நெல்லை, பழையபேட்டை பகுதியில் ஆதாம் நகர் குடியிருப்பு உள்ளது. அந்தப் பகுதியில் மாநகராட்சியின் பாதாளச் சாக்கடைத் திட்டப் பணிகள் நடைபெற்றுவருகின்றன. அதனால் அந்தப் பகுதியில் ராட்சதக் குழாய்கள் போட்டு வைக்கப்பட்டதும், பொதுமக்கள் குப்பைகொட்டும் பகுதியாகவும் மாறியுள்ளது.

அந்த இடத்தின் அருகே சுடுகாடு அமைந்திருக்கிறது. இரு தினங்களுக்கு முன்பு மதிய நேரத்தில், ஆள் நடமாட்டம் குறைவாக இருந்தபோது ஆட்டோவில் வந்த சிலர் அங்கு ஒரு மூதாட்டியைக் கொண்டுவந்து எரித்துக் கொலை செய்துவிட்டுச் சென்றதாகத் தகவல் பரவியது. உடனடியாக அந்தப் பகுதியைச் சேர்ந்த சிலர் அதை செல்போனில் வீடியோவாக எடுத்ததுடன் பேட்டை காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
உடனடியாக சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸார் பாதி எரிந்த நிலையில் கிடந்த மூதாட்டியின் உயிரற்ற உடலை மீட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பிவைத்தனர் பின்னர் அந்தப் பகுதியில் போலீஸார் தீவிர விசாரணை நடத்தினார்கள். அங்கு ஆட்டோ வந்தது தெரியவந்ததால் ஆட்டோ டிரைவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.
ஆட்டோ டிரைவர்கள் அளித்த தகவல் மற்றும் அந்தப் பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். அதைத் தொடர்ந்து மூதாட்டியை ஏற்றிவந்த ஆட்டோ டிரைவரைக் கண்டுபிடித்து விசாரித்ததில், பழையபேட்டையைச் சேர்ந்த மாரியம்மாள், அவரின் சகோதரி மேரி ஆகியோர் அவர்களின் பாட்டியுடன் அங்கு வந்த விவரத்தைத் தெரிவித்தார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
அதையடுத்து, போலீஸார் மாரியம்மாள் மற்றும் மேரியைப் பிடித்து விசாரித்தபோது, பாட்டி சுப்பம்மாளை அங்கு அழைத்து வந்து அவரது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்ததை ஒப்புக்கொண்டனர். பாட்டி சுப்பம்மாளின் மூத்த மகள்களான தங்களது பராமரிப்பில் பாட்டி இருந்ததாகவும், அவரைப் பராமரிக்க முடியாமல் திணறியதால் எரித்துக் கொலை செய்யத் திட்டமிட்டதாகவும் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர்.

சுடுகாட்டுப் பகுதியில் கொண்டு சென்று எரித்துவிட்டால் யாருக்கும் தெரியாமல் போய்விடும் என்பதற்காக அந்த இடத்தைத் தேர்வு செய்ததாக, கைதுசெய்யப்பட்ட இருவரும் தெரிவித்துள்ளனர். பராமரிக்க முடியாததால் பாட்டியை பேத்திகளே உயிருடன் எரித்து கொலை செய்த கொடூரச் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.