Published:Updated:

ஹத்ராஸ்: கூட்டு பாலியல் வன்கொடுமை; கொலை! - 4 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது சிபிஐ

ஹத்ராஸ்
ஹத்ராஸ்

நாட்டையே கலங்க வைத்த ஹத்ராஸ் கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கின் குற்றப்பத்திரிகையை விசாரணைக்குப் பிறகு தாக்கல் செய்துள்ளது சிபிஐ!

டெல்லியில் இருந்து 200 கி.மீ தொலைவில் உள்ளது ஹத்ராஸ். கடந்த செப்டம்பர் மாதம் 14-ம் தேதி அன்று, 19 வயது பட்டியலின இளம்பெண் மாற்று சமூகத்தைச் சேர்ந்த நான்கு இளைஞர்களால் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானார். பலத்த காயங்களுடன் மீட்கப்பட்ட அவரை அலிகர் மருத்துவமனையில் அனுமதித்தனர். தொடர்ந்து, காயங்களின் தீவிரத்தால் மேல் சிகிச்சைக்காக டெல்லியில் உள்ள சப்தர்ஜங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி செப்டம்பர் 29-ம் அப்பெண் உயிரிழந்தார்.

அவரின் இறுதி வாக்குமூலத்தில் தன்னை ஹத்ராஸ் கிராமத்தை சேர்ந்த சந்தீப்(22), லவகுஷ்(19), ராம்குமார்(28), ரவி(28) ஆகியோர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்ததாக தெரிவித்துள்ளார். இதன் அடிப்படையில் உத்திரபிரதேச போலீஸார் பாலியல் வன்கொடுமை வழக்குப் பதிந்து நால்வரையும் கைது செய்தனர்.

ஹத்ராஸ் சம்பவத்தை எதிர்த்து போராட்டம்
ஹத்ராஸ் சம்பவத்தை எதிர்த்து போராட்டம்
Mahesh Kumar A

இதனிடையே, அந்த பெண் இறந்து இரண்டு நாட்களுக்குப் பிறகு, காவல் துறையினர் அவரது குடும்பத்தின் அனுமதியின்றி அவசர அவசரமாக பெண்ணின் உடலை நள்ளிரவில் தகனம் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. பின்னர், அவ்வழக்கை விசாரித்த ஏ.டி.ஜி.பி (சட்டம் மற்றும் ஒழுங்கு) பிரசாந்த் குமார், "தடையவியல் முடிவில் பாலியல் வன்கொடுமைக்கு எந்த ஆதாரமும் இல்லை" என்று கூறினார். ஆனால், அது குற்ற சம்பவம் நிகழ்ந்து 11 நாட்களுக்குப் பிறகு எடுக்கப்பட்ட மாதிரிகளின் தடயவியல் அறிக்கை என்று குற்றம்சாட்டப்பட்டது.

பிரதான குற்றவாளியான சந்தீப் சிறையில் இருந்து 'தான் குற்றமற்றவர் என்றும், தங்கள் நால்வர் மீதும் அப்பெண்ணின் குடும்பம் திட்டமிட்டு பழி சுமத்துவதாகவும்' ஒரு கடிதம் எழுதியிருந்தார். அவர் அப்பெண்ணை காதலித்ததாகவும் அவரது குடும்பத்தினர் தங்கள் உறவை எதிர்த்ததாகவும் கூறினார்.

இதை தொடர்ந்து, அக்டோபர் 11 -ம் தேதி உச்சநீதிமன்றம் இந்த வழக்கை சி.பி.ஐ இடம் ஒப்படைத்தது. அலகாபாத் உயர்நீதிமன்ற பார்வையின் கீழ் விசாரணை நடத்த உத்தரவிட்டது. சி.பி.ஐ வழக்கு பதிவு செய்து, இரண்டு நாட்களுக்குப் பிறகு விசாரணையைத் தொடங்கியது. பல கள ஆய்வுகள், அறிக்கைகள், பாலிகிராப் சோதனைகள் மற்றும் மூளை மின் அலை விவரக்குறிப்பு சோதனைகள் என்று பலகட்ட விசாரணைக்குப் பிறகு, சிபிஐ தனது 2,000 பக்க குற்றப்பத்திரிகையை நேற்று தாக்கல் செய்தது.

ஹத்ராஸ்..!
ஹத்ராஸ்..!

குற்றம் சாட்டப்பட்ட நான்கு பேரின் மீதும் இந்திய தண்டனை சட்டப் பிரிவு 302 (கொலை), பிரிவு 376 (பாலியல் வன்கொடுமை), பிரிவு 376 ஏ (தொடர்ச்சியான பாலியல் வன்முறைக்கு ஆளானதால் மரணத்தை ஏற்படுத்தியதற்கான தண்டனை) மற்றும் பிரிவு 376 டி (கும்பல் வன்கொடுமை) மற்றும் பிரிவு 3 (2) (பிரிவு) v) எஸ்சி / எஸ்டி ஆகிய சட்டங்களின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. விசாரணையை கண்காணிக்கும் அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் லக்னோ அமர்வு இந்த வழக்கை ஜனவரி 27 -ம் தேதி விசாரிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து நேற்று (18-12-2020) மாலை, காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தனது ஆதரவு அறிக்கையை வெளியிட்டார். அதில் "குற்றத்திற்கான நீதி வழங்குவதற்கான ஒரு முக்கியமான நடவடிக்கை சிபிஐ எடுத்துள்ளது. இச்செயலானது பாதிக்கப்பட்டவரின் குடும்பத்திற்கு ஆறுதல்களைத் தரும் என்று நம்புகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு