Published:Updated:

``போஸ்டர் ஒட்டணும், 30 ஆயிரமாவது கொடுய்யா...!" - அமைச்சர் ஜெயக்குமார் குரலில் மிமிக்ரி மோசடி

அமைச்சர் ஜெயக்குமார் #TamilnaduCrimeDiary

அமைச்சர் ஜெயக்குமார் குரலில் மிமிக்ரி செய்து பணமோசடியில் ஈடுபட்ட நபரை கிண்டி போலீஸார் கைது செய்துள்ளனர். #TamilnaduCrimeDiary

``போஸ்டர் ஒட்டணும், 30 ஆயிரமாவது கொடுய்யா...!" - அமைச்சர் ஜெயக்குமார் குரலில் மிமிக்ரி மோசடி

அமைச்சர் ஜெயக்குமார் குரலில் மிமிக்ரி செய்து பணமோசடியில் ஈடுபட்ட நபரை கிண்டி போலீஸார் கைது செய்துள்ளனர். #TamilnaduCrimeDiary

Published:Updated:
அமைச்சர் ஜெயக்குமார் #TamilnaduCrimeDiary

சென்னை கிண்டியைச் சேர்ந்தவர் துரைசாமி. கிண்டி தொழிற்பேட்டையில் தனியார் நிறுவனம் ஒன்றில் நிர்வாக இயக்குநராகப் பணிபுரிந்து வருகிறார். கடந்த மார்ச் 3-ம் தேதி, அவருக்கு போனில் அழைப்பு வந்துள்ளது. போனில் பேசிய அந்நபர், தன்னை அமைச்சர் ஜெயக்குமார் எனக் கரகரத்த குரலில் அறிமுகப்படுத்திக்கொண்டவுடன் துரைசாமி பவ்யமாகிவிட்டார். ``அம்மா பிறந்தநாளுக்காக நிறைய நலத்திட்டங்களுக்கு ஏற்பாடு செய்திருக்கோம். இதுக்காக சென்னை முழுவதும் போஸ்டர் ஒட்டணும். நீங்க பெரிய கம்பெனி வைச்சிருக்கீங்க. செலவுக்கு 85 ஆயிரம் ரூபாய் தாங்க" என்று கூறியுள்ளார்.

போன் அழைப்பு
போன் அழைப்பு

அவ்வளவு பெரிய தொகையைத் தன்னால் கொடுக்க முடியாது என்று துரைசாமி மறுத்துவிடவே, பேரம் குறைக்கப்பட்டு கொண்டே வந்துள்ளது. இறுதியாக, ``30 ஆயிரமாவது கொடுய்யா, போஸ்டர் ஒட்ட ரொம்பப் பண நெருக்கடியா இருக்கு" என்று அமைச்சர் ஜெயக்குமார் குரலில் அந்நபர் கூறியுள்ளார்.

இந்த டீலுக்கு துரைசாமி உடன்பட்டவுடன், ``என் அக்கவுன்ட் நம்பரை அனுப்புறேன், அதுல 30 ஆயிரம் பணத்தைப் போட்டுடுங்க" என்று எதிர்பார்ட்டி அவசரப்படுத்தியுள்ளது. தன்னுடன் பேசியது அமைச்சர் ஜெயக்குமார் தானா என்பதைப் பரிசோதிக்க, அந்நபர் பேசிய மொபைல் நம்பரை `ட்ரூ காலர்' ஆப்பில் துரைசாமி போட்டபோது, ஜெயக்குமார் என்றே வந்துள்ளது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இதற்கிடையே பணம் கேட்ட பார்ட்டி அக்கவுன்ட் நம்பரை அனுப்பியுள்ளது. அந்த வங்கிக் கணக்கு முகமது ரபீக் என்பவரது பெயரில் இருப்பதைப் பார்த்தவுடன் சந்தேகமடைந்த துரைசாமி, நேராக அமைச்சரின் அலுவலகத்திற்கே சென்று விசாரித்துள்ளார். தாங்கள் அப்படி யாரையும் அனுப்பவில்லை, என அமைச்சர் அலுவலகம் மறுத்துவிட, கிண்டி போலீஸில் துரைசாமி புகாரளித்துள்ளார்.

கிண்டி காவல் நிலையம்
கிண்டி காவல் நிலையம்

துரைசாமியிடம் அந்நபர் தொடர்பு கொண்ட தொலைப்பேசி எண், அனுப்பிய வங்கிக் கணக்கு விவரங்களைக்கொண்டு விசாரணையில் குதித்த சப் இன்ஸ்பெக்டர் சரபோஜி ராவ் தலைமையிலான போலீஸார், தண்டையார்பேட்டையைச் சேர்ந்த முகமது ரபீக் என்பவரை கொத்தாக அள்ளிக் கொண்டுவந்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஒவ்வொரு மாவட்டத்திலும் பிரபலமான அமைச்சர்களின் பெயரைச் சொல்லி, அவர்களைப் போல மிமிக்ரி செய்து சிறு தொழிலதிபர்கள், வியாபாரிகளிடம் பணம் பறிப்பதை முகமது ரபீக் வழக்கமாகக் கொண்டுள்ளார். இவர் மீது கோயம்புத்தூர் மாவட்டம் காட்டூர் காவல்நிலையம் உட்பட, தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் 15 வழக்குகள் நிலுவையில் இருப்பதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இவரது பேச்சை உண்மையென நம்பி யாரெல்லாம் பணம் கொடுத்து ஏமாந்தார்கள் என்கிற விசாரணையையும் போலீஸ் முடுக்கிவிட்டுள்ளது.

அமைச்சர் ஜெயக்குமார்
அமைச்சர் ஜெயக்குமார்

பாட்டுப் பாடுவதில் வல்லவரான அமைச்சர் ஜெயக்குமார், வாய்ப்பு கிடைக்கும் பொழுதெல்லாம் தனது காந்தக் குரலில் எம்.ஜி.ஆர் பாடல்களைப் பாடி அசத்துவார். அவரது குரலிலேயே மிமிக்ரி செய்து, ஒருவர் பண மோசடியில் ஈடுபட்டிருப்பது சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism