Published:Updated:

`4 லட்சம் டீல்... 1 லட்சம் அட்வான்ஸ்!' - பேரக் குழந்தையைக் கடத்திய தாத்தா, பாட்டி

பஞ்சாப் மாநிலத்திலுள்ள பெண்ணுக்கு குழந்தை தேவைப்படுகிறது. நீங்கள் இந்தக் குழந்தையை விற்றால் உங்களுக்கு லட்சக்கணக்கில் பணம் பெற்றுத் தருகிறேன்.

குழந்தை
குழந்தை

உத்தரப்பிரதேச மாநில லக்னோ பகுதியைச் சேர்ந்தவர் ராகேஷ் குமார் பஹ்ரைச். இவருக்கு சமீபத்தில் ஆண் குழந்தை பிறந்துள்ளது. உடல்நிலை சரியில்லாமல் இருந்ததால் ஒன்றரை மாத ஆண் குழந்தையை, கடந்த 2-ம் தேதி தன் தந்தை சிக்சாய் ராம் மற்றும் தாய் கிருஷ்ணா ஆகியோருடன் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளார் ராகேஷ். மருத்துவமனைக்கு குழந்தையைத் தூக்கிச் சென்ற இருவரும் பின்னர் வீட்டுக்கு வெறும்கையுடன் திரும்பியுள்ளனர்.

`குழந்தை எங்கே?' எனக் கேட்டதற்கு, `மருத்துவமனையில் யாரோ தூக்கிச் சென்றுவிட்டார்கள்' என மகனிடம் பொய் பேசியுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த ராகேஷ் உடனடியாக போலீஸிடம் புகார் அளித்தார். அவரது புகாரின் பேரில், முதலில் மருத்துவமனை சென்று போலீஸார் விசாரணை நடத்தினர்.

குழந்தை
குழந்தை

பின்னர் கடைசியாகக் குழந்தையை தாத்தா, பாட்டிதான் வைத்திருந்தது தெரியவர சிக்சாய் ராம் மற்றும் கிருஷ்ணா ஆகியோரிடமிருந்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர். போலீஸ் விசாரணையில் முதலில் இருவரும் மழுப்பலாகப் பதில் கொடுத்துள்ளனர். பின்பு, மருத்துவமனையின் சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்தபோதுதான், இருவரும் உண்மையைப் பேச முன்வந்தனர்.

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``குழந்தையை ரெகுலர் செக்-அப்புக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு இருவரும் அழைத்துச் சென்றுள்ளனர். அப்போது மருத்துவமனை உதவியாளர் சரோஜ் பாலாவை இருவரும் சந்தித்துள்ளனர். அவர்களிடம், ``பஞ்சாப்பில் உள்ள பெண்ணுக்கு குழந்தை தேவைப்படுகிறது. நீங்கள் இந்தக் குழந்தையை விற்றால் உங்களுக்கு லட்சக்கணக்கில் பணம் பெற்றுத் தருகிறேன்" என நைசாகப் பேசி அவர்களை சம்மதிக்க வைத்துள்ளார்.

`வயதோ 32, முதியவர்போல் தோற்றம், 30 லட்சம் டீல்!’-விமான நிலைய அதிகாரிகளுக்கு அதிர்ச்சி கொடுத்த இளைஞர்

குழந்தையை விற்பதற்கு இருவரும் இசைவு தெரிவித்தபின் அனைத்து வேலைகளும் தொடங்கியுள்ளன. உதவியாளர் சரோஜ் பாலா உடனடியாகக் குழந்தைகளை விற்கும் கும்பலைத் தொடர்பு கொண்டவர், அவர்கள் மூலம் பஞ்சாப் பெண்ணுக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். பின்பு 4 லட்ச ரூபாய் டீல் பேசி முதலாவதாக 1 லட்சம் ரூபாய் அட்வான்ஸாகக் கொடுக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. குழந்தையை ஒப்படைத்துவிட்டு அங்கிருந்து சென்றுள்ளனர் சிக்சாய்யும் கிருஷ்ணாவும். பின்பு அங்கிருந்து குழந்தையை பஞ்சாப்பின் அமிர்தரஸுக்குக் கொண்டு சென்றுள்ளனர். மறுநாள் சொன்னபடி குழந்தையின் தாத்தா பாட்டிக்கு ஒரு லட்ச ரூபாயைக் கொடுத்துள்ளனர்.

Arrest
Arrest

இந்த வழக்கின் உண்மை தெரியவந்தபோது அதிர்ச்சியாக இருந்தது. குழந்தை கடத்தல் கும்பலைச் சேர்ந்த ஐந்து பேரைக் கைது செய்துள்ளோம். முக்கிய குற்றவாளியான உஷா என்பவரை தேடி வருகிறோம். இந்தக் குற்றத்தில் ஏழு பேர் ஈடுபட்டுள்ளனர். இவர்களில் ஐந்து பேர் பெண்கள். மேலும் இருவர்மீது இதே போன்று ஒரு வழக்கு 2014-ம் ஆண்டு போடப்பட்டுள்ளது. குழந்தையை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளோம். தப்பிய குற்றவாளிகளை விரைவில் கைது செய்வோம்" எனக் கூறியுள்ளனர்.

பேரக்குழந்தையை அவரின் தாத்தா, பாட்டியே கடத்தியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Vikatan