Published:Updated:

`மரியாதை கொடுக்கவில்லை; தட்டிக் கேட்டேன்!' -மச்சானால் புது மாப்பிள்ளைக்கு நேர்ந்த சோகம்

கொலையான முனியப்பன்
கொலையான முனியப்பன்

மணமகன் முனியப்பனுக்குத் திருமணம் நடைபெறவிருந்த நிலையில் கழுத்தை அறுத்துக் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் உறவினர்களிடம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.

தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே உள்ள தென்மலை பகுதியைச் சேர்ந்தவர் முருகன். அவரது மகன் முனியப்பன்.  ஜேசிபி ஆபரேட்டராக வேலை செய்து வந்தார். அவருக்கு நாளை (6- ந்தேதி) தென்மலையில் உள்ள கோயிலில் வைத்து திருமணம் நடைபெறவிருந்தது. 

திருமண அழைப்பிதழ்
திருமண அழைப்பிதழ்

திருமணத்துக்கான ஏற்பாடுகள் நடந்து வந்த நிலையில், உறவினர்கள் அனைவரும் திருமணத்துக்கான பணிகளை மேற்கொண்டிருந்தனர். உறவினர்கள் அனைவரும் மகிழ்ச்சியாகப் பேசிக்கொண்டிருந்தபோது, மணமகன் முனியப்பனின் சகோதரி முனீஸ்வரியின் கணவர் சங்கலி முருகன் என்பவர் குடிபோதையில் தகராறு செய்துள்ளார்.

மணமகனின் தங்கை கணவனான தனக்கு உரிய முறையில் மரியாதை செய்யவில்லை என்று சத்தம் போட்டுள்ளார். குடிபோதையில் தெருவில் ஆபாசமாகப் பேச வேண்டாம் என உறவினர்கள் அனைவரும் அவரைக் கண்டித்துள்ளனர். 

கொலையான முனியப்பன்
கொலையான முனியப்பன்

ஆனாலும் அவர் தொடர்ந்து தகராறு செய்ததால் ஆத்திரமடைந்த முனியப்பன், மைத்துனர் சங்கலி முருகனை அடித்து அங்கிருந்து வெளியே செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளார். அதனால் ஆத்திரமடைந்த சங்கிலி முருகன் மீண்டும் குடித்துவிட்டு வந்துள்ளார்.

மணமகன் தன்னை அடித்ததால் ஆத்திரத்தில் இருந்த சங்கிலி முருகன், வீட்டுக்குள் நுழைந்து அங்கு தூங்கிக்கொண்டிருந்த மணமகனின் கழுத்தை அறுத்துள்ளார். பதறிய மணமகன் அவரிடமிருந்து தப்பி வீட்டை விட்டு வெளியே வந்தபோது துடிதுடித்து இறந்தார். 

`குடிக்கப் பணம் இல்லை!' - நெல்லையில் ஏடிஎம் இயந்திரத்தை கடப்பாறையால் உடைத்த இளைஞர்கள்

உறவினர்கள் திரண்டதால் சங்கிலி முருகன் அங்கிருந்து தப்பிச் சென்றார். இது குறித்து சிவகிரி போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். உயிரிழந்த முனியப்பன் உடலைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக சிவகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தலைமறைவாக இருந்த சங்கிலி முருகன் போலீஸாரால் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்திய விசாரணையில், குடிபோதையில் இருந்ததால் ஆத்திரத்தில் கொலை செய்து விட்டதாக சங்கிலி முருகன் புலம்பியுள்ளார். இது குறித்து போலீஸார் கூறுகையில், ”அடிக்கடி குடித்துவிட்டு வந்து மனைவி முனீஸ்வரியை அடித்துத் துன்புறுத்தியது முனியப்பனுக்குப் பிடிக்கவில்லை. 

கைது செய்யப்பட்ட சங்கில் முருகன்
கைது செய்யப்பட்ட சங்கில் முருகன்

அதனால் பலமுறை இது தொடர்பாக எங்களுக்குள் தகராறு நடந்துள்ளது. முனியப்பனுக்குப் பெண் பார்க்கச் சென்றபோது என்னை அழைத்துச் செல்லவில்லை. எனக்கு எந்த மரியாதையும் தராததால் தட்டிக் கேட்டேன். அதற்காக அவர் அனைவரின் முன்னிலையில் அடித்ததால் கொலை செய்தேன்” எனத் தெரிவித்ததாக போலீஸார் கூறினார்கள். அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

அடுத்த கட்டுரைக்கு