Published:Updated:

``வாழவே அனுமதியற்றவர்களாக எங்களை ஆக்குவது ஏன்?" - கொதிக்கும் கிரேஸ் பானு

திருநங்கை கிரேஸ் பானு

``எங்களுக்கு எதிரான குற்றங்களை எதிர்த்துக் குரல்கொடுக்க யாரும் முன்வரவில்லை. கோவை சங்கீதாம்மாவின் இறப்பே இறுதியாக இருக்கட்டும். எங்களின் பாதுகாப்புக்காக திருநர் வன்கொடுமை தடுப்புச் சட்டம் இயற்றப்பட வேண்டும்” என்கிறார் திருநர் உரிமைக் கூட்டியக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் கிரேஸ் பானு.

``வாழவே அனுமதியற்றவர்களாக எங்களை ஆக்குவது ஏன்?" - கொதிக்கும் கிரேஸ் பானு

``எங்களுக்கு எதிரான குற்றங்களை எதிர்த்துக் குரல்கொடுக்க யாரும் முன்வரவில்லை. கோவை சங்கீதாம்மாவின் இறப்பே இறுதியாக இருக்கட்டும். எங்களின் பாதுகாப்புக்காக திருநர் வன்கொடுமை தடுப்புச் சட்டம் இயற்றப்பட வேண்டும்” என்கிறார் திருநர் உரிமைக் கூட்டியக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் கிரேஸ் பானு.

Published:Updated:
திருநங்கை கிரேஸ் பானு

கோவை மாவட்ட திருநங்கைகள் சங்கத் தலைவியாக இருந்தவர் சங்கீதா. திருநங்கைகளுக்கான அரசின் நலத்திட்டங்களைத் தகுதி வாய்ந்த திருநங்கைகளுக்கு பெற்றுக் கொடுப்பது, திருநங்கைகளின் கல்வி வளர்ச்சிக்கு உதவுவது, சுயதொழில்கள் அமைத்துக் கொடுப்பது எனப் பல உதவிகளைச் செய்துவந்தார். 60 வயதானாலும் சுறுசுறுப்புடன் இயங்கி வந்தார். கொரோனாவால் வாழ்வாதாரம் இழந்த திருநங்கைகளின் நலனுக்காக கோவை, ஆர்.எஸ் புரத்தில், `ட்ரான்ஸ் கிச்சன்' என்ற ஹோட்டலைத் தொடங்கி நடத்தி வந்தார். தமிழகத்தில் தொடங்கப்பட்ட இந்த முதல் திருநங்கை உணவகத்துக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

கொலை செய்யப்பட்ட திருநங்கை சங்கீதா
கொலை செய்யப்பட்ட திருநங்கை சங்கீதா

இதில், உணவு சமைத்தல், பரிமாறுதல் உள்ளிட்ட வேலைகளில் 10 திருநங்கைகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கினார் சங்கீதா. சாய்பாபா காலனியில் தனியாக வசித்து வந்தார். காலை வீட்டிலிருந்து கிளம்பி ஹோட்டலுக்கு வருபவர் இரவில்தான் வீடு திரும்புவார். இந்நிலையில், 18-ம் தேதி இரவு, ஹோட்டலில் பணிபுரியும் திருநங்கை ஒருவரிடம் கடைசியாகப் பேசியுள்ளார்.

அதன் பின்னர், சங்கீதாவின் எண் ஸ்விட்ச் ஆஃப் நிலையிலேயே இருந்துள்ளது. சங்கீதா வெளியூரிலுள்ள உறவினர் வீட்டுக்குச் சென்றிருப்பார் என்று எண்ணி, ஹோட்டலில் பணிபுரியும் மற்ற திருநங்கைகளே உணவகத்தை நடத்தி வந்துள்ளனர். இந்நிலையில், கடந்த 21-ம் தேதி சங்கீதாவின் வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியதால், சந்தேகமடைந்த பக்கத்து வீட்டுக்காரர்கள் போலீஸில் தகவல் சொன்னார்கள். வீட்டின் பூட்டை உடைத்து கதவைத் திறந்து பார்த்த போலீஸாருக்கு அதிர்ச்சி.

பிரியாணி தயார் செய்யும் திருநங்கைகள்
பிரியாணி தயார் செய்யும் திருநங்கைகள்

ஊதா நிற டிரம்முக்குள், கழுத்து அறுக்கப்பட்டு, உப்பினால் நிரப்பப்பட்டு, போர்வையால் மூடப்பட்ட நிலையில் சடலமாகக் கிடந்தார் சங்கீதா. சங்கீதாவின் உடலைப் பார்த்து பிற திருநங்கைகள் கதறி அழுதனர்.

`ட்ரான்ஸ் கிச்சனி'ல் பணிபுரியும் திருநங்கைகள், ``சங்கீதாம்மா ஆரம்பிச்ச `ட்ரான்ஸ் கிச்சன்' ஹோட்டல்ல தயார் செய்யப்படும் பிரியாணி ரொம்ப சுவையா இருக்கும். பிரியாணி சாப்பிடுறதுக்காகவே தொலைவில் இருந்தெல்லாம் ஆட்கள் வருவாங்க. ஹோட்டலை ஆரம்பிச்ச சில நாள்களிலேயே மக்கள் மத்தியில நல்ல வரவேற்பு கிடைச்சது.

இதனால, பக்கத்துல உள்ள சில ஹோட்டல்கள்ல வியாபாரம் டல் ஆகிடுச்சு. அதனால தொழில் போட்டி காரணமாதான் சங்கீதாம்மாவை கொலை செஞ்சிருப்பாங்கனு சந்தேகப்படுறோம்” என்கிறார்கள்.

