சேலம், சின்னக்கடை பகுதியைச் சேர்ந்தவர் முல்லாராம். இவர் சின்னக்கடை பகுதியில் மளிகைக்கடை நடத்தி வருகிறார். இவர் மகன் ஜெயராம் கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு கடையில் இருந்தபோது, 4 பேர் கொண்ட மர்ம கும்பல் கடைக்குள் புகுந்து, அவரை மிரட்டி காரில் கடத்திச் சென்றிருக்கிறது. இது குறித்து முல்லாராம் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, சம்பந்தப்பட்ட மர்ம கும்பலை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. பின்னர் போலீஸார் சம்பவ இடத்திலிருந்து கைப்பற்றப்பட்ட சிசிடிவி காட்சிகளைவைத்து விசாரணையைத் தொடங்கினர்.

சமீபத்தில் ஜெயராம் மற்றும் அவர் கூட்டாளிகளான குஹாவலராம், சுரேஷ் ஆகியோரை அம்மாபேட்டை போலீஸார் குட்கா கடத்தல் வழக்கில் கைதுசெய்திருந்தது தெரியவந்தது. அதன்மூலம் ஜெயராம் கூட்டாளிகளை தேடியபோது, அவர்கள் கடந்த 3 நாள்களாக தலைமறைவாக இருந்துவருவது தெரியவந்தது. இந்நிலையில் திடீரென ஜெயராம் போனிலிருந்து லொகேஷன் போலீஸாருக்கு கிடைக்க... சம்பந்தப்பட்ட கும்பல் பெங்களூர் நோக்கி சென்றுக்கொண்டிருப்பதை அறிந்து போலீஸார் பின்தொடர்ந்து சென்றிருக்கின்றனர். ஒருகட்டத்தில் போலீஸ் தங்களை பின் தொடர்வதை அறிந்த கும்பல், ஜெயராமை விட்டுவிட்டுத் தப்பியிருக்கிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
பின்னர் மீட்கப்பட்ட ஜெயராமிடம் போலீஸார் விசாரணை செய்ததில், கடத்திச் சென்ற கும்பல் வடமாநில கூலிப்படையைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. மேலும், அவர்களுடைய சரக்குகளை தனது கூட்டாளியான குஹாவலராம் கடத்திவிட்டதாகவும், அதனால் தன்னை மாற்றி கடத்திவிட்டதாகவும் ஜெயராம் கூறியிருக்கிறார். அதனடிப்படையில் போலீஸார் ஜெயராம் வீட்டில் சோதனை செய்தபோது, 56 கிலோ போதை புகையிலையை பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் இதற்கு உடந்தையாக இருந்த ஜெயராம் மற்றும் அவர் தந்தை முல்லாராம் இருவரும் கைதுசெய்யப்பட்டனர்.