Published:Updated:

டிக்டாக் வீடியோ பதிவிட்ட காவலரை சஸ்பெண்ட் செய்த அதிகாரிக்கு நடந்த ட்விஸ்ட்!

கலிலுல்லா.ச

பணிநேரத்தில் டிக்டாக் வீடியோ எடுத்ததால் காவலர் ஒருவர் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார். அவரை சஸ்பெண்டு செய்த அதிகாரியே டிக்டாக் செய்துள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மஞ்சிதா
மஞ்சிதா

குஜராத் மாநிலம் மெகசானா மாவட்டத்தில் உள்ள லங்னாஜ் காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிபவர் அல்பிதா சவுத்ரி. இவர் பணியில் இருக்கும்போது, காவல் நிலையத்துக்குள் லாக்அப் அருகே மாற்று உடையில் நின்றுகொண்டு இந்திப் பாடல் ஒன்றுக்கு நடனம் ஆடியுள்ளார். இந்த வீடியோவை டிக்டாக் செயலியில் போடவே, அது வைரலானது. காவல்நிலையத்தில் பணியில் இருக்கும்போது, இப்படி வீடியோ எடுக்கலாமா? என்று கண்டனங்கள் எழவே அவரை டி.எஸ்.பி மஞ்சிதா பணியிடை நீக்கம் செய்தார்.

சஸ்பெண்டு செய்யப்பட்ட காவலர்
சஸ்பெண்டு செய்யப்பட்ட காவலர்

இது தொடர்பாக விசாரணை நடத்தவும் உத்தரவிடப்பட்டது. இது தொடர்பாக பேசிய மஞ்சிதா,``அவர் வீடியோ எடுத்ததற்காக சஸ்பெண்டு செய்யப்படவில்லை; மாறாக பணி நேரத்தில் மாற்று உடையில் இருந்தார்” என்று கூறினார்.

இந்த நிலையில், மஞ்சிதாவும் இதேபோல பணிநேரத்தில் மாற்று உடையில் இருந்தவாறு காவல்நிலையத்தில் வைத்து பஞ்சாபி பாடலுக்கு நடனமாடும் வீடியோ ஒன்றை டிக்டாக்கில் பதிவிட்டுள்ளார். இது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

டிஎஸ்பி மஞ்சிதா
டிஎஸ்பி மஞ்சிதா

இது தொடர்பாக விளக்கமளித்துள்ள மஞ்சிதா,``இந்த வீடியோ இரண்டு மாதங்களுக்கு முன்பு எடுக்கப்பட்ட வீடியோ. நான் எந்த தவற்றையும் செய்யவில்லை. நான் அந்த வீடியோவை பதிவிடவில்லை. குச்சுப்பிடி, சமையல் உள்ளிட்ட பல விஷயங்களில் எனக்கு ஆர்வம் அதிகம். பணியில் இல்லாத நேரத்தில் இதில் எதுவேண்டுமானாலும் நான் செய்வேன். என்னுடைய தனிப்பட்ட சுதந்தரத்தில் தலையிட எவருக்கும் உரிமையில்லை” என்று கூறியுள்ளார்.