Published:Updated:

`#metoo இயக்கத்தின் தொடக்கப்புள்ளியான வழக்கு!' -ஹாலிவுட்டின் முடிசூடா மன்னனுக்கு 23 ஆண்டுகள் சிறை

ஹார்வி
ஹார்வி ( Seth Wenig )

தண்டனை தொடர்பான வாதத்தின்போது, ஹார்வியின் வழக்கறிஞர்கள், அவருக்கு குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டாலே, அது அவருக்கு ஆயுள் தண்டனைதான் என்று குறிப்பிட்டனர்.

உலகத்தையே திரும்பிப்பார்க்கவைத்த ஹாலிவுட்டின் முடிசூடா மன்னன், தயாரிப்பாளர் `ஹார்வி வெய்ன்ஸ்டீன்' மீதான பாலியல் வழக்கு, தற்போது முடிவுக்கு வந்துள்ளது. ஹாலிவுட்டின் தயாரிப்பாளர்களில் தவிர்க்க முடியாத ஒரு ஜாம்பவான், ஹார்வி வெய்ன்ஸ்டீன். திரை உலகம் தாண்டி, அமெரிக்க அரசியலிலும் அவரது ஆதிக்கம் அதிகம். ஹாலிவுட்டின் கடவுளாகப் பார்க்கப்பட்ட ஹார்வி, 2017 முதல் சரிவை சந்திக்கத் தொடங்கினார்.

#MeToo
#MeToo

`காஸ்டிங் கவுச்' எனப்படும் திரை வாய்ப்பு கேட்கும் நடிகைகளை பாலியல் ரீதியாகச் சீண்டுவது, ஆபாசமாக நடந்துகொண்டது, வன்புணர்வு செய்தது என அவர்மீது பல்வேறு பெண்களின் குற்றச்சாட்டுகள் பாய்ந்தன. அமெரிக்கத் திரையுலகின் மிக முக்கியமான நடிகைகளான க்வேநத் பல்ட்ரோ, ஏஞ்சலினா ஜோலி போன்றோரும்கூட தங்களின் இளம் வயதில் ஹார்வி வெய்ன்ஸ்டீனின் தொல்லைக்கு ஆளாக நேர்ந்தது எனச் செய்தி பகிர்ந்தனர். இதைத் தொடர்ந்து, பல பெண்கள் தங்கள் வாழ்வில் சந்தித்த பாலியல் கொடுமைகள் பற்றி தைரியமாக வெளிப்படுத்தத் தொடங்கினர்.

80-க்கும் மேற்பட்டவர்கள் பாலியல் புகார்...  ஹாலிவுட் ஹார்வி வெய்ன்ஸ்டீன் வழக்கின் நிலை என்ன?

இவற்றைத் தொடர்ந்து #metoo என உலகம் முழுக்க பெண்கள் தங்கள் பாலியல் சிக்கலுக்கு உள்ளானதையும், அப்படி தொல்லை கொடுத்தவர் யார் என்ற தகவல்களையும் வெளியே சொல்லத் தொடங்கினர். அதிகார மையத்தில் இருந்த பலரும் இந்தப் புகார்களால் பதறினர். பாலியல் தொல்லைக்கு எதிரான, மிக முக்கிய ஆயுதமாக #metoo இயக்கம் உருவெடுத்தது. அத்தனைக்குமான தொடக்கப்புள்ளி இந்த ஹாலிவுட்டின் முன்னாள் கடவுள் ஹார்வி வெய்ன்ஸ்டீன்.

Harvey Weinstein
Harvey Weinstein
AP / Mark Lennihan

80 -க்கும் அதிகமான பெண்கள், ஹார்வி தங்களிடம் தவறாக நடக்க முயன்றதாகவோ அல்லது அவர்களைப் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியதாகவோ புகார் அளித்தனர். 2017-ல் இவர்மீது புகார்கள் எழுப்பப்பட்டாலும், 2018-ம் ஆண்டுதான் குற்றவியல் வழக்கு பதியப்பட்டது. ஆனால், தன் மீதான அத்தனை குற்றச்சாட்டுகளையும் திட்டவட்டமாக மறுத்தார் ஹார்வி. வழக்குகள் பதியப்பட, கைதானார் ஹார்வி. பின்னர், மிகப் பெரிய தொகையை பிணைத்தொகையாகச் செலுத்தி, பல்வேறு நிபந்தனைகளுடன் வெளியில் வந்தார். தொடர்ச்சியாக விசாரணை நடந்துவந்தது. சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். மனுதாரர்கள் தரப்பிலிருந்து 28 பேரும், ஹார்வி தரப்பிலிருந்து 7 பேரும் சாட்சிகளாக விசாரிக்கப்பட்டு, பிப்ரவரி மாதம் 18-ம் தேதியோடு இரு தரப்பு வாதங்களும் முடிவுக்குவந்தது. அதன் பின்னர், கடந்த மாதம் அவர் குற்றவாளி என நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டார்.

ஹாலிவுட்டை உலுக்கிய மீ டூ பாலியல் வழக்கு: நிரூபணமான ஹார்வி மீதான குற்றச்சாட்டு

இதைத் தொடர்ந்து, தண்டனைகுறித்த வாதங்கள் நடைபெற்றது. இதில், அரசு தரப்பு வாதங்களும் ஹார்வி தரப்பு வாதங்களும் நீதிமன்றத்தால் பதிவுசெய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, நேற்று தண்டனை விவரங்கள் அறிவிக்கப்படும் என 67 வயதான ஹார்வி, சக்கர நாற்காலியில் நீதிமன்றம் வந்தார். தண்டனை தொடர்பான வாதத்தின்போது ஹார்வியின் வழக்கறிஞர்கள், அவருக்கு குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டாலே, அது அவருக்கு ஆயுள் தண்டனைதான் என்று குறிப்பிட்டனர்.

Harvey Weinstein
Harvey Weinstein
AP

ஆனால் அரசு தரப்போ, தான் செய்த தவறுக்கு வருந்தாத குணத்துக்காக அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என வாதிட்டது. அதன் பின்னர், நடந்த சம்பவங்களுக்குத் தான் வருந்துவதாகத் தெரிவித்தார் ஹார்வி. மேலும், தான் குழப்பத்தில் இருப்பதாகத் தெரிவித்தார். இறுதியாக, தண்டனை விவரங்களை வாசித்த நீதிமன்றம், ஹார்வி மீதான குற்றச்சாட்டுகள் உறுதிசெய்யப்பட்டுள்ளது. அவருக்கு 23 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்படுகிறது என அறிவித்தது. அவருக்கு வழங்கப்பட்டுள்ள தண்டனை தொடர்பாக, குற்றம் சாட்டிய பெண்களில் 24 பேர் இணைந்து கருத்து தெரிவித்துள்ளனர். அதில், `இந்த சிறைத்தண்டனை, அவர் அழித்த வாழ்கைகளையோ, சீரழித்த கனவுகளையோ எந்த விதத்திலும் மீட்டுத் தரப்போவதில்லை. அவர் எப்போதுமே பாலியல் குற்றவாளி என்பதை உலகம் நினைவில்கொள்ளும்' எனக் குறிப்பிட்டுள்ளனர்.

அடுத்த கட்டுரைக்கு