Published:Updated:

`பணம் கேட்டேன், கொடுக்கவில்லை..!' -ஆவடி ராணுவ வீரர் மனைவிக்கு பேரனால் நேர்ந்த கொடூரம்

மல்லிகா
மல்லிகா

`பாட்டியிடம் பணம் கேட்டபோது அவர் தரவில்லை. அதனால் அவரைப் பிடித்து தள்ளினேன்' என்று கைதான பேரன் போலீஸாரிடம் கூறியுள்ளார்.

ஆவடி, கண்ணபாளையம், ஒத்தவாடை தெருவைச் சேர்ந்தவர் மல்லிகா, (56) இவரின் கணவர் பார்த்தசாரதி. முன்னாள் ராணுவ வீரரான இவர், சில ஆண்டுகளுக்குமுன் இறந்துவிட்டார். அதனால், மல்லிகா மட்டும் தனியாக வசித்துவந்தார். இந்தத் தம்பதிக்கு குழந்தை கிடையாது. சம்பவத்தன்று இரவு உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்குச் சென்ற மல்லிகா, வழக்கம்போல வீட்டில் வந்து தூங்கினார். ஆனால், மறுநாள் அவர் நீண்ட நேரமாகியும் கண்விழிக்கவில்லை. அதனால் மல்லிகாவின் தங்கை மகளான மீனாட்சி, வீட்டுக்கு வந்தார். அப்போது தலையில் காயங்களுடன் மல்லிகா சமையலறையில் இறந்துகிடந்தார்.

கொலை
கொலை
மாதிரி படம்

இதுகுறித்து தகவலறிந்த ஆவடி போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று உடலை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேற்கு மண்டல இணை கமிஷனர் விஜயகுமாரி, அம்பத்தூர் துணை கமிஷனர் ஈஸ்வரன் மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்தனர். இந்தக் கொலை தொடர்பாக ஆவடி போலீஸார் விசாரித்துவந்தனர். விசாரணையில் மல்லிகாவைக் கொலை செய்தது அவருடைய சகோதரியின் பேரன் என்று தெரியவந்தது.

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``தனியாக வசித்துவந்த மல்லிகா, வசதியாக வாழ்ந்துவந்தார். எப்போதும் அவரின் கழுத்தில் தங்க நகைகளை அணிந்திருப்பார். மேலும், அவரின் கணவருக்கு ஓய்வூதியம் வருவதால் மல்லிகாவின் கையில் பணமும் இருக்கும். ஆனால், மல்லிகாவின் சகோதரிகள் குடும்பம் வறுமையில் வாடியது. ஒரு சகோதரியின் பேரனான கோகுல் (29), படித்துவிட்டு வேலைக்குச் செல்லாமல் இருந்துவந்தார். மேலும் அவர் கஞ்சா, மதுவுக்கு அடிமையானார்.

``மகள்களுக்குப் பாலியல் தொல்லை கொடுத்த வளர்ப்பு மகன்?" - கூலிப்படை மூலம் கொலை செய்த சென்னைத் தாய்

இவர், அடிக்கடி மல்லிகாவின் வீட்டுக்கு வருவார். பேரன் என்ற முறையில் கோகுலுடன் மல்லிகாவும் பேசுவார். மல்லிகாவிடம் அடிக்கடி கோகுல் பணம் கேட்டு தொல்லைபடுத்தியுள்ளார். அதனால் மல்லிகாவுக்கும் கோகுலுக்கும் இடையே தகராறு ஏற்படுவதுண்டு. சம்பவத்தன்று கோகுலும் அவருடைய நண்பர் ஆகாஷ் (19) என்பவரும் மல்லிகா வீட்டுக்கு வந்துள்ளனர்.

மல்லிகாவிடம் கோகுல் பணம் கேட்டுள்ளார். ஆனால், அவர் பணம் கொடுக்கவில்லை. அதனால் ஆத்திரமடைந்த கோகுலும் ஆகாஷும் மல்லிகாவைப் பிடித்து தள்ளியுள்ளனர். இதில் தலையில் படுகாயமடைந்து மல்லிகா மயங்கியுள்ளார். ஆனால், அவருக்கு சிகிச்சை அளிக்காமல் அங்கிருந்து இருவரும் தப்பி ஓடியுள்ளனர். ரத்தம் அதிகம் வெளியேறி மல்லிகா சம்பவ இடத்திலேயே இறந்துள்ளார். மல்லிகாவைக் கொலை செய்த குற்றத்துக்காக கோகுல், ஆகாஷ் ஆகிய இருவரையும் கைது செய்துள்ளோம்" என்றனர்.

பின் செல்ல