வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில், மணல் மாஃபியாக்களின் அட்டகாசம் நாளுக்குநாள் அதிகரித்துவருகிறது. வருவாய்த் துறை மற்றும் காவல் துறையினருக்கு மாமூல் கொடுத்து மணலை லோடு லோடாக அள்ளிச்செல்வதாகக் கடுகடுக்கிறார்கள் பொதுமக்கள். குறிப்பாக, குடிநீர் மற்றும் விவசாயப் பாசனத் தேவையைப் பூர்த்தியாக்கும் கௌண்டன்ய மகாநதி ஆற்றுப் படுகையில் 24 மணி நேரமும் மணல் கொள்ளை நடக்கிறது. 50 அடி ஆழத்துக்கும் அதிகமாக மணல் அள்ளப்பட்டுவருவதால், நீர்வளம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது என்று விவசாயிகளிடையே கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது.

மீனூர் சுண்ணாம்பு கெட்டை பகுதியில் உள்ள கௌண்டன்ய மகாநதியில்தான் மணல் கொள்ளையர்களின் அட்டகாசம் அதிகமாக இருக்கிறது. இரவு பகல் பாராமல் மாட்டு வண்டி, டிராக்டர், லாரிகளில் மணலை அள்ளிச்செல்கிறார்கள். ``மணல் மாஃபியாக்களிடம் மாதந்தோறும் மாமூல் வாங்குவதால் காவல் துறையினர் கண்டுகொள்வதில்லை. புகார் கூறும் நபர்களின் செல்போன் எண்ணையும், வீட்டு முகவரியையும் போலீஸார் மணல் மாஃபியாக்களிடம் போட்டுக்கொடுத்து விடுகிறார்கள். கொள்ளையர்கள் வீடு தேடிச் சென்று புகார்தாரர்களை மிரட்டுகிறார்கள். இதனால், உயிருக்கு ஆபத்து ஏற்படுகிறது’’ என்று அச்சம் தெரிவிக்கிறார்கள் ஊர் பொதுமக்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
கடந்த ஆண்டு மணல் கடத்தலைத் தடுக்க முயன்ற அக்ராவரம் கிராம மக்களை, மணல் கொள்ளையர்கள் திரண்டு சென்று வீடு புகுந்து கொலை மிரட்டல் விடுத்தனர். இதனால் அச்சமடைந்த கிராம மக்கள், ஆற்றில் இறங்கிப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதேபோன்ற அச்சுறுத்தலுக்கு ஆளாகியிருக்கிறார்கள் மீனூர் சுண்ணாம்பு கெட்டை மக்கள். நம்மிடம் பேசிய கிராம மக்கள், ``மணல் கடத்தலால் கௌண்டன்ய மகாநதியில் ராட்சதப் பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. ஆற்றில் தண்ணீர் வரும்போது, அந்தப் பள்ளங்களிலேயே தண்ணீர் நிரம்பி நின்றுவிடுகிறது. கடைமடைப் பகுதிவரை தண்ணீர் செல்வதில்லை.

தண்ணீர் பாயும் நேரத்தில் ஆற்றைக் கடக்க நேரிட்டால், ராட்சத பள்ளங்களில் தவறிவிழுந்து உயிரிழப்பு ஏற்படுவதற்கும் வாய்ப்பிருக்கிறது. புகாரளித்தாலும் பிரயோஜனம் இல்லை. போலீஸ்காரர்கள், எங்களைத்தான் மிரட்டுகிறார்கள். நிலத்தடி நீர்மட்டம் வெகுவாகக் குறைந்து, குடிநீர்ப் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. விவசாயத்தைக் கைவிடும் அவலநிலையில் இருக்கிறோம். மணல் கடத்தலைத் தடுத்து, கௌண்டன்ய ஆற்றை மீட்க வருவாய்த் துறை மற்றும் காவல் துறை உயரதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர் குமுறலாக.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இதுகுறித்து குடியாத்தம் தாலுகா காவல் நிலைய இன்ஸ்பெக்டர் கவிதாவிடம் பேசினோம். ``மீனூர் சுண்ணாம்பு கெட்டைப் பகுதியில் மணல் கடத்தலைத் தடுத்துவிட்டோம். கடந்த மூன்று நாள்களாக அந்தப் பகுதியில் தீவிரமாகக் கண்காணித்து வருகிறோம். இது சம்பந்தமாக மாவட்ட எஸ்.பி-யிடம் விளக்கமளித்துள்ளேன். ஏற்கெனவே, மணல் கடத்தலில் ஈடுபட்ட இரண்டு நபர்களைக் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்துள்ளேன். அந்த ஊரில் ஏதோ பிரச்னை இருக்கிறது. ஆனால், அவர்கள் இதுவரை எங்களிடம் மணல் கடத்தல் தொடர்பாக மனு அளிக்கவில்லை. இனி வருங்காலங்களிலும் மணல் கடத்தல் நடைபெறாமல் தடுக்கப்படும்’’ என்றார் உறுதியாக.