Published:Updated:

`மேட் இன் இத்தாலி; 5 தோட்டாக்கள்!’- சிக்கியது வில்சன் கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி

எஸ்.எஸ்.ஐ கொலைக்குப் பயன்படுத்திய துப்பாக்கி
எஸ்.எஸ்.ஐ கொலைக்குப் பயன்படுத்திய துப்பாக்கி

எர்ணாகுளம் பேருந்து நிலையம் அருகில் உள்ள கழிவுநீர் ஓடையில் துப்பாக்கியை வீசி எறிந்துள்ளதாக விசாரணையில் தெரிவித்தனர்.

கன்னியாகுமரி - கேரள எல்லையான களியக்காவிளை செக்போஸ்டில் பணியில் இருந்த எஸ்.எஸ்.ஐ.வில்சன் கடந்த 8-ம் இரவு துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். கொலை செய்த இரண்டுபேர் அப்பகுதியில் உள்ள மசூதி வழியாகத் தப்பி ஓடும் சி.சி.டி.வி காட்சிகள் சிக்கின. அதை வைத்து விசாரணை நடத்தியதில் கொலையில் ஈடுபட்டவர்கள் பயங்கரவாதிகளான தெளஃபிக், அப்துல் சமீம் எனத் தெரியவந்தது. கேரள போலீஸார் அவர்களின் புகைப்படங்களை வெளியிட்டனர். அவர்கள் குறித்து தகவல் கொடுப்பவர்களுக்கு 7 லட்சம் ரூபாய் பரிசுத்தொகை வழங்குவதாக அறிவிக்கப்பட்டது.

இந்தநிலையில் கர்நாடக மாநிலம் உடுப்பியில் வைத்து கடந்த 14-ம் தேதி பயங்கரவாதிகள் அப்துல் சமீம் மற்றும் தெளஃபிக் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் கடந்த 16-ம் தேதி களியக்காவிளை மற்றும் தக்கலை காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்திய போலீசார், பின்னர் குழித்துறை காவல் நிலையத்தில் ஆஜர்படுத்தினர். மேலும் பயங்கரவாதிகள் மீது உபா சட்டமும் பாய்ந்தது.

எர்ணாகுளத்தில் கைப்பற்றப்பட்ட கைத்துப்பாக்கி
எர்ணாகுளத்தில் கைப்பற்றப்பட்ட கைத்துப்பாக்கி

இதைத் தொடர்ந்து நாகர்கோவில் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட அப்துல் சமீம், தெளஃபிக் ஆகியோரை 10 நாள்கள் போலீஸ் கஸ்டடியில் விசாரணை நடத்த கோர்ட் அனுமதி அளித்தது. கடந்த 21-ம் தேதி மாலை அவர்களை போலீஸார் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில் பயங்கரவாதிகள் களியக்காவிளையில் எஸ்.எஸ்.ஐ வில்சனைக் கொலை செய்துவிட்டு பாறசாலை வரை நடந்து சென்றதாகவும் அங்கிருந்து ஆட்டோவில் திருவனந்தபுரம் சென்றதையும் ஒப்புக்கொண்டனர்.

ஆட்டோவில் பயணிக்கும்போதே கொலைக்குப் பயன்படுத்திய கத்தியை வெளியே வீசி எறிந்துள்ளனர். பின்னர் திருவனந்தபுரத்திலிருந்து பஸ்ஸில் எர்ணாகுளம் சென்றவர்கள் எர்ணாகுளம் பேருந்து நிலையம் அருகில் உள்ள கழிவுநீர் ஓடையில் துப்பாக்கியை வீசி எறிந்துள்ளதாகவும் விசாரணையில் தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து எஸ்.ஐ. மோகன அய்யர் உள்ளிட்ட போலீஸ் டீம் சாக்கடைக்குள் இறங்கி துப்பாக்கியைத் தேடிக் கண்டுபிடித்தனர்.

வில்சன் கொலையின் பின்னணி... தகர்க்கப்பட்டதா தீவிரவாதிகளின் சதித்திட்டம்?

கைப்பற்றப்பட்ட கைத்துப்பாக்கி நவீன 7.65 எம்.எம் ரகத்தைச் சேர்ந்தது என்றும், அதில் ஒரே சமயத்தில் பத்து தோட்டாக்களை நிரப்பலாம் எனவும் போலீஸார் தெரிவித்தனர். அந்தத் துப்பாக்கியை மீட்கும் போது அதில் ஐந்து தோட்டாக்கள் பயன்படுத்தப்படாமல் இருந்துள்ளது.

மேலும் பயங்கரவாதிகள் எர்ணாகுளத்திலிருந்து ரயில் மூலம் மகாராஷ்டிரா மாநிலத்துக்குச் சென்றதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. எனவே, அவர்களை மகாராஷ்டிரா மாநிலத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்த உள்ளனர். மேலும் களியக்காவிளை கொலையில் ஈடுபட்ட பயங்கரவாதிகளுக்கு உதவியவர்களைப் பற்றிய தகவல்கள் குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கைது செய்யப்பட்ட தீவிரவாதி தெளஃபீக்
கைது செய்யப்பட்ட தீவிரவாதி தெளஃபீக்

இதுகுறித்து விசாரணை அதிகாரி டி.எஸ்.பி. கணேசன் கூறுகையில், ``கைப்பற்றப்பட்ட துப்பாக்கியில் மேட் இன் இத்தாலி எனக் குறிப்பிடப்படுள்ளது. அது ராணுவத்திற்கு மட்டும் பயன்படுத்தப்படுவது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. கைப்பற்றப்படும்போது துப்பாக்கியில் ஐந்து தோட்டாக்கள் இருந்தன. வில்சன் கொலைக்கு ஐந்து தோட்டாக்கள் பயன்படுத்தப்பட்டன. மேலும் துப்பாக்கியில் எத்தனை தோட்டாக்கள் பயன்படுத்த முடியும் என்பது குறித்து இனிதான் பரிசோதிக்க வேண்டும்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு