Published:Updated:

`சொத்துத் தகராறு...வாக்குவாதம்!’ - குடியாத்தம் விவசாயியால் தாய், தங்கைக்கு நேர்ந்த கொடூரம்

குடியாத்தம்
குடியாத்தம்

குடியாத்தம் அருகே சொத்துத் தகராறில் தாய், தங்கையைத் துடிக்கத் துடிக்க அடித்துக்கொன்ற விவசாயி போலீஸில் சரணடைந்தார்.

வேலூர் மாவட்டம், குடியாத்தத்தை அடுத்த பரதராமி பூஜாரிவலசை வாத்தியார்பட்டியைச் சேர்ந்தவர் மாணிக்கம், சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இவரது மனைவி இந்திராணி (65). இவர்களுக்கு முனிராஜ் (45) என்ற ஒரு மகனும் சின்னம்மாள் (35), சூரியகலா (30) என்ற இரண்டு மகள்களும் இருந்தனர். இந்தக் குடும்பத்திற்குச் சொந்தமாக 6 ஏக்கர் நிலம் உள்ளது. அதில் ஒரு பக்கம் குடிசை அமைத்து தன் மனைவி, மகன்களுடன் முனிராஜ் விவசாயம் செய்துவந்தார்.

சின்னம்மாளின் சடலம்
சின்னம்மாளின் சடலம்

மற்றொரு பக்கம் அவரின் தாயும் இரண்டு தங்கைகளும் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளனர். இவர்களில் சின்னம்மா மட்டும் திருமணம் செய்துகொள்ளவில்லை. இந்த நிலையில், 6 ஏக்கர் நிலத்தைப் பாகப்பிரிவினை செய்வது தொடர்பாக முனிராஜிக்கும் அவரின் இரண்டு தங்கைகளுக்கும் தகராறு இருந்துவந்ததாகக் கூறப்படுகிறது. மகள்களுக்கு ஆதரவாக தாய் பேசியிருக்கிறார். இதனால், தாய் மீதும் முனிராஜ் ஆத்திரத்தில் இருந்துள்ளார்.

இன்று காலை வயலில் பயிர்களுக்குத் தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்த முனிராஜிடம் அவரின் தாய் இந்திராணி, தங்கை சின்னம்மாள் இருவரும் வாக்குவாதம் செய்துள்ளனர். ஏற்கெனவே ஆத்திரத்தில் இருந்த முனிராஜ் கட்டை மற்றும் கற்களால் தாய் தங்கையைக் கடுமையாகத் தாக்கியுள்ளார். அவர்களின் அலறல் சத்தம் கேட்டு பக்கத்து நிலத்தில் இருந்த விவசாயிகள் ஓடி வந்து பார்த்தனர். அப்போது, தாயும் மகளும் ரத்த வெள்ளத்தில் கிடந்தனர்.

இந்திராணியின் சடலம்
இந்திராணியின் சடலம்

அவர்களைக் கயிற்றுக் கட்டிலில் தூக்கி வைத்து ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள மெயின் ரோடு பகுதிக்குச் சென்றனர். சின்னம்மாள் சிறிது நேரத்தில் உயிரிழந்தார். ஆபத்தான நிலையில் இருந்த தாய் இந்திராணியும் 108 ஆம்புலன்ஸில் ஏற்றியபோது உயிரிழந்தார். இரட்டைக் கொலை செய்த முனிராஜ் பரதராமி காவல் நிலையத்துக்குச் சென்று சரணடைந்தார். அதையடுத்து, போலீஸார் சம்பவ இடத்திற்குச் சென்று இரண்டு சடலங்களையும் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காகக் குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்தச் சம்பவம், குடியாத்தம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு