Published:Updated:

பத்து ரூபாய் ஹவாலா... சிக்கிய தொழிலதிபர்; 600 கோடி ரூபாய் ஜி.எஸ்.டி வரி ஏய்ப்பு பின்னணி!

ஜி.எஸ்.டி
ஜி.எஸ்.டி

ஜி.எஸ்.டி வரி ஏய்ப்பு புகாரில் சிக்கிய சிவகாசி பட்டாசு ஆலைத் தொழிலதிபர் ஒருவரை அதிரடியாகக் கைதுசெய்திருக்கிறது ஜி.எஸ்.டி புலனாய்வுப் பிரிவு.

ஜூலை 1, 2017-ல் ஜி.எஸ்.டி வரி அமல்படுத்தப்பட்டதிலிருந்து, அதிலிருந்து தப்பிப்பதற்கு விதவிதமான வழிகளைச் சிலர் கையாள்வதும், அவர்களை ஜி.எஸ்.டி புலனாய்வுப் பிரிவினர் வளைத்துப் பிடிப்பதும் வாடிக்கையாகிவிட்டது. அந்தவகையில், பிப்ரவரி 16-ம் தேதி மதுரையிலும் சிவகாசியிலும் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில், பல கோடி ரூபாய் வரி ஏய்ப்பு நடைபெற்றிருப்பது வெளிச்சத்துக்கு வந்தது. குறிப்பாக, பத்து ரூபாய் நோட்டுகளைப் பயன்படுத்தி ஹவாலா முறையில் பணப் பறிமாற்றம் செய்திருப்பதும், பட்டாசு ஆலைத் தொழிலதிபர்கள் சிலர் இதை வாடிக்கையாகவைத்திருப்பதும் புலனாய்வுப் பிரிவின் விசாரணையில் தெரியவந்திருக்கிறது. கோவை மண்டலத்துக்குள் வரும் மதுரை பிராந்திய ஜி.எஸ்.டி புலனாய்வுப் பிரிவினர் இந்தச் சோதனைகளை நடத்தியிருக்கிறார்கள்.

ஜி.எஸ்.டி புலனாய்வுப் பிரிவு
ஜி.எஸ்.டி புலனாய்வுப் பிரிவு

எப்படி நடக்கிறது வரி ஏய்ப்பு?

இந்த அதிரடி சோதனை குறித்து ஜி.எஸ்.டி புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் சிலரிடம் பேசினோம்.``ஜி.எஸ்.டி வரிவிதிப்பிலிருந்து தப்பிப்பதற்காக சிவகாசியைச் சேர்ந்த ஒரு பட்டாசு ஆலை, தங்கள் பில் தொகையைக் குறைத்து மதிப்பிட்டு காட்டியிருப்பதாக எங்களுக்குத் தகவல் வந்தது. உதாரணமாக, ஒரு பண்டல் லட்சுமி வெடிக்கட்டு 250 ரூபாய் என்று வைத்துக்கொள்வோம். அதை 100 ரூபாயாக பில் எழுதி, அதற்கேற்ப ஜி.எஸ்.டி வரி செலுத்தி ஏமாற்றியிருக்கிரார்கள். மீதமிருக்கும் 150 ரூபாயை வசூலிக்க ஹவாலா முறையைப் பயன்படுத்தியிருக்கிறார்கள்.

`தரக்கட்டுப்பாட்டுத்துறை டு வருமானவரித்துறை..!'- கொசுவலை நிறுவனம் மூலம் செந்தில் பாலாஜிக்கு செக்?

நிறுவன தரப்பிலிருந்து பட்டாசு வாங்குபவர்களிடம் பத்து ரூபாய் நோட்டைக் கொடுத்து, இடைத்தரகர் ஒருவரை தொடர்புகொள்ளச் சொல்லுவார்கள். அந்த இடைத்தரகரிடம்தான் மீதிப்பணம் 150 ருபாயை, பட்டாசு வாங்கிய பார்ட்டிகள் கொடுக்க வேண்டும். பணம் கொடுப்பதற்கு முன்பாக, அவர்கள் கொண்டுவந்திருக்கும் பத்து ரூபாய் நோட்டிலுள்ள சீரியல் எண்ணை இடைத்தரகர் சரிபார்த்துக்கொள்வார். பணம் வாங்கியவுடன், ராஜஸ்தானிலுள்ள ஓர் இடைத்தரகருக்கு, தமிழக இடைத்தரகர் `பணம் வந்துடுச்சு. பொட்டலத்தைக் கொடுத்துடு’ என்று மெசேஜ் அனுப்பிவிடுவார்.

