Published:Updated:

பாகிஸ்தானிலிருந்து கடத்திவரப்பட்ட 530 கிலோ போதைப்பொருள்; பிடிபட்ட தலைமறைவு குற்றவாளி!

கைதான சாஹித்
கைதான சாஹித்

பாகிஸ்தானிலிருந்து கடல்வழியாக ரூ.2,500 கோடி மதிப்புள்ள போதைப்பொருள்களைக் கடத்திய நபரை டெல்லியில் குஜராத் தீவிரவாத தடுப்பு படையினர் கைதுசெய்தனர்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

குஜராத் மாநிலம், கட்ச் பகுதியைச் சேர்ந்த சாஹித் கசம் சும்ரா என்ற நபர் பாகிஸ்தானிலிருந்து போதைப்பொருள்களை கடத்திக் கொண்டு வந்து விற்பனை செய்து, அதில் கிடைக்கும் நிதியை தீவிரவாதச் செயல்களுக்கு செலவு செய்துவந்திருக்கிறார். 2018-ம் ஆண்டிலிருந்து குஜராத் மற்றும் பஞ்சாப்பில் போலீஸார் ரெய்டு நடத்தி 530 கிலோ ஹெராயின் போதைப்பொருள்களைப் பறிமுதல் செய்தனர். அவற்றின் சர்வதேச மதிப்பு ரூ.2,500 கோடி. இது தொடர்பாக சாஹித் மீது நான்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளண.

கைதான சாஹித்
கைதான சாஹித்

மூன்று வழக்குகளை தேசியப் புலனாய்வு விசாரணை ஏஜென்சி தன் வசம் எடுத்துக்கொண்டிருக்கிறது. ஒரு வழக்கை மட்டும் குஜராத் தீவிரவாத தடுப்புப் படையினர் விசாரித்துவந்தனர். இந்த வழக்குகள் தொடர்பாக சாஹித்தை போலீஸார் தொடர்ந்து தேடிவந்தனர். சமீபத்தில்தான் சாஹித் போதைப்பொருள் மூலம் கிடைக்கும் பணத்தைத் தீவிரவாதச் செயல்களுக்கு ஈடுபடுத்துவதை குஜராத் தீவிரவாத தடுப்பு படையினர் கண்டுபிடித்தனர். சாஹித் வளைகுடா நாடுகள் மற்றும் ஆப்பிரிக்காவில் மறைந்து வாழ்ந்துவந்திருக்கிறார். குறிப்பாக 2018-ம் ஆண்டு குஜராத்தில் பாகிஸ்தானிலிருந்து வந்த 5 கிலோ போதைப்பொருள் பிடிபட்டபோதுதான் சாஹித் பெயர் இதில் அடிபட்டது. அதிலிருந்தே சாஹித் தலைமறைவாகவே இருந்திருக்கிறார். குஜராத் போலீஸார் மேற்கொண்டு விசாரணை நடத்தியதில் சாஹித்தும் அவருடைய கூட்டாளிகளும் சேர்ந்து பாகிஸ்தானிலிருந்து 500 கிலோ போதைப்பொருள்களைக் கடத்திக்கொண்டு வந்து குஜராத்திலுள்ள மாண்ட்வி கடற்கரைப் பகுதியில் இறக்கியது கண்டுபிடிக்கப்பட்டது.

கைது
கைது

குஜராத்தில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து பாகிஸ்தானிலிருந்து லாரி மூலம் பஞ்சாப்புக்கு போதைப்பொருள்களை கடத்த ஆரம்பித்தனர். பாகிஸ்தானிலிருந்து லாரி மூலம் பஞ்சாப்புக்கு 300 கிலோ போதைப்பொருள்களை சாஹித்தும் அவருடைய கூட்டாளிகளும் கொண்டு வந்து சப்ளை செய்தனர். இதில் தொடர்புடைய சிம்ரன்ஜித் சிங் சமீபத்தில் இத்தாலியில் இன்டர்போல் போலீஸாரால் கைதுசெய்யப்பட்டார். மேலும் 200 கிலோ ஹெரானியினை அமிர்தசரஸில் வசிக்கும் சிம்ரன்ஜித் சிங் கூட்டாளிக்கு சாஹித்தும், அவர் கூட்டாளிகளும் அனுப்பிவைத்தனர். இவற்றில் 188 கிலோ மற்றும் 5 கிலோ என இரண்டு முறை பிடிபட்டது. கடந்த ஏப்ரல் மாதம் குஜராத் கடற்கரைப்பகுதியில் பாகிஸ்தானிலிருந்து 150 கிலோ போதைப்பொருட்களை கொண்டு வந்த 8 பாகிஸ்தானியர்கள் நடுக்கடலில் கைதுசெய்யப்பட்டனர். அவர்களிடம் விசாரித்தபோது அந்த போதைப்பொருள்களையும் சாஹித்தான் கடத்திக் கொண்டு வந்தது தெரியவந்தது. இந்தநிலையில் டெல்லி விமான நிலையத்தில் சாஹித் வந்து இறங்கப்போவதாக குஜராத் தீவிரவாத தடுப்புப் படையினருக்கு தகவல் கிடைத்தது. எதிர்பார்த்தபடி சாஹித் டெல்லி விமான நிலையத்தில் வந்து இறங்கியவுடன் குஜராத் தீவிரவாத தடுப்புப் படையினர் கைதுசெய்தனர். அவரை குஜராத்துக்குக் கொண்டு சென்று விசாரணை நடத்திவருகின்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு