Published:Updated:

`மருத்துவமனை பெண் ஊழியருடன் நட்பு!' -அவசர சிகிச்சைப் பிரிவில் வார்டு பாயை வெட்டிய இளைஞர்

சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்குள் நுழைந்த இளைஞர் ஒருவர், அங்கு பணியாற்றும் வார்டு பாயை நோயாளிகள், ஊழியர்கள் கண்முன் அரிவாளால் வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்டான்லி அரசு மருத்துவமனை
ஸ்டான்லி அரசு மருத்துவமனை

சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வழக்கம்போல இன்று காலை பரபரப்பாகக் காணப்பட்டது. மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கையும் இன்று அதிகமாக இருந்தது. அப்போது, அவசர சிகிச்சை பிரிவுக்குள் இளைஞர் ஒருவர் வந்தார். அவர், மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து அந்தப் பிரிவில் பணியாற்றும் ஊழியர் ஒருவரை வெட்டத் தொடங்கினார்.

ஸ்டான்லி அரசு மருத்துவமனை
ஸ்டான்லி அரசு மருத்துவமனை

அதைப்பார்த்ததும் நோயாளிகளும் மருத்துவமனை ஊழியர்களும் அதிர்ச்சியில் உறைந்தனர். வெட்டுப்பட்ட அந்த ஊழியர் அங்கிருந்து தப்பி ஓடினார். ஆனால், வெட்டிய நபரோ அவரை விடாமல் துரத்தினார். இதுகுறித்து, உடனடியாக மருத்துவமனை ஊழியர்கள், போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் அரிவாளுடன் நின்றுகொண்டிருந்த இளைஞரை மடக்கிப் பிடித்தனர். பின்னர் அவரை வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், `` சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்தவர் ரவி (57). இவர், சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் வார்டு பாயாக வேலை பார்த்துவருகிறார். இவருக்கும் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் வேலை பார்க்கும் பெண் ஒருவருக்கும் பழக்கம் உள்ளது. அந்தப் பெண்ணுக்கும் தண்டையார்பேட்டையைச் சேர்ந்த ஐயப்பன் (36) என்பவருக்கும் நட்பு உள்ளது.

ஸ்டான்லி அரசு மருத்துவமனை
ஸ்டான்லி அரசு மருத்துவமனை

அந்தப் பெண்ணுடன் பழகுவதில் ரவிக்கும் ஐய்யப்பனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாகத்தான் ரவியை இன்று அவசர சிகிச்சை பிரிவுக்குள் வைத்து ஐயப்பன் அரிவாளால் வெட்டியுள்ளார். தவறான நட்பு காரணமாக நடந்த இந்தச் சம்பவம் குறித்து விசாரித்துவருகிறோம். ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் ரவிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. ஐய்யபன் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது" என்றனர்.