``திருநங்கை சங்கீதாவின் கொலை குறித்து விசாரணை செய்ய இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள்” எனத் தெரிவித்திருந்தனர் போலீஸார். இந்நிலையில் இன்று ராஜேஷ் என்பவரைக் கைது செய்திருக்கிறது கோவை காவல்துறை.

கோவை ட்ரான்ஸ் கிச்சன்
கோவை ட்ரான்ஸ் கிச்சன்

சங்கீதா மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து தமிழகம் முழுவதும் திருநங்கைகள் கண்டனத்தைப் பதிவு செய்ததுடன், சில இடங்களில் போராட்டங்களையும் முன்னெடுத்தனர். தூத்துக்குடியைச் சேர்ந்த திருநர் உரிமை கூட்டியக்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் கிரேஸ் பானுவிடம் பேசினோம். ``கோவையைச் சேர்ந்த திருநங்கைகளின் முன்னேற்றத்துக்கு படிக்கல்லாக இருந்தவர் சங்கீதா. திருநங்கைகளுக்கான அடையாள அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் கார்டு என அரசு மூலம் திருநங்கைகளுக்குக் கிடைக்கும் அனைத்துப் பயன்களையும் பெற்றுக் கொடுத்தவர்.

`சங்கீதாம்மா' எனப் பிற திருநங்கைகளால் அன்போடு அழைக்கப்பட்டவர். கொரோனா ஊரடங்குக் காலத்தில், உழைத்து வாழ்வோம் என்ற கொள்கையோடு அந்த ஹோட்டலை தொடங்கி நடத்திவந்தார். `இந்த உணவகத்துக்கு மக்கள் அளிக்கும் ஆதரவு மூலம் கோவையில் அடுத்தடுத்து திருநங்கைகளின் உணவகங்கள் திறக்கப்படும். இதன் மூலம் திருநங்கைகளின் வாழ்வாதரம் முன்னேற்றப்படும்' என ஹோட்டல் திறக்கப்பட்ட அன்று மீடியாவிடம் சொன்னார். அவர் சொன்னதுபோலவே திருநங்கைகளின் வாழ்க்கையை முன்னேற்றப் பாதையில் செலுத்தினார். ஆனால், இன்று மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்.

திருநங்கை கிரேஸ் பானு
திருநங்கை கிரேஸ் பானு

மூன்றாம் பாலினத்தவரான நாங்கள், பாலின மாறுபாட்டால் வீட்டைவிட்டு துரத்தப்படுகிறோம். தடைகள் பல தாண்டி நல்லதொரு வாழ்க்கையை அமைத்துக்கொள்ளும்போது படுகொலை செய்யப்படுகிறோம். இந்த சமூகத்தில் நாங்களும் சுய மரியாதையோடு வாழ வேண்டும் என நினைப்பது தவறா? பாலியல் தொழிலை கைவிட்டுவிட்டு சுயதொழிலை தொடங்கிப் பலருக்கு வேலைவாய்ப்பளிக்கும் நிலைக்கு முன்னேறி வருகிறோம். எங்களை தட்டிக்கொடுக்க வேண்டாம். ஆனால், வாழவே அனுமதியற்றவர்களாக எங்களை ஆக்குவது ஏன்?

சங்கீதாம்மாவுக்கு ஏற்பட்ட இந்த நிலை, ஒரு சிறுமிக்கோ, பெண்ணிற்கோ ஏற்பட்டிருந்தால் இந்த சமூகம் இப்படித்தான் வேடிக்கை பார்த்திருக்குமா, எத்தனை போராட்டங்கள் வெடித்திருக்கும்? `இவங்கள்லாம் செத்தா யாரு கேட்கப்போறா?' என்கிற பாகுபாட்டு சிந்தனைதான் திருநங்கை கொலைகளில் நிலவுகிறது.

ஆனால், அதே நேரம் ஒரு சிறுமிக்கோ, பெண்ணுக்கோ இந்த நிலை ஏற்பட்டிருந்தால் திருநங்கைகளான நாங்கள், முதலில் குரல் கொடுத்து போராட்டத்தில் இறங்குகிறோம். கோவையில் நடந்த இந்தக் கொடூர சம்பவத்துக்கு ஆளும்கட்சி, எதிர்க்கட்சி உள்ளிட்ட எந்தக் கட்சியினரும் கண்டனத்தைத் தெரிவிக்கவில்லையே, குரல் கொடுக்கவில்லையே ஏன்? எங்களுக்கு அநீதி நடந்தால் குரல் கொடுக்கக்கூட யாருமில்லையா?

எங்களுக்கு ஒரு வன்கொடுமை நடக்கும்போது யாராவது தட்டிக் கேட்டிருந்தால் இப்படி ஒரு நிலை வந்திருக்குமா? சமூகத்தின் இந்த அமைதியும் அலட்சியமும்கூட ஒரு வகையான தீண்டாமைதான். காவல்துறையும் எங்களைக் கண்டு கொள்ளவில்லை. தூத்துக்குடியில் கடந்த 2019-ம் ஆண்டு, கோயிலில் பூஜை செய்து வந்த திருநங்கை ராசாத்தி, கோயிலின் அருகிலேயே தலைதுண்டித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கிலும் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. சங்கீதாம்மாவின் இறப்பே இறுதியாக இருக்கட்டும். திருநர் வன்கொடுமை தடுப்புச் சட்டம் இயற்றப்பட வேண்டும்” என்றார்.