Published:Updated:

சந்தேகத்தை ஏற்படுத்திய ரத்தம்; பதுங்கிய கொள்ளுப்பேரன், நண்பர்கள்!- நகைக்காக கொல்லப்பட்ட பாட்டி

ஆம்பூர் அருகே பாட்டியைக் கொன்று நகை பறித்த கொள்ளுப்பேரனையும், அவனின் நண்பரையும் போலீஸார் கைதுசெய்தனர்.

கொள்ளுப்பேரன் மோனிஷ்
கொள்ளுப்பேரன் மோனிஷ்

வேலூர் மாவட்டம், ஆம்பூரை அடுத்த மாதனூர் கொல்லமங்கலம் பஜனை கோயில் தெருவைச் சேர்ந்தவர் அர்ஜூனன். இவரின் மனைவி ராஜம்மாள் (75). கணவரை இழந்த இவர் தனியாக வசித்துவந்தார். நேற்று காலை மூதாட்டி ராஜம்மாளின் வீட்டிலிருந்து அலறல் சத்தம் கேட்டது. அக்கம், பக்கம் வசிப்பவர்கள் அவரது வீட்டுக்கு ஓடிச் சென்று பார்த்தனர். அப்போது, ராஜம்மாள் இறந்துகிடந்தார். `இயற்கையாக மரணித்திருப்பார்’ என்று நினைத்து சடலத்தை வீட்டு வாசலில் அஞ்சலிக்காக தூக்கிக் கொண்டுவந்து வைத்தனர். 

மூதாட்டி ராஜம்மாள்
மூதாட்டி ராஜம்மாள்

ராஜம்மாளின் மூக்கில் ரத்தம் வடிந்திருந்தது. உடலில் காயங்களும் ஏற்பட்டிருந்தன. கொலையாக இருக்குமோ என்று சந்தேகமடைந்த உறவினர்கள் மீண்டும் வீட்டுக்குள் சென்று சோதனையிட்டனர். மூடியிருந்த ஓர் அறையைத் திறந்தனர். அதனுள் பதுங்கியிருந்த மூன்று இளைஞர்கள் திடீரென அவர்களைத் தள்ளிவிட்டு தப்பித்து ஓட முயன்றனர். உறவினர்கள் விரட்டிச் சென்று இரண்டு பேரை மடக்கிப் பிடித்தனர். ஒருவர் தப்பி ஓடிவிட்டார். இதுபற்றி ஆம்பூர் தாலுகா போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். 

டி.எஸ்.பி சச்சிதானந்தம், இன்ஸ்பெக்டர் கோகுல்ராஜ் தலைமையிலான போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்துவந்தனர். மூதாட்டியின் சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உறவினர்களின் பிடியிலிருந்த இரண்டு இளைஞர்களையும் காவல் நிலையம் அழைத்துச் சென்று கிடுக்கிப்பிடியாக தீவிர விசாரணை நடத்தினர். அதில், ஒருவர் பெங்களூரு ஜே.சி.நகரைச் சேர்ந்த முருகன் மகன் மோனிஷ் (21) என்றும் ராஜம்மாளின் கொள்ளுப்பேரன் என்பதும் தெரியவந்தது.

கொலையாளிகள்
கொலையாளிகள்

பிடிபட்ட மற்றொரு நபர் மோனிஷின் நண்பர் பிராஜ்வேல் (21), தப்பியோடிய நபர் வினோத் என்பதும் தெரிந்தது. அவர்கள் மூதாட்டியைக் கொலை செய்ததை ஒப்புக்கொண்டனர். அவர்களிடமிருந்து கத்தி, மயக்க ஸ்பிரே, கொள்ளையடித்த நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. கொள்ளுப்பேரன் மோனிஷ் கொடுத்த வாக்குமூலத்தில், ``தனியாக வசித்துவந்த என் பாட்டியிடம் பணம், நகையைப் பறிக்க திட்டமிட்டு நண்பர்கள் இருவருடன் நேற்று அதிகாலை வீட்டுக்கு வந்தேன். கதவைத் தட்டி பாட்டியை எழுப்பினேன்.

கதவைத் திறந்ததும், பாட்டியை உள்ளே தள்ளிச் சென்று நகை பணத்தைக் கேட்டு மிரட்டினோம். முதலில் மிரட்டலுக்கு அசராத பாட்டி எங்களைத் திட்டி வீட்டை விட்டு வெளியே போகுமாறு சத்தம் போட்டார். நாங்கள் ஆத்திரமடைந்து பாட்டியை தாக்கினோம். உயிரோடு விட்டால் சிக்கிக்கொள்வோம் என்பதால், மூச்சுத் திணறலை உண்டாக்கிச் சாகடிக்க முகத்தில் மயக்க ஸ்பிரே அடித்துக்கொண்டே இருந்தோம். அவர் அலறினார். சிறிது நேரத்தில் இறந்துவிட்டார். பின்னர், தூங்கும் நிலையில் சடலத்தைப் படுக்க வைத்துவிட்டோம்.

கொள்ளுப்பேரன் மோனிஷ்
கொள்ளுப்பேரன் மோனிஷ்

பாட்டியின் கழுத்திலிருந்த நகையைப் பறித்த பிறகு, வீட்டுக்குள் இருக்கிற நகை, பணத்தைக் கொள்ளையடிக்க தேடினோம். அதற்குள்ளாகச் சத்தம் கேட்டு அக்கம், பக்கம் இருப்பவர்கள் வந்துவிட்டனர். அறைக்குள் ஓடிச் சென்று ஒளிந்துகொண்டோம். தப்பிக்கத் திட்டமிட்ட நிலையில் கையும் களவுமாக மாட்டிக்கொண்டோம்’’ என்று கூறியதாகக் காவல்துறையினர் சொல்கிறார்கள். கொள்ளுப்பேரனையும், அவரது நண்பரையும் கைதுசெய்த போலீஸார், தப்பி ஓடிய வினோத்தையும் தீவிரமாகத் தேடி வருகிறார்கள். இந்தச் சம்பவம், ஆம்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.