Published:Updated:

` எங்களை நீ எப்போதும் மறக்கக் கூடாது!' - நள்ளிரவில் 4 ரௌடிகளின் செயலால் சிக்கிய பெண்

எஸ்.மகேஷ்

சென்னை ராமாபுரத்தில் உள்ள வீட்டுக்குள் நுழைந்த 4 ரவுடிகள், அங்கிருந்தவர்களுக்கு 3 மணி நேரம் தொல்லை கொடுத்துள்ளனர். அதோடு, நகை, பணத்தையும் அவர்கள் பறித்துச் சென்றுள்ளனர்.

Robbery
Robbery ( Representational image )

சென்னை ராமாபுரம், வெங்கடேஸ்வரா நகரில் குடியிருப்பவர் ராமகிருஷ்ணன். இவரின் மனைவி லட்சுமி (53). இவரின் வீட்டிலிருந்து நள்ளிரவில் திருடன், திருடன் என்ற சத்தம் கேட்டுள்ளது. இதைக் கேட்ட அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அங்கு ஓடி வந்தனர். அப்போது கதவைத் திறந்துகொண்டு 4 பேர் ஓட்டம் பிடித்தனர். அவர்களை பொதுமக்கள் பிடிக்க முயன்றும், 4 பேரும் தப்பி ஓடிவிட்டனர்.

theft
theft
Representational image

இதையடுத்து லட்சுமியிடம் என்ன நடந்தது என்று பொதுமக்கள் விசாரித்தனர். அப்போது அவர், 4 பேர் வீட்டுக்குள் நுழைந்து நகை, பணத்தைக் கொள்ளையடித்துவிட்டு சென்றதாகக் கூறினார். இந்தச் சம்பவம் குறித்து ராயலா நகர் காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்தபோது லட்சுமியின் வீடு பூட்டப்பட்டிருந்தது. இதனால் போலீஸார் அக்கம்பக்கத்தில் விசாரித்தனர். அவர்கள், 4 பேர் இந்த வீட்டுக்குள் இருந்து ஓடியதாகத் தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து, அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளைப் போலீஸார் ஆய்வு செய்தனர். அப்போது வீட்டிலிருந்து 4 பேர் தப்பி ஓடும் காட்சிகள் பதிவாகியிருந்தன. அதன் அடிப்படையில் அவர்கள் யார் என்று போலீஸார் விசாரணை நடத்தியுள்ளனர்.

cctv footage
cctv footage

நள்ளிரவில் நடந்த சம்பவம் குறித்துப் பேசும் போலீஸார், ``ஆந்திராவைச் சேர்ந்தவர் லட்சுமி. ராமாபுரத்தில் வாடகை வீட்டில் குடியிருந்துவந்தார். இவரின் வீட்டுக்குப் பலர் வந்து செல்வது வழக்கம். சம்பவத்தன்று லட்சுமியின் வீட்டுக்கு 4 பேர் வந்துள்ளனர். அவர்களிடம் லட்சுமி பணம் கேட்டுள்ளார். அதற்கு 4 பேரும் நாங்கள் யாரென்று தெரியுமா, எங்களிடமே பணம் கேட்கிறாயா எனக் கூறி, இரவு 1 மணியிலிருந்து அதிகாலை 3 மணி வரை வீட்டிலேயே இருந்துகொண்டு பல தொல்லைகளைக் கொடுத்துள்ளனர். இதனால் லட்சுமியும் அந்த வீட்டிலிருந்த பெண்களும் அமைதியாக இருந்துள்ளனர்.

ஒருகட்டத்தில் லட்சுமி, பணம் எதுவும் வேண்டாம், நீங்கள் வெளியில் சென்றால் போதும் என்று 4 பேரிடமும் கெஞ்சியுள்ளார். அதற்கு எங்களிடம் பணம் கேட்டதால் நீ எங்களை மறக்கக் கூடாது என்று கூறியபடி லட்சுமியிடமிருந்த ஒரு லட்சம் ரூபாய் மற்றும் நகைகளைப் பறித்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த லட்சுமி, `திருடன் திருடன்' என்று சத்தம்போட்டுள்ளார். இதையடுத்து 4 பேரும் வீட்டிலிருந்து தப்பிவிட்டனர்.

rayala nagar police station
rayala nagar police station

லட்சுமி குறித்து விசாரித்தபோது அவர், பாலியல் தொழில் செய்து வந்த தகவல் தெரியவந்துள்ளது. அவரின் வீட்டுக்கு வந்த 4 பேர், லட்சுமியிடமிருந்து பணம், நகைகளைப் பறித்துச் சென்றதால் லட்சுமியின் உண்மை முகம் எங்களுக்குத் தெரியவந்தது. இதனால்தான் லட்சுமி வீட்டை பூட்டிவிட்டு தலைமறைவாகிவிட்டார். விரைவில் லட்சுமியிடமிருந்து நகை, பணத்தைக் கொள்ளையடித்தவர்களையும் லட்சுமியிடமும் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும்" என்றனர்.

திருடனுக்கு தேள்கொட்டியதுபோல திருடன் விவகாரத்தால், பாலியல் தொழில் செய்த லட்சுமி என்ற பெண் குறித்த விவரங்கள் தெரியவந்துள்ளன.