Published:Updated:

ஆந்திராவிலிருந்து பயங்கர ஆயுதங்களுடன் கஞ்சா கடத்திய நபர்கள்! - மடக்கிப் பிடித்த போலீஸார்

ஆந்திராவிலிருந்து நாட்டுத் துப்பாக்கி மற்றும் பட்டாக்கத்தியுடன் கஞ்சா பொட்டலங்களைக் கடத்தி வந்த 3 பேரை போலீஸார் வாகன சோதனையின் போது கைது செய்தனர். 

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி, ஆந்திர - தமிழக எல்லைப் பகுதி என்பதால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் கஞ்சா உள்ளிட்ட போதை வஸ்துக்கள் ஆந்திரா வழியாக வெளிமாநிலங்களிலிருந்து கடத்தி வரப்பட்டு, பின்னர் கும்மிடிப்பூண்டி வழியாகச் சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு விநியோகிக்கப்பட்டு வருகிறது. இந்த கடத்தல்களைத் தடுக்கும் விதமாக கும்மிடிப்பூண்டி போலீஸார் இரவு பகலாக எல்லையோர பகுதிகளில் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

கஞ்சா
கஞ்சா
representational image

அந்த வகையில், நேற்றைய தினம் கும்மிடிப்பூண்டியை அடுத்த பெத்திகுப்பம் பகுதியில் உள்ள சென்னை - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, ஆந்திராவிலிருந்து இருசக்கர வாகனத்தில் கும்மிடிப்பூண்டி நோக்கி வந்த 3 பேர், தூரத்தில் போலீஸாரை கண்டதும் வாகனத்தை நிறுத்தி விட்டு, பின்னர் மீண்டும் வேகமாக அவர்களை நோக்கி வந்தனர். சந்தேகத்திற்கு இடமான வகையில் ஒரே இருசக்கர வாகனத்தில் வந்த மூவரை சிப்காட் போலீஸார் மடக்கிப் பிடித்து விசாரித்தனர்.

தடைசெய்யப்பட்டும் கஞ்சா சர்வ சாதாரணமாகப் புழங்குவது எப்படி? பின்னணி இதுதான்! - நான் அடிமை இல்லை 11

அப்போது, முன்னுக்குப் பின் முரணாகப் பதிலளித்த நபர்கள், இருசக்கர வாகனத்தில் துணியால் மறைக்கப்பட்ட நீளமான பொருள்களை வைத்திருந்துள்ளனர். போலீஸார் நடத்திய சோதனையில் அந்த நபர்கள் ஆந்திராவிலிருந்து 5 கிலோ எடை கொண்ட கஞ்சா பொட்டலங்களைக் கடத்தி வந்ததும், இருசக்கர வாகனத்தில் நாட்டு துப்பாக்கி மற்றும் பட்டாக்கத்தியை மறைத்து வைத்திருந்ததும் தெரியவந்தது. அதையடுத்து, 3 நபர்களையும் கைது செய்த போலீஸார், நாட்டுத் துப்பாக்கி, பட்டாக்கத்தி, கஞ்சா பொட்டலங்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய இருசக்கர வாகனம் ஆகியவற்றைப் பறிமுதல் செய்து, சிப்காட் காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்று வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

கும்மிடிப்பூண்டி சிப்காட் காவல்நிலையம்
கும்மிடிப்பூண்டி சிப்காட் காவல்நிலையம்

அதில், கடத்தலில் ஈடுபட்டவர்கள் பல்வேறு கொலை வழக்குகளில் தொடர்புடைய புதுகும்மிடிப்பூண்டி பகுதியைச் சேர்ந்த நடராஜ் (30), திருச்சி உறையூர் பகுதியைச் சேர்ந்த சரண்ராஜ் (21) மற்றும் ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த அருண்குமார் (40) என்பது தெரியவந்தது. கைது செய்யப்பட்டவர்களிடம் போலீஸார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இருசக்கர வாகனத்தில் நாட்டுத்துப்பாக்கி மற்றும் பட்டாக்கத்தியுடன் கஞ்சா வியாபாரிகள் வலம் வந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு