Published:Updated:

அதிகரிக்கும் குழந்தை திருமணம், கண்டுபிடிக்கப்பட்ட 509 கர்ப்பிணிகள் - என்ன சொல்கிறார்கள் திருச்சி அதிகாரிகள்?

குழந்தை திருமணம்
குழந்தை திருமணம்

திருச்சி மாவட்ட சுகாதாரத்துறை நடத்திய ஆய்வில் திருமண வயது முழுமையடையாத நிலையில் 509 கர்ப்பிணிகள் இருப்பதாகத் தெரியவந்துள்ளது.

இந்தியாவில் குழந்தைத் திருமணம் அதிகரித்துவருகிறது என்றும், பத்தில் ஒரு பெண் குழந்தைக்குத் திருமண வயது முழுமையடையும் முன்பே திருமணம் நடைபெறுவதாக அதிர்ச்சியளிக்கிறது தேசிய குழந்தைகள் உரிமை ஆணைய அறிக்கை. தமிழகத்தில், கடந்த வருடம் மட்டும் 62,500 குழந்தைத் திருமணங்கள் நடந்துள்ளதாகப் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.

குழந்தைத் திருமணம்
குழந்தைத் திருமணம்

இந்த நிலையில், திருச்சி மாவட்ட சுகாதாரத்துறை நடத்திய ஆய்வில் திருமண வயது முழுமையடையாத நிலையில், 509 கர்ப்பிணிகள் இருப்பதாகத் தெரியவந்துள்ளது. திருச்சி மாவட்டம் முசிறி, தொட்டியம், துறையூர், திருவெறும்பூர் பகுதிகளில் குழந்தைத் திருமணங்கள் அதிகம் நடக்கிறது என்றும், கடந்த 10-ம் தேதி, துறையூர் அடுத்த டி.மங்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த 17 வயது அமுதா (பாதிக்கப்பட்டவரின் பெயர் மாற்றப்பட்டுள்ளது) எனும் பெண்ணுக்கும் அவருடைய தாய்மாமனுக்கும் திருமணம் நடைபெற்றதாக நமக்குத் தகவல் கிடைத்தது. விசாரித்தோம்.

நம்மிடம் ஊர் பெரியவர் ஒருவர், ``12க்கு மேல படிச்சா பெத்தவங்க சொல்லுற மாப்பிள்ளையை ஏத்துக்க மாட்டாளோனு அமுதாவுக்கு அவசர அவசரமா சொந்தத்துல கல்யாணம் முடிச்சுட்டாங்க. இப்போ சேலத்துல உள்ள சொந்தக்காரங்க வீட்ல அந்தப் பொண்ணை வைச்சிருக்காங்க. இந்தத் தகவல் கிடைச்ச சமூக நலத்துறை மற்றும் குழந்தைகள் பாதுகாப்புக் குழு அதிகாரிகள் நேர்ல போய் விசாரிச்சிருக்காங்க. தொடர்ந்து அமுதாவை மீட்க ஏற்பாடு நடந்துட்டு இருக்கு. பெத்தவங்களும் தலைமறைவா இருக்காங்க. இப்போ ஜாமீனுக்கு முயன்றுகொண்டு இருக்காங்களாம். படிக்கிற பிள்ளைகளை கல்யாணம் பண்ணி வைச்சு சீரழிக்குறாங்க'' எனப் புலம்பினார்.

குழந்தை திருமணம்
குழந்தை திருமணம்

அடுத்து பேசிய அதிகாரி ஒருவர், ``சமீபகாலமாகத் திருச்சி மாவட்டத்தில், குழந்தைத் திருமணங்கள் அதிகரித்துள்ளன. அதைத் தடுக்க மாவட்ட நிர்வாகம் பலவகையில் முயன்றாலும், சில அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் துணையுடன் குழந்தைத் திருமணங்கள் தொடர்கின்றன. சமீபத்தில் முடிந்த பெரம்பலூர் நாடாளுமன்றத் தேர்தலில், சுயேச்சையாகப் போட்டியிட்ட குறிப்பிட்ட சமூகத்துக்கான தலைவர் ஒருவர், துறையூர் பகுதியில் 18 வயது நிரம்பாத பெண்ணை திருமணம் செய்துள்ளார். அவரை சில முக்கியப் புள்ளிகள் காப்பாற்றி வருகிறார்கள்.

மேலும், முசிறியை அடுத்த சுக்காம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கணேசன் மகள் அனுஜாவுக்கு (பாதிக்கப்பட்டவரின் பெயர் மாற்றப்பட்டுள்ளது), அதேபகுதியைச் சேர்ந்த பழனிசாமிக்கும் கடந்தவாரம் திருமணம் நடக்கவிருந்த நிலையில், சமூகநலத்துறை அதிகாரிகள் பெண்ணின் வீட்டில் விசாரணை செய்தார்கள். அப்போது பெண் வீட்டார் முற்றுகையிட்டதால், அவர்களை மீட்கவே போலீஸார் தேவைப்பட்டனர். பல இடங்களில் போலீஸார், சமூக நலத்துறை அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு தர மறுக்கிறார்கள். இதனால், குழந்தைத் திருமணங்களைத் தடுக்கும் பணி செய்யும், சமூக நலத்துறை மற்றும் சைல்ட் லைன் அதிகாரிகள் பெரும் பாடுபடுகிறார்கள். திருச்சி மாவட்டத்தில் சமயபுரம், வயலூர், உத்தமர் கோயில் உள்ளிட்ட பிரபலமான கோயில்களில் அதிகமாக குழந்தைத் திருமணங்கள் நடக்கின்றன. அந்தத் திருமணங்கள் ஊரறிய நடந்தால் சிக்கல் என்பதால், மிக ரகசியமாக நடத்துகிறார்கள். இதைத் தடுக்க அதிகாரிகளும், பொதுமக்களும் குழுவாக செயல்பட வேண்டும்” எனக் கூறினார்.

குழந்தை திருமணம்
குழந்தை திருமணம்

தொடர்ந்து மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் தமீம்முனிஷா நம்மிடம், ``திருச்சி மாவட்டத்தில் நடக்கும் குழந்தை திருமணங்களைத் தடுப்பதற்காக, மாவட்ட ஆட்சியர் முயற்சியால் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்துவருகிறோம். அதன் தொடர்ச்சியாக கடந்த வருடம் மட்டும் 152 குழந்தை திருமணங்களைத் தடுத்துள்ளோம், கடந்த ஆறு மாதத்தில் 78 குழந்தைத் திருமணங்கள் தடுக்கப்பட்டுள்ளன. இதற்காக உழைத்த பணியாளர்களுக்கும், சைல்ட் லைன் உறுப்பினர்கள் பட்ட சிரமங்கள் ஏராளம். இந்த நிலையில், மாவட்ட சுகாதாரத்துறை மூலம் ஆய்வு நடத்தினோம். அந்த ஆய்வில், மாவட்டம் முழுவதும் 18 வயது முழுமையடையாத 509 கர்ப்பிணிப் பெண்கள் இருப்பது தெரிந்துள்ளது.

அடுத்து இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளோம். மாவட்ட காவல்துறையின் உதவியைக் கேட்டுள்ளோம். தொடர்ந்து குழந்தைத் திருமணங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப் பிரசாரங்கள் மேற்கொள்ளவும், வருவாய்த்துறை, சுகாதாரத்துறை மற்றும் காவல்துறை ஆகிய துறைகள் ஒருங்கிணைப்புடனும், உள்ளூர் இளைஞர்கள் மூலம் குழந்தைத் திருமணங்களைத் தடுக்க முயன்றுவருகிறோம். அடுத்த கட்டமாக உச்சநீதிமன்ற தீர்ப்புப்படி, குழந்தைத் திருமணம் செய்த ஆண்கள்மீது போக்ஸோ சட்டத்தின் கீழ்நடவடிக்கை எடுக்க உள்ளோம்” என எச்சரித்தவர், 18 வயது முழுமையடையாத பெண் குழந்தைகளுக்கு நடக்கும் திருமணங்களால், அவர்கள் உடல் மற்றும் உளவியல் ரீதியாகவும் நெருக்கடிக்கு உள்ளாகிறார்கள்.

மகப்பேறு காலங்களில் தாய் அல்லது குழந்தை இறத்தல், ஊட்டச்சத்து பற்றாக்குறை, மன வளர்ச்சி குன்றிய குழந்தை பிறப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளுக்கு ஆளாகிறார்கள். அவர்களின் கல்வியும் பாதிக்கிறது. குழந்தைத் திருமணங்கள் செய்துகொண்ட பெண்கள்மீது குடும்ப வன்முறை நிகழ்கிறது. இவ்வளவு ஆபத்துகள் இருந்தும் குடும்பச் சூழல், காதல் உள்ளிட்ட காரணங்களைச் சொல்லி, திருமணம் செய்கிறார்கள். குழந்தைத் திருமண ஏற்பாடுகள் மற்றும் திருமணம் குறித்து மாவட்ட சமூக நலத்துறை மற்றும் சைல்ட் லைன் எண் 1098-க்கும் தகவல் அளிக்கலாம். தகவல் தருபவரின் ரகசியம் காக்கப்படும்” என்றார்.

1098
குழந்தைத் திருமண ஏற்பாடுகள் மற்றும் திருமணம் குறித்து மாவட்ட சமூக நலத்துறை மற்றும் சைல்ட் லைன் எண் 1098-க்கு தகவல் அளிக்கலாம். தகவல் தருபவரின் ரகசியம் காக்கப்படும்
குழந்தை திருமணம்
குழந்தை திருமணம்
``இதற்காக முத்தரப்பு ஆலோசனைக் கூட்டம் நடத்தியுள்ளோம். கோயில்கள், திருமண மண்டபங்கள், பள்ளிகள் ஆகியவற்றில் கண்காணிக்கவும், விழிப்புணர்வு ஏற்படுத்தவும் உத்தரவிட்டுள்ளேன். குழந்தைத் திருமணங்களைத் தடுக்க, அங்கன்வாடி பணியாளர்கள், ஊராட்சி செயலாளர்கள், கிராம நிர்வாக அலுவலர் மற்றும் கிராம உதவியாளர் மூலம் தகவல்கள் தெரிவிக்கவும், கண்காணிக்கவும் உத்தரவிடுகிறேன் என்றும். குழந்தைத் திருமணங்கள் குறித்த தகவல்களை மாவட்ட நிர்வாகத்துக்கு எப்போது வேண்டுமானாலும் தெரிவிக்கலாம்”
திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு
அடுத்த கட்டுரைக்கு