பட்டாசு ஆலைத் தொழில்
பட்டாசு ஆலைத் தொழில்

பத்து ரூபாய் ஹவாலா!

ராஜஸ்தானில் பட்டாசு ஆலைத் தரப்பிலிருந்து ஒருவர் அங்குள்ள இடைத்தரகரை பத்து ரூபாய் நோட்டுடன் அணுகுவார்கள். அங்கும் அந்த சீரியல் எண் செக்கிங் முடிந்தவுடன், ஆலைத் தரப்புக்கு பணம் கைமாறும். இப்படிக் கைமாறும் பணத்தை மீண்டும் அதே பத்து ரூபாய் நோட்டு ஹவாலா பாணியில் தமிழகத்துக்கு கொண்டு வருவார்கள். பணம் ஒரு சுற்று சுற்றித்தான் தமிழகத்துக்கு வந்து சேரும். இப்படி ஆண்டுதோறும் கோடிக்கணக்கான பணம் நூதனமுறையில் கைமாறியிருப்பது தெரியவந்ததும் ஆச்சர்யமாக இருந்தது.

வருமானவரித்துறை அதிகாரிபோல் வேடமிட்டு கொள்ளை...சிக்கிய முன்னாள் தலைமைக் காவலர்! #TamilnaduCrimeDiary

பிப்ரவரி 16-ம் தேதி சம்பந்தப்பட்ட சிவகாசி பட்டாசு ஆலைக்குத் தொடர்புடைய இடங்களில் அதிரடி சோதனை நடத்தினோம். அவர்களுக்கு மதுரையில் ஹவாலா ஏஜென்ட்டுகளாகச் செயல்பட்டவர்கள் மீதும் சோதனை நடத்தப்பட்டது. எங்கள் விசாரணையில், அந்தப் பட்டாசு ஆலை ஜூலை 2017 முதல் அக்டோபர் 2020 முடிய மட்டுமே 20 கோடி ரூபாய் ஜி.எஸ்.டி வரி ஏய்ப்பு செய்திருக்கிறது. ஏப்ரல் 2016 முதல் ஜூன் 2017 வரை 2.52 கோடி ரூபாய் அளவுக்கு கலால் வரி ஏய்ப்பு செய்திருப்பதும் எங்கள் விசாரணையில் தெரியவந்திருக்கிறது. அந்தப் பட்டாசு ஆலையின் பார்ட்னரான தொழிலதிபர் ஒருவரை கைதுசெய்து சிறையில் அடைத்திருக்கிறோம்.

எங்கள் சோதனையில் சிக்கிய தொகை சொற்பமானதுதான். இதுபோல பல பட்டாசு ஆலைகள் ஆண்டுதோறும் சுமார் 600 கோடி ரூபாய்க்கு வரி ஏய்ப்பு செய்திருப்பது எங்கள் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்திருக்கிறது. இனிமேல் எங்கள் அதிரடி தொடரும்” என்றார்.

ஜி.எஸ்.டி
ஜி.எஸ்.டி

ஜி.எஸ்.டி வரி ஏய்ப்பு புகாரில் சிக்குபவர்களுக்கு ஐந்து முதல் ஏழு ஆண்டுகள் சிறைத் தண்டனையுடன் அபராதம் விதிக்கவும் ஜி.எஸ்.டி சட்டம் வழிவகை செய்திருக்கிறது. சட்டம் கடுமையாக இருந்தும், குற்றம் தொடர்வதாகக் கூறுகிறார்கள் அதிகாரிகள். தற்போது கைதுசெய்யப்பட்டிருக்கும் சிவகாசி பட்டாசு ஆலைத் தொழிலதிபர், தன்னுடன் கூட்டாகச் செயல்பட்டவர்கள், இதுபோல வரி ஏய்ப்பு செய்யும் பிற நிறுவனங்களைப் பற்றிய தகவல்களை புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளிடம் பகிர்ந்திருக்கிறாராம். இதில், புகழ்பெற்ற பட்டாசு நிறுவனங்களும் அடக்கமாம். விரைவில், ஜி.எஸ்.டி புலனாய்வுப் பிரிவினரின் சோதனை சிவகாசியில் பட்டாசு கிளப்பும் என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.

அடுத்த கட்டுரைக்கு