, உடனடியாக இது குறித்து ஆண்டிபட்டி போலீஸாருக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. அதனடிப்படையில் சம்பவ இடத்துக்கு விரைந்த போலீஸார் செல்வியின் உடலைக் கைப்பற்றி தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குப் பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர்.

தேனி மாவட்ட எஸ்.பி பிரவீன் உமேஷ் டோங்ரே சம்பவ இடத்துக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார். தடயவியல் நிபுணர்கள், மோப்ப நாய் உதவியுடன் விசாரணை நடந்தது. மேலும் டி.எஸ்.பி தங்ககிருஷ்ணன், இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, தீவிரமாக விசாரணை நடத்திவருகின்றனர்.

இது குறித்து போலீஸாரிடம் விசாரித்தோம். ``முதற்கட்ட விசாரணையில் உயிரிழந்த செல்விக்குப் பல ஆண் நண்பர்கள் இருந்தது தெரியவந்திருக்கிறது. செல்வியின் செல்போனை காணவில்லை. உயிரிழந்தவரின் நெற்றி மற்றும் பின்பக்க தலையில் கட்டை அல்லது கம்பியால் தாக்கியிருக்கக்கூடும் என்று சந்தேகிக்கிறோம். இதனால் தலையிலிருந்து அதிக ரத்தம் வெளியேறியிருக்கிறது. தாக்கிய ஆயுதமும் வீட்டில் கிடைக்கவில்லை. எனவே, எந்த ஆயுதத்தால் தாக்கப்பட்டார் என்பதையும் உறுதியாகக் கூற முடியவில்லை'' என்றனர்.

கொலை
கொலை

இது தொடர்பாகப் பேசிய தேனி எஸ்.பி பிரவீன் உமேஷ் டோங்ரே, ``உயிரிழந்தவரின் குடும்பத்தினர், தங்களுக்கு நான்கு பேர் மீது சந்தேகம் இருப்பதாகக் கூறியிருக்கின்றனர். அவர்களைப் பிடித்து விசாரித்துக்கொண்டிருக்கிறோம். உயிரிழந்தவர் அணிந்திருந்த நகை, வீட்டிலிருந்த பணம் அப்படியே இருப்பதாகத் தெரிகிறது. எனவே, இந்தக் கொலை நகை, பணத்துக்காக நடந்திருக்க வாய்ப்பில்லை. உயிரிழந்தவருக்குத் தெரிந்தவர்தான் கொலை செய்திருக்க வாய்ப்பிருக்கிறது. கொலையாளியை விரைவில் பிடித்துவிடுவோம்'' என்றார்.

திண்டுக்கல்: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தூக்கிட்டுத்  தற்கொலை! - போலீஸ் தீவிர விசாரணை
